கட்டுரைகள்
Published:Updated:

தமிழக காங். தலைவர் ரேஸ்... முந்துகிறாரா ஜோதிமணி?

ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிமணி

தலைவர் பதவிக்கான ரேஸில் ஜோதிமணி முன்னிலையில் இருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்புவிழாவில், கீழே அமர்ந்திருந்த ஜோதிமணியை மேடைக்கு அழைத்து, தன் அருகில் அமரவைத்தார் ராகுல் காந்தி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம், கடந்த பிப்ரவரி மாதமே முடிந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தல், பாரத் ஜோடோ யாத்திரை விஷயங்களில் காங்கிரஸ் மேலிடம் பிஸியாக இருந்ததால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், அதற்கான நேரம் நெருங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் கதர்க்கட்சிக்காரர்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி தலைவராக இருப்பவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் தொடர முடியும். அதன்படி கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது. புதிய தலைவருக்கான ரேஸில் 10-க்கும் மேற்பட்டோர் சீரியஸாக ஓடுகிறார்கள்.

தமிழக காங். தலைவர் ரேஸ்... முந்துகிறாரா ஜோதிமணி?

இதில் ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக அடிபடுகின்றன. கார்த்தி சிதம்பரத்தின் 51-வது பிறந்தநாளையொட்டி, ‘தலைமையேற்க வா' என்கிற போஸ்டர்கள் சென்னை மாநகர் முழுவதும் சமீபத்தில் ஒட்டப்பட்டன. மறுபுறம், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரியும் தனது பதவியை விட்டுத் தருவதாக இல்லை.

தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் அழகிரி கையில் எடுத்திருக்கிறார். சத்தியமூர்த்தி பவனில், கடந்த நவம்பர் 15-ம் தேதி, நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர் களுக்கும், மாநிலப் பட்டியலினப் பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல், அழகிரியின் அரசியல் காய்நகர்த்தல்தான் என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்.

இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர், ‘‘தலைவர் பதவிக்கான ரேஸில் ஜோதிமணி முன்னிலையில் இருக்கிறார். மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்புவிழாவில், கீழே அமர்ந்திருந்த ஜோதிமணியை மேடைக்கு அழைத்து, தன் அருகில் அமரவைத்தார் ராகுல் காந்தி. இது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பலரின் வயிற்றில் புகைச்சலை உருவாக்கிவிட்டது. சோனியா காந்தியிடமும் ஜோதிமணிக்கு நன்மதிப்பு இருப்பதால், அவர் பெயர் முதல் ஆளாகப் பரிசீலிக்கப்படுகிறது. அதேநேரத்தில் ஜோதிமணிக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அவர்மீது சோனியா - ராகுல் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒப்பிடும்போது கார்கேவிடம் நம்பிக்கை சற்றுக் குறைவாகவே இருக்கிறது.

அவரைத் தொடர்ந்து செல்லகுமார் ரேஸில் இரண்டாமிடத்தில் இருக்கிறார். இவருக்கும் சோனியா- ராகுல் இடத்தில் நன்மதிப்பு இருக்கிறது. அவரைப்போலவே ரூபி மனோகரனும் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார். மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோர் மூலமாக லாபி செய்து பதவியைக் கைப்பற்றத் துடித்துவருகிறார் ரூபி. அதன் எதிரொலியாகத்தான், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மூலமாக ரூபிக்குக் குடைச்சல் கொடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. இதன் விளைவாகவே கடந்த நவம்பர் 15-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் களேபரம் ஏற்பட்டு, மூன்று பேர் காயமடைந்தனர். கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர், விஜயதரணி ஆகியோருக்கு வாய்ப்பு குறைவுதான்.

தமிழக காங். தலைவர் ரேஸ்... முந்துகிறாரா ஜோதிமணி?

இந்தச் சூழலில், பதவியைத் தக்கவைத்துக்கொள்ள, தான் மிகவும் ‘ஆக்டிவ்'-ஆக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார் அழகிரி. அவ்வப்போது நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது, கருத்தரங்கம் நடத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது இந்தக் கணக்கில்தான். 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 100 காங்கிரஸ் கொடிக் கம்பங்களைநட்டு கொடி ஏற்றச் சொல்கிறார் அழகிரி. அதேவேளையில், தனது ஆதரவாளர்களை வைத்து, தலைவர் பதவிக்கு முயன்றுவருவோருக்குக் குடைச்சல் கொடுத்து வருகிறார். அவர் என்ன முயற்சி செய்தாலும், கடைசி முடிவை கட்சித் தலைமைதான் எடுக்கும்’’ என்றனர் விரிவாக.

ரேஸில் ஜோதிமணி முந்தினாலும், அவர் பதவியை பிடிக்கக் கூடாது எனக் கட்டையைப் போடுவதற்கே ஒரு டஜன் சீனியர் தலைவர்கள் சீரியஸாக முயல்கிறார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில், தலைவர் பதவிக்கான அடிதடி அரசியல் ஆரம்பமாகிவிட்டது. அலுவலகத்தின் அருகிலேயே வேட்டி, சட்டை ரெடிமேட் கடை போடுபவர்களுக்கு நல்ல வசூல்தான்!