Published:Updated:

விழுப்புரம்: ``மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்குவதென்பது பழிவாங்குவது போன்றது’’ - கே.எஸ்.அழகிரி!

கே.எஸ்.அழகிரி பேட்டி
கே.எஸ்.அழகிரி பேட்டி

`பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடிப்படையாகவைத்து இந்தியாவிலுள்ள எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. பொருளாதாரம் தெரியாத காரணத்தால்தான் இவர்கள் இந்தத் தவற்றைச் செய்திருக்கிறார்கள்' - கே.எஸ்.அழகிரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``செயற்கையான ஒரு விலையேற்றத்தை மோடி இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 100 ரூபாயைத் தாண்டி விற்கிறது பெட்ரோல். பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு விற்றால், சாதாரண கறிவேப்பிலையின் விலைகூட ஏறிவிடும். மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராக இருந்தபோது, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் விற்றது. அன்று மன்மோகன் சிங், 70 ரூபாய்க்கு பெட்ரோலை இந்தியாவில் விற்றார். ஆனால் இன்றைய நிலமையோ... உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கும் குறைவாக இருக்கிறது. அப்படியென்றால் இவர்கள் என்ன செய்ய வேண்டும்... 35 ரூபாய்க்கு பெட்ரோல், டீசலை விற்க வேண்டும். ஆனால், அப்படி விற்கவில்லை.

பெட்ரோல்
பெட்ரோல்

100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். காரணம், கலால் வரியை ஏராளமாக விதித்திருக்கிறார்கள். இந்தக் காரணத்தால்தான் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்துள்ளது. இதை அடிப்படையாகவைத்து இந்தியாவிலுள்ள எல்லாப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எனவே, ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொருளாதாரம் தெரியாத காரணத்தால்தான் இவர்கள் இந்தத் தவற்றைச் செய்திருக்கிறார்கள். அதை தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதை அடிப்படையாகக்கொண்டே தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! - 04/08/2021

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டக் கூடாது என்பதை தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. காரணம் என்னவென்றால், காவிரியாக இருந்தாலும் சரி... வேறு எந்த நதியாக இருந்தாலும் சரி... அந்தத் தண்ணீர் ஒரு மாநிலத்துக்கு மட்டுமே சொந்தமில்லை. அது கடந்து செல்லும் மாநிலங்கள் அனைத்துக்கும் சொந்தம். பல லட்சம் ஆண்டுகளாக காவிரி நீரை நாம் பயன்படுத்துகிறோம். அப்படியென்றால், நமக்கும் அதில் உரிமை உண்டு. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சரிடம் இந்தக் குறைகளை சொல்லிவந்திருக்கிறார். ஆகவே, மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதைத் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

மேக்கேதாட்டு
மேக்கேதாட்டு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நீக்குவதென்பது பழிவாங்குவது போன்றது. யாரையும் பலியாடாக ஆக்கக் கூடாது. இதற்கான பொறுப்பை மோடிதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மோடிக்கு மனசாட்சி இருந்திருந்தால், அவர்தான் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் வருத்தமாவது தெரிவித்திருக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு