Published:Updated:

``தைரியம் இருந்தால் பாஜக தனித்துப் போட்டியிடட்டுமே ” - சவால் விடும் கே.எஸ்.அழகிரி

“உட்கட்சிப் பூசல், கூட்டணிப் பிரச்னை, தலைமைக்கான பிரச்னை என அனைத்தும் அனைத்துக் கட்சியிலும் இருக்கிறது. ஆனால், காங்கிரஸில் மட்டும்தான் இவையெல்லாம் இருக்கின்றன என கட்டமைக்கிறார்கள்” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி.

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது இருக்கும் தொடர் விமர்சனங்கள், கட்சியினர் மீதான குற்றச்சாட்டு, உட்கட்சிப் பூசல்கள், உள்ளாட்சித் தேர்தல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் கொடுத்த பதில்களை இங்கு பார்ப்போம்.

“தலைமை குறித்த விமர்சனங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்கதையாகி இருக்கின்றதே?”

“சோனியா காந்தி, ராகுல் காந்தி தவிர ஒருவரை ஒருவர் இணைக்கக் கூடிய, சமாதானம் செய்துவைக்க கூடிய ஆற்றலும் திறமையும் கவர்ச்சியும் பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? இவர்களைத் தவிர வேறெந்தத் தலைவர்களாலாவது இந்தியவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்ட முடியுமா? இடைக்காலத் தலைவர், தற்காலிகத் தலைவர் என்பது எல்லாம் சம்பிராதாயத்துக்கான வார்த்தைகள்தான். சோனியா காந்தி, ராகுல் காந்தி விரும்பும் வரை அவர்கள்தான் தலைவர்கள். பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் இருந்தார். அவரது காலத்தில் சி.சுப்பிரமணியம், பா.ராமச்சந்திரன் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எங்கு சென்று கேட்டாலும் காமராஜரைத்தான் காங்கிரஸ் தலைவர் எனச் சொல்வார்கள். செயல்வீரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள்தான் தலைவராக இருக்க முடியுமே தவிர வேறு காரணங்களுக்காக உள்ளே நுழைக்கப்படுபவர்களெல்லாம் தலைவர்களாகிவிட முடியாது.”

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி
எதிர்க்கட்சியினர்கூட இவ்வளவு குடைச்சல் கொடுப்பதில்லை! - கே.எஸ்.அழகிரி ‘குமுறல்’ பேட்டி...

“கட்சியினரின் விமர்சனங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கிறீர்களா?”

“சுதந்திரத்திற்கு முன்பு காந்தி கொண்டு வந்த தீர்மானங்களே காங்கிரஸ் கட்சிக்குள் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றன. டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியாக இருக்கும்போது இந்தோனேசிய அதிபர் இந்தியா வந்தார். வெளிநாட்டு அதிபர்கள் வரும்போது ஜனாதிபதி மாளிகையில்தான் தங்குவார்கள். ஆனால், இந்தோனேசிய அதிபர் மாட்டுக்கறி சாப்பிடுவார் என்பதால் ஜனாதிபதி மாளிகையில் தங்க வைக்க ராதாகிருஷ்ணன் அனுமதிக்கவில்லை. இது நேருவைப் புண்படுத்தியது. அவர் ராதாகிருஷ்ணனிடம் நேரில் சென்று ‘இந்தோனேசிய அதிபரை ஜனாதிபதி மாளிகையில் தங்க வைக்க அனுமதிக்கவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியிருக்கும். உங்கள் கொள்கையை உங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது’ என எச்சரித்த பின் ராதாகிருஷ்ணன் அனுமதித்திருக்கிறார். அந்தளவு விமர்சனத்திற்கு கட்சிக்குள் ஒரு ஜனநாயகம் இருக்கிறது. அது அழகியலோடு இருக்கிறது.”

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்,
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மனக்கசப்புடன் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொற்றிக்கொண்டிருக்கிறது என பா.ஜ.க-வினர் விமர்சிக்கிறார்களே?”

“பா.ஜ.க நேற்று நடந்த தேர்தலில் கூட அ.தி.மு.க உடன் கூட்டணியில் இருந்துதான் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றபின் நாங்கள் நினைத்தால் என்னவெல்லாமோ செய்துவிடலாம் என்று பேச யாரால்தான் முடியாது. தனித்து நின்று அவர்கள் வெற்றிபெற்றிருந்தால் இப்படிப் பேசுவதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்.”

பிரதமர் மோடி, இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்
பிரதமர் மோடி, இ.பி.எஸ் & ஓ.பி.எஸ்

‘பதவி என்றதும் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்னை வந்துடும்’ என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே?”

“உலகத்தில் பிரச்னைக்கு உட்படாத பதவியே கிடையாது. சர்ச்சில், ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பதவிக்காக எவ்வளவு பிரச்னைகளைச் சந்தித்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இந்திய அளவில் நேரு, இந்திரா காந்தி போன்றோரும் தங்கள் காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டார்கள். எம்.ஜி.ஆர் - கலைஞர், காமராஜர் - ராஜாஜிக்கு எதனால் பிரச்னை வந்தது. எல்லா காலத்திலும் பதவிக்கான பிரச்னைகள் இருப்பது இயல்புதான். பதவிக்கான பிரச்னை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உரியது எனக் கட்டமைக்கிறார்கள். அதுதான் தவறு.”

கருணாநிதி, எம்.ஜி.ஆர்
கருணாநிதி, எம்.ஜி.ஆர்
`ஸ்டாலின் வாய்வித்தைக்காரர் அல்ல; சொன்னதைச் செய்திருக்கிறார்!’ - புகழ்ந்த கே.எஸ்.அழகிரி

“காங்கிரஸ் கட்சிக்குள் புதியவர்கள் வருவதும், பழையவர்கள் வெளியேறுவதுமாக நடக்கும் உள்ளே வெளியே விளையாட்டுக்கு எப்போதுதான் முடிவு வரும்?”

“காங்கிரஸ் போன்ற பெரிய தேசியக் கட்சியில் இப்படி நடப்பது இயல்புதான். சரத் பவார், ஏ.கே.ஆண்டனி, ஒய்.பி.ஜவான், ஜெகஜீவன் ராம் ஆகியோர் காங்கிரஸிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மூப்பனார் சென்றார். அவரோடு சேர்ந்து நான் உட்படச் சில தலைவர்கள் சென்றோம். காங்கிரஸில் ஒரு மிகப்பெரிய உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது. அதில் ஓர் ஒழுங்கின்மை வரும் வரை மக்கள் அதை விரும்புவார்கள்.”

மூப்பனார்
மூப்பனார்

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றனவே, எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?”

“நான் தலைவராகப் பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டுகளில் எங்கோ ஒரு மூளையில் ஏதோ ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டும்தான் வந்திருக்கின்றன. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ஆகியோருக்கு இடையே இல்லாத பிரச்னையா? மற்ற கட்சிகளுக்குள் பிரச்னைகளே இல்லையா? அவர்கள் எல்லாம் சமாதானக் குழுக்கள் அமைத்தா அந்தப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது காங்கிரஸில் இப்படியான பிரச்னைகள் குறைந்திருக்கிறது என்பதுதான் கள எதார்த்தம்.”

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

“காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுவது தொடர் கதையாகியிருக்கிறதே?”

உடனடியாகப் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை என்றால் அழைத்துப் பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கைக் குழு என்ற குழுவே எங்கள் கட்சியில் இருக்கிறது. முன்னாள் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டு வந்தால் இவர்கள் அழைத்து விசாரிப்பார்கள்.”

பிரின்ஸ் - விஜயதாரணி
பிரின்ஸ் - விஜயதாரணி
`ஜெ., மரணத்துக்கான காரணத்தை அறிய அதிமுக-வினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்!’ -சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

“களத்தில் சென்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்வதாக எங்கும் செய்திகளைக் காணவில்லையே?”

“தவறான தகவல்... உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களிலும் 18 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2 செயல் தலைவர்கள், 9 மாவட்டத் தலைவர்கள், இந்த 9 மாவட்டங்களில் இருக்கும் மாநிலப் பிரதிநிதிகள் எல்லோரையும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணக்கமாக இணைந்து தேர்தல் பிரசாரம் செய்யக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

“உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் கட்சி ரீதியாக ஏதாவது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறீர்களா?”

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இன்னும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன். உட்கட்சித் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். கருத்தரங்குகள், அரசியல் மாநாடுகள், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பேரணிகள், காங்கிரஸ் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பயிற்சி வகுப்புகள் போன்ற செயல்பாடுகள் மூலம் அடிப்படைக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறேன்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு