Published:Updated:

தலைவர் பதவி ரேஸ்... பரபரக்கும் சத்தியமூர்த்தி பவன்!

கார்த்திக் சிதம்பரத்துக்கும் ராகுல் காந்திக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான்.

பிரீமியம் ஸ்டோரி

நீண்ட காலத்துக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்புக்கு ரேஸ் தொடங்கியிருப்பதால், அதகளமாகியிருக்கிறது கதர் வட்டாரம். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள கே.எஸ்.அழகிரியும், அரியாசனத்தைக் கைப்பற்ற சிலரும் காய்நகர்த்துவதால், சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது!

ராகுல் காந்தியுடன் செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியுடன் செல்வப்பெருந்தகை

ஒன்றுபட்ட ஆந்திராவின் காங்கிரஸ் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, டெல்லிக்குக் கட்டுப்படாத தனிப்பெரும் தலைவராக வளர்ந்ததை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. அதிலிருந்தே, மாநில அளவில் எந்தவொரு தலைவரும் தனக்கென ஒரு வாக்குவங்கியை நிலைநிறுத்திக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தலைமை தீர்மானமாக இருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு மேல் மாநில கமிட்டியின் தலைவர் பதவியில் இருப்பவர்களை மாற்றிவிடுவது காங்கிரஸின் வழக்கம். தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொறுப்புக்கு பிப்ரவரி 2, 2019-ல் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து கழற்றிவிட டெல்லி தீர்மானித்திருக்கிறதாம். அதற்குள்ளாகத் தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான ரேஸ் ஆரம்பித்துவிட்டது என்கிறது கதர் வட்டாரம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சத்தியமூர்த்தி பவனின் சீதோஷணம் பற்றி நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர், “ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார், சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் தலைவர் பதவிக்கு முட்டிமோதுகிறார்கள். சமீபத்தில் ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கும் செல்வப்பெருந்தகை, தனக்கு மாநிலத் தலைவர் பதவியைத் தருமாறு கேட்டிருக்கிறார். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர், பொதுக் கணக்குக்குழுத் தலைவர் ஆகிய பதவிகள் அவருக்கு ஏற்கெனவே கிடைத்திருப்பதால், செல்வப்பெருந்தகைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு கிடைப்பது சந்தேகம்தான். கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமாருக்கு சமீபத்தில்தான் ஆஞ்சியோ செய்யப்பட்டு இதயத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் அவர் ஓய்விலிருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தலைவர் பதவிக்கான ரேஸிலிருக்கும் செல்லகுமார், தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சென்னை செனாய் நகரிலுள்ள தன் வீட்டில் தொண்டர்களைச் சந்தித்துவருகிறார். இதன் மூலம், ‘தலைவர் பதவிக்கு நான் இப்போதும் தயார்’ என்பதை சிம்பாலிக்காக உணர்த்தியிருக்கிறார் செல்லகுமார். கட்சியில் சீனியர் என்பதால் இவருக்கு வாய்ப்பிருக்கிறது.

செல்லகுமார்
செல்லகுமார்

கார்த்திக் சிதம்பரத்துக்கும் ராகுல் காந்திக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆனாலும், தன்னுடைய அப்பா ப.சிதம்பரம் மூலமாகத் தலைவர் பதவிக்கு அடிபோடுகிறார் அவர். இதற்கிடையே ராகுலின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கும் கரூர் எம்.பி ஜோதிமணிக்குத் தலைவர் பதவி யோகம் அடிக்கலாம். பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பில் கரூரைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவருமான அண்ணாமலையை நியமித்திருக்கிறது அந்தக் கட்சி. அதை எதிர்கொள்ள அதே பகுதியில் வேரூன்றியிருக்கும் மற்றொரு கவுண்டர் சமூகத்தவரான ஜோதிமணியைத் தலைவராக்கினால், கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சலாம் என்று நினைக்கிறது டெல்லி. இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், ஆரணி எம்.பி-யுமான விஷ்ணு பிரசாத். `வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் மாநிலத் தலைவராக்கினால்தான் கட்சிக்குப் புத்துயிரூட்ட முடியும். சமூக அரசியலைக் கையில் எடுத்தால்தான் கட்சி வளரும்’ என்று டெல்லிக்கு தூபம் போட்டிருக்கிறார் அவர்.

விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், தலைவர் பதவி கேட்கவில்லை. அதேபோல, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரேஸில் இல்லை. தன் மகன் திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ ஆகிவிட்டதால், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். சீனியர்கள் பெரும்பகுதி ஒதுங்கிவிட்டதால், ஜூனியர்கள் மத்தியில்தான் தலைவர் பதவிக்கான போட்டி தீவிரமாகியிருக்கிறது” என்றனர்.

கார்த்திக் சிதம்பரம்
கார்த்திக் சிதம்பரம்

இதற்கிடையே, பிப்ரவரி, 2022 வரை தானே தலைவர் பதவியில் தொடர விரும்புவதாக காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் கே.எஸ்.அழகிரி. “நாடாளுமன்ற, சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறேன். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியை வெற்றிபெற வைக்கிறேன்” என்று டெல்லிக்கு அழகிரி உறுதிமொழி அளித்திருப்பதாகச் சொல்கிறது சத்தியமூர்த்தி பவன். 1983 முதல் 1988 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் ஆறு ஆண்டுகள் இருந்தவர் எம்.பழனியாண்டி. அவர் ரூட்டில் பயணித்து, நீண்டகாலத்துக்குத் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறாராம் அழகிரி. ஆனால், டெல்லி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

சத்தியமூர்த்தி பவனில், சாதாரண பிரச்னையே சண்டையில் முடியும். தலைமைக்கான போட்டி என்றால் கேட்கவா வேண்டும்!?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு