Published:Updated:

"அவர் நேரில் வாழ்த்தியதில் 10 வயசு குறைஞ்சுபோச்சு"- முதல்வரின் தாய் மாமா 100 வயது தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

1948-ல் என் தங்கை தயாளுவைத் தலைவருக்குத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள்தான் அவரை அத்தான் என்றழைத்திருக்கிறேன். அதன் பின்பு தலைவர் என்றே அழைத்தேன்.

"அவர் நேரில் வாழ்த்தியதில் 10 வயசு குறைஞ்சுபோச்சு"- முதல்வரின் தாய் மாமா 100 வயது தட்சிணாமூர்த்தி

1948-ல் என் தங்கை தயாளுவைத் தலைவருக்குத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள்தான் அவரை அத்தான் என்றழைத்திருக்கிறேன். அதன் பின்பு தலைவர் என்றே அழைத்தேன்.

Published:Updated:
தட்சிணாமூர்த்தி

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மைத்துனரும், அவரின் மனைவி தயாளு அம்மாளின் சகோதரருமான தட்சிணாமூர்த்தி, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கோயில் திருமாளம் என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இவர் இரண்டு முறை இந்த ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும், திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை வேளாண் விற்பனைக் கூடத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர். தட்சிணாமூர்த்திக்கு கடந்த நவம்பர் 13-ம் தேதி அவரின் 100-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

தாய்மாமாவான அவருக்குத் தொலைபேசி மூலமும், டிவிட்டர் மூலமும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளைப்  பார்வையிட்டு ஆய்வு செய்ய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த ஸ்டாலின், தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்குப் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து ஆசீர்வாதம் பெற்றார்.

இதுபற்றி தட்சிணாமூர்த்தியைச் சந்தித்துப் பேசினோம்.

"சுயமரியாதை குடும்பத்தில் பிறந்த எனக்கு முதல் தலைவர் பெரியார்.

 1938-ல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் கலந்துகொண்டு வேலூர் சிறையில் ஆறு மாதம் ஜெயிலில் இருந்தேன். 1948-ல் என் சொந்த ஊரான கீரனூரில் தி.க. கொடியேற்றும்போது பிராமணர்களால் தாக்கப்பட்டு, ஊரை விட்டு வெளியேறி, இந்த ஊரில் குடியேறினேன். அதன்பின் தி.மு.க. தலைவர்களான அண்ணா, கலைஞரைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டேன். 1948-ல் என் தங்கை தயாளுவைத் தலைவருக்குத் திருமணம் செய்து கொடுத்து இரண்டு ஆண்டுகள்தான் அவரை அத்தான் என்றழைத்திருக்கிறேன். அதன் பின்பு தலைவர் என்றே அழைத்தேன். தற்போது என் மருமகன் ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கிறார். அவரைத் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், பல மாநில மக்களும், தலைவர்களும் போற்றுகிறார்கள். அவர் இந்த உயரத்திற்கு எளிதாக வரவில்லை. மிசா காலத்தில் ஓராண்டுக்காலம் சித்ரவதைப்பட்டு  சிறையிலிருந்தார்.

அப்போது அவரை அடித்து உதைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது,

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

அவரின் நண்பர் சிட்டிபாபு தன் உயிரைக் கொடுத்துத் தடுத்துக் காப்பாற்றியுள்ளார். சிட்டிபாபுவின் தியாகத்தை எண்ணி என் பேரனுக்கு சிட்டிபாபு என்று பெயர் வைத்திருக்கிறேன். கட்சிக்காகக் கடுமையாக உழைத்து, படிப்படியாக மேயர், துணை முதல்வர், இன்று முதல்வர் என்ற பதவிக்கு வந்திருக்கிறார். சிறு வயது முதல் எத்தனையோ முறை எங்க வீட்டுக்கு ஸ்டாலின் வந்திருக்கிறார் என்றாலும், அவர் அமைச்சர்கள் புடைசூழ முதல்வராக, என்னைச் சந்தித்து வாழ்த்து கூறி ஆசீர்வாதம் பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன். இதற்கெல்லாம் காரணம் என் தங்கை தயாளுதான். இதனால் எனக்குப் பத்து வயது குறைந்தது போலவே உணருகிறேன். முதல்வர் நல்ல  ஆரோக்கியத்துடன், நீண்டகாலம் வாழ்ந்து, தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்" என்றார்.