Published:Updated:

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

எடப்பாடி கட்சிக்குள் ஏற்பட்ட சிக்கல்களையெல்லாம் சமாளித்து நான்காண்டு காலம் முதல்வராக நீடித்துவிட்டாலும் அவரை அரசியல் ஆளுமையாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்பது இந்தத் தேர்தலில்தான் தெரியவரும்.

பிரீமியம் ஸ்டோரி
மிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு தரப்புகளிலும் கூட்டணி உறுதியாகிவிட்டது. ‘எப்போது முதல்வர் ஆவோம்’ என்று நீண்ட நாள்கள் காத்திருக்கும் ஸ்டாலினும், எப்படியோ முதல்வரான எடப்பாடி பழனிசாமியும் இரு கூட்டணிகளுக்கும் தலைமை தாங்கியிருக்கிறார்கள். ‘வெற்றிநடை போடும் தமிழகமே’வும் ‘விடியல் தரப்போறாரு’வும் நம் காதுகளைத் துளைத்தெடுக்கின்றன. வெல்லப்போவது யார்? வெற்றிநடையா, விடியலுக்கான முழக்கமா? தி.மு.க, அ.தி.மு.க. கூட்டணிகளின் ப்ளஸ், மைனஸ்களை அலசுவோம்.

அ.தி.மு.க பலம் :

பத்தாண்டுக் காலம் ஆளுங்கட்சி என்பது அ.தி.மு.க-வின் முதன்மையான பலம். பத்தாண்டுக் கால ஆட்சியில் ‘செழுமையான’ இடத்தில் இருக்கும் அ.தி.மு.க-வினர் தேர்தலில் பணத்தை வாரியிறைக்கப்போவது உறுதி. அ.தி.மு.க மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியல்ல, மத்தியில் ஆளுங்கட்சிக் கூட்டணியின் ஓர் அங்கம். அ.தி.மு.க பணத்தை வாரியிறைப்பது மட்டுமல்ல, தி.மு.க தேர்தலில் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் நடக்கும். மோடி தமிழகத்துக்கு இரண்டுமுறை வந்து எல்லாத் திட்டங்களையும் தொடங்கிவைத்தபிறகு, விவசாயக்கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று எடப்பாடி பழனிசாமி எல்லாக் கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்ட சிலமணி நேரம் கழித்துத்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பதை மறந்துவிடமுடியாது. எனவே அ.தி.மு.க-வின் பண விநியோகம், தி.மு.க-வின் பண விநியோகத்துக்கு முட்டுக்கட்டை எனும் சூழல், அ.தி.மு.க-வின் ப்ளஸ்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

தமிழகத்தில் வலுவான உள்கட்டமைப்பும் வாக்குவங்கியும் உள்ள கட்சி அ.தி.மு.க. ஜெயலலிதா மறைவுக்குப் பின் ‘கட்சியை வழிநடத்தப்போவது யார்? அ.தி.மு.க அதே பலத்துடன் நீடிக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன. சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர்க் கூடுகை, சசிகலா சிறைக்குப் போனது, அ.ம.மு.க உதயம் எனப் பல சம்பவங்கள் நடந்து முடிந்தன. ஆனால், கடந்த நான்காண்டுகளில் இவை எல்லாவற்றையும் சமாளித்து எடப்பாடி பழனிசாமி கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். கடைசிக்கட்டத்தில் ‘முதல்வர் வேட்பாளர்’ குறித்த ஓ.பி.எஸ் முணுமுணுப்பு, சலசலப்புகளையும் வெற்றிகரமாக சமாளித்துள்ளார். எனவே அ.தி.மு.க-வின் வாக்குவங்கியில் பெருமளவுக்கு சேதாரம் இருக்காது என்றே தோன்றுகிறது. எப்போதுமே அ.தி.மு.க-வின் பலம் இரட்டை இலைச் சின்னம். இரட்டை இலைச் சின்னத்தில் சே குவேரா, டொனால்டு ட்ரம்ப் என்று யார் நின்றாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க இன்னமும் கணிசமாக ஒரு கூட்டம் இருக்கிறது.

பிரசாரங்களில் பழனிசாமி மீண்டும் மீண்டும் முன்வைத்த முக்கியமான விஷயம், ‘தி.மு.க குடும்பக்கட்சி. குடும்ப அரசியலைத் தாண்டி யாரும் அங்கே வளர்ந்துவிட முடியாது. ஆனால் அ.தி.மு.க-வோ சாமானியர்களின் கட்சி. யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். அதற்கு நானே சாட்சி’ என்பது. இந்தப் பிரசாரம் அ.தி.மு.க-வுக்கான பிளஸ். தொடக்கத்தில் தமிழக மக்களுக்கு வினோதமானவராகத் தெரிந்த எடப்பாடி பழனிசாமி கடந்த நான்காண்டுகளில் தமிழக மக்களுக்குப் பரிச்சயமானவராக மாறியிருக்கிறார். போகும் இடமெல்லாம் ‘நான் ஒரு விவசாயி’ என்கிறார். இந்த இமேஜ் அ.தி.மு.க-வுக்கான பலமாக அமையலாம்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றிருப்பது நிச்சயம் ஒரு பிளஸ். அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு அடுத்து கணிசமான, நிரந்தரமான வாக்குவங்கியை வைத்திருக்கிறது பா.ம.க. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க ஓரிடத்தில்கூட வெல்லவில்லை. அன்புமணியே தர்மபுரியில் தோற்றுப்போனார். ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களுக்காக ராமதாஸ் அழைத்தால் ஆயிரக்கணக்கில் கூடுவதற்கும் போராடுவதற்கும் தயாராக இருக்கிறார்கள். வேல்முருகன், காடுவெட்டி குரு குடும்பம் என்று ராமதாஸ் பிம்பத்தைச் சிதைக்க பல முயற்சிகள் நடந்தாலும் அவை முழுமையாக வெற்றியடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தநிலையில் ‘வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு’ என்னும் அறிவிப்பு வடமாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும்.

பொங்கலையொட்டி ரேஷன் கடைகளில் 2,500 ரூபாய், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என்று ஏராளமான கவர்ச்சிகர அறிவிப்புகளை அள்ளித் தெளித்திருக்கிறார் எடப்பாடி. இதுபோக அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அம்சங்கள் எந்த அளவுக்கு அ.தி.மு.க-வுக்குக் கைகொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

அ.தி.மு.க-வின் பலவீனங்கள் :

ஆளுங்கட்சி - அ.தி.மு.க-வுக்கு பலமும் இதுவே; பலவீனமும் அதுவே. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஐந்தாண்டுகள் தி.மு.க ஆட்சி என்றால் அடுத்த ஐந்தாண்டுகள் அ.தி.மு.க ஆட்சி என்றே வாக்களித்துப் பழகியவர்கள் தமிழக மக்கள். சென்ற 2016 சட்டமன்றத் தேர்தல் மட்டும் விதிவிலக்கு. மீண்டும் அ.தி.மு.க-வே வெற்றி பெற்றதால் பத்தாண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது. ஐந்தாண்டுகள் ஆட்சியிலேயே அதிருப்தி அடையும் தமிழக மக்கள் பத்தாண்டுக் காலத்துக்குப் பிறகும் அ.தி.மு.க-வுக்கு மீண்டும் அந்த வாய்ப்பை வழங்குவது சந்தேகமே. எடப்பாடி பழனிசாமி மூலம் அ.தி.மு.க ‘ஹாட்ரிக்’ அடித்தால் அது உலக சாதனை.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

இந்த ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல்கள் அதன் வெற்றியை பாதிக்கும் முக்கியமான அம்சம். குறிப்பாகத் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் படுகொலை, டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தடியடி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல்துறையே ஆட்டோக்களுக்குத் தீ வைத்து வன்முறை வெறியாட்டம் நடத்தியது, சேலம் எட்டுவழிச்சாலைப் போராட்டம் ஆகியவை அ.தி.மு.க ஆட்சியின் கரும்புள்ளிகள். இந்தப் பிரச்னைகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

‘குட்கா’ ஊழல், தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தலைமைச்செயலகத்தில் நடந்த ரெய்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சேகர் ரெட்டிக்குமான தொடர்புகள், கொரோனா காலப்பணிகளிலும் ஊழல் நடந்ததான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைத் தி.மு.க வலுவாகப் பிரசாரம் செய்து மக்களிடம் கொண்டுபோவதும் அ.தி.மு.க வெற்றியை பாதிக்கும்.

ஊழலைப் போல் அ.தி.மு.க வெற்றியை பாதிக்கும் இன்னோர் அம்சம், உளறல். ஜெயலலிதா காலத்தில் வாய்மூடிக் கிடந்த அமைச்சர்களெல்லாம் மைக் கிடைத்தால் போதும், ஆளுக்கொரு உளறலை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை உளறாதவர்களே இல்லை. ‘இவர்கள் இப்படியெல்லாம் உளறுபவர்கள் என்பதால்தான் ஜெயலலிதா இவர்களைப் பேசவிடாமல் வைத்திருந்தாரா அல்லது இதுவரை பேச வாய்ப்பில்லாதவர்கள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்ததால் தாறுமாறாக உளறுகிறார்களா’ என்று சந்தேகம் வருமளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் உளறல்களும் அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

சசிகலா ஆதரவாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, தினகரனின் அ.ம.மு.க. 2019 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பெருமளவு தாக்கம் செலுத்த வில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் அது எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தும் என்பதும் அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கக்கூடிய விஷயம். எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அ.தி.மு.க-வால் முழுமையாக வெல்ல முடியாது என்பதால்தான் அ.ம.மு.க - பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க விரும்பியது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதிலும் எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர்களின் பிரதிநிதி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மட்டும் செயல்படுத்தியிருக்கிறார். இது மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகங்களில் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் குறைத்து அ.ம.மு.க-வின் வாக்குகளை அதிகரிக்கக் கூடும்.

‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்பதில் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் முட்டிமோதி சமரசத்துக்கு வந்துவிட்டாலும் அது நிரந்தர சமாதானமா, தற்காலிக சமரசமா என்று தெரியவில்லை. எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டபிறகு பழனிசாமி விளம்பரங்களுக்குப் போட்டி விளம்பரங்களைப் பன்னீர்செல்வமும் வெளியிட்டார். சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி முதல் ஜெயக்குமார் வரை கண்டனக்குரல்கள் எழுந்தபோதும் பன்னீர்செல்வம் மௌனம் காத்தார். அ.ம.மு.க - பா.ஜ.க. - அ,தி.மு.க கூட்டணிக்குப் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார்; பன்னீர் ஆதரித்தார் என்றே தகவல்கள் வெளியாகின. இந்த ‘நீறுபூத்த தர்மயுத்தமும்’ உள்குத்து வேலைகளும் அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

அ.தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனம், பா.ஜ.க தமிழகத்தில் இயல்பாகவே பா.ஜ.க எதிர்ப்பு மனப்பான்மை உண்டு. இட ஒதுக்கீடு, நீட் என்று பல பிரச்னைகளில் பா.ஜ.க தமிழர் விரோதக்கட்சி என்ற பிம்பம் தமிழகத்தில் அழுத்தமாக உள்ளதால் அது அ.தி.மு.க கூட்டணியைப் பலமாக பாதிக்கும். 2019 இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்று அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலும், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தற்குக் காரணம் பா.ஜ.க எதிர்ப்பு மனநிலைதான். இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும். ‘அ.தி.மு.க-வை ஆட்டிப் படைப்பதே பா.ஜ.கதான்’ என்ற செய்தி தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேர்ந்திருக்கிறது என்பதால், அதன் பாதிப்பு பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.

பா.ஜ.க ஆதரவால் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை அ.தி.மு.க இழக்கும். பெண்கள் வாக்கு என்பது அ.தி.மு.க-வின் பலம். ஆனால் பொள்ளாச்சிப் பாலியல் வன்முறைச் சம்பவம் சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்குள்ள கொங்குப்பகுதியிலேயே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஜெயலலிதாவைத் தங்கள் பிரதிநிதியாக நினைத்து அவரின் அதிரடி முடிவுகளையும் ஆண்களைக் காலில் விழவைத்ததையும் உள்ளூர ரசித்த பெண்களின் வாக்கு இதுவரை அ.தி.மு.க.வுக்கு விழுந்துவந்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில், பெண்களின் வாக்கு எந்த அளவுக்கு அ.தி.மு.க-வுக்கு விழும் என்பதும் சந்தேகமே.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

எடப்பாடி கட்சிக்குள் ஏற்பட்ட சிக்கல்களையெல்லாம் சமாளித்து நான்காண்டு காலம் முதல்வராக நீடித்துவிட்டாலும் அவரை அரசியல் ஆளுமையாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களா என்பது இந்தத் தேர்தலில்தான் தெரியவரும். ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று முகங்களைப் பார்த்து வாக்களித்து உருவான அ.தி.மு.க வாக்குவங்கி எடப்பாடியையும் ஏற்றுக்கொள்ளுமா?

தி.மு.க.வின் பலம் :

பத்தாண்டுக்கால ஆளுங்கட்சியின் மீதான அதிருப்தி என்பது தி.மு.க.வுக்கான முக்கிய பலம். ‘இதுநாள் வரை அ.தி.மு.க; அடுத்து தி.மு.க’ என்ற மனநிலையே ஓரளவு வெற்றிக்குக் கைகொடுத்துவிடும். கிராமசபைக்கூட்டங்கள் நடத்துவது, பொதுமக்களிடம் புகார்கள் வாங்குவது, ‘100 நாள்களில் தீர்ப்பேன்’ என்று ஸ்டாலின் உறுதியளிப்பது ஆகியவை ‘அடுத்து தி.மு.க ஆட்சிதான்’ என்ற மனநிலையை வாக்காளர்கள் மத்தியில் உருவாக்க உதவும்.

‘வெற்றிநடை’ எடப்பாடி... ‘விடியல்’ ஸ்டாலின்... வெல்லும் கூட்டணி எது?

தி.மு.க-வின் வலுவான கட்டமைப்பும் வாக்குவங்கியும் அதன் பலம். சென்ற 2016 தேர்தலில் தி.மு.க வெல்லவில்லை என்றாலும் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான வாக்கு வித்தியாசம் வெறுமனே 1.1 சதவிகிதம். இத்தனைக்கும் தி.மு.க கூட்டணியில் இருந்த ஒரே பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. அப்போது மக்கள்நலக்கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள், விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க ஆகியவை இப்போது கூட்டணியில் இணைந்திருப்பதால் தி.மு.க கூட்டணியின் வாக்குகள் அதிகரிக்கும்.

எதிர்த்தரப்பில் இன்னும் தலைமைக்கான பிரச்னைகள் முடியாத நிலையில் தி.மு.க-வில் குழப்பமற்ற, உறுதியான தலைமை முக்கியமான பிளஸ். ‘அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்’ என்ற மனநிலையைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தொண்டர்களிடம் கருணாநிதி உருவாக்கி விட்டார். ‘வைகோ வெளியேற்றத்துக்குக் காரணமே ஸ்டாலின் வளர்ச்சி தடைப்படக் கூடாது என்பதுதான்’ என்று அப்போது சொல்லப்பட்டது. இப்போது அதே வைகோவே ஆறு தொகுதிகளுக்காக, அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஸ்டாலினை எதிர்பார்த்து நிற்கும் நிலை.

ஸ்டாலின் பிரசாரத்தில் துண்டுச்சீட்டைப் பார்த்துப் பேசுகிறார், பழமொழிகளையும் தகவல்களையும் தப்பாகச் சொல்லி சொதப்புகிறார் என்று ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஸ்டாலினின் உழைப்பு தவிர்க்க முடியாதது. எதிர்த்தரப்பு பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே கொரோனா நிவாரண மீட்புப் பணிகள், தமிழகம் மீட்போம், கிராமசபைக்கூட்டங்கள், ‘ஸ்டாலின்தான் வர்றாரு’, ‘விடியலுக்கான முழக்கம்’ என்று வெவ்வேறு பெயர்களில் தொடர்ச்சியாக ஸ்டாலின் மக்களைச் சந்தித்துவருகிறார். இப்போது மட்டுமல்ல, 2016 சட்டமன்றத் தேர்தலிலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ஸ்டாலினின் உழைப்பு முக்கியப் பங்கு வகித்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தி.மு.க உயிர்ப்புடன் இருக்கக் காரணமே எதிர்க் கட்சியாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தது. ஜெயலலிதாவோ விஜயகாந்தோ எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்தபோது இவ்வளவு தீவிரத்துடன் இயங்கியதில்லை. கடந்த பத்தாண்டுகளாகவே தி.மு.க செயல்படும் எதிர்க்கட்சியாக இருக்கிறது. நீட், இட ஒதுக்கீடு, பெட்ரோல், கேஸ் விலை உயர்வு என்று தொடர்ச்சியாகப் போராட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள், அறிக்கைகள், ஆளுநரைச் சந்தித்தல் என்று மக்களுக்கான பிரச்னைகள் அனைத்திலும் தி.மு.க முன்னின்றிருக்கிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்பு முதல் ஆளுநர் அரசுப்பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது வரை தி.மு.க-வின் தொடர் அழுத்தங்கள் பல விஷயங்களை சாதித்துள்ளன. ஸ்டாலினின் பல அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்ததும் தி.மு.க-வின் இமேஜை உயர்த்தியுள்ளது.

தி.மு.க-வின் முக்கியமான பலம், பா.ஜ.க. எதிர்ப்பு. இந்தியாவிலேயே பா.ஜ.க-வுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியது ஸ்டாலின்தான். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளில் பெரும்பான்மை தி.மு.க கூட்டணிக்கே செல்லும். சிறுபான்மையினர் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் மூலம் கிடைக்கும் பட்டியலின வாக்குகள் ஆகியவை தி.மு.க-வின் பலம். 2009 ஈழ இறுதிப்போரையொட்டி தமிழுணர்வு மற்றும் திராவிட ஆதரவாளர்கள் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்கள். கணிசமான வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் சென்றன. அதனால்தான் அதுவரை புலி எதிர்ப்பில் தீவிரமாக இருந்த ஜெயலலிதா ஈழத்தாயாக அவதாரமெடுத்தார். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. ‘பா.ஜ.க எதிர்ப்பை முன்னிறுத்தும் வலுவான கட்சி’ என்ற வகையில் தமிழின மற்றும் திராவிடக் கருத்தியல் ஆதரவாளர்களின் வாக்குகளும் தி.மு.க கூட்டணிக்கு வலுச்சேர்க்கும்.

தி.மு.க-வின் பலவீனம் :

சந்தேகமில்லாமல் தி.மு.க-வின் மிகப்பெரிய பலவீனம், அதன் வாரிசு அரசியல். ஸ்டாலின் இருக்கும்போதே அழகிரியும் கனிமொழியும் நேரடி அரசியலுக்கு வந்தபோதே கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அதிருப்தி எழுந்தது. இப்போதோ உதயநிதி தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர் ஆக்கப்பட்டது, ‘தி.மு.க குடும்பக்கட்சி’ என்ற குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது. தி.மு.க தலைமையில் மட்டுமல்லாது மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளைக்கழகம் என எல்லா மட்டங்களிலும் இந்த வாரிசு அரசியல் பிரதிபலிப்பதும் தி.மு.க-வின் பலவீனம். பல பத்தாண்டுகளாகப் பார்த்துச் சலித்த சீனியர்களே தி.மு.க-வின் வேட்பாளர் களாக முன்னிறுத்தப்படுவதும் முக்கிய பலவீனம்.

ஸ்டாலினின் பிரசார உழைப்பு இந்தத் தேர்தலில் கைகொடுக்கும். அதேநேரத்தில் அந்தப் பிரசாரத்தில் ஏற்படும் சொதப்பல்களும் சிறு அளவிலேனும் தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும். இது சமூகவலைதளக் காலம். அவ்வப்போது நடைபெறும் சொதப்பல்கள் உடனடியாக வீடியோக்களாக, சமூகவலைத்தளப் பதிவுகளாக, வாட்ஸ்அப் பார்வேர்டுகளாக மாறிவிடுகின்றன. விஜயகாந்தின் பிம்பம் சிதைந்ததற்கு சமூகவலைதளத்தின் செல்வாக்கு முக்கியமான காரணம் என்பதை ஸ்டாலின் நினைவில்கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தில் பா.ஜ.க-வின் முக்கிய இலக்கே தி.மு.க-தான். ‘கருப்பர் கூட்டம்’ விவகாரம் தொடங்கி இந்துமதம் குறித்து எந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் அதைத் தி.மு.க-வுடன் இணைத்துப் பிரசாரம் செய்வதில் பா.ஜ.க தலைவர்கள் முதல் தனிநபர் இந்துத்துவ ஆதரவாளர்கள் வரை முமமுரமாக முன்நிற்கின்றனர். அதனால்தான் தி.மு.க-வும் சமீபகாலமாக வேலேந்துகிறது. பெரியாரிடமிருந்து பிரிந்துவந்தபோதே தி.மு.க கடவுள்மறுப்பைக் கைவிட்டுவிட்டாலும் கருணாநிதி தன்னை இறைமறுப்பாளராகவே முன்னிறுத்தினார். இதுவரையிலான தேர்தலில் கருணாநிதி நாத்திகர் என்றோ ஜெயலலிதா பக்திமான் என்றோ தமிழ்மக்கள் வாக்களித்ததோ வாக்களிக்காமல் இருந்ததோ நடந்ததில்லை. பெரியார் சிலை இழிவுபடுத்தப்படும்போது அதற்கெதிராக நடக்கும் போராட்டங்களில் திருநீறு, குங்குமம் பூசியவர்களைப் பெருவாரியாகப் பார்க்கலாம். ‘தங்கள் மதநம்பிக்கை வேறு; அரசியல் வேறு. பகுத்தறிவுக்கும் மதம் குறித்த விமர்சனங்களுக்கும் உரிமை உண்டு’ என்ற அளவிலேயே தமிழர்கள் இதுவரை நடந்துள்ளனர். பா.ஜ.க-வின் ‘தி.மு.க இந்துவிரோதக்கட்சி’ என்ற பிரசாரம் இந்தத் தேர்தலில் பலிக்குமா, பலிக்காதா என்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.

கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாகச் சிதறடிக்கும். இது தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் அளவுக்கு இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தேசியக் கட்சிகளுக்கும் முக்கியம்!

இந்தத் தேர்தல் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் கூட முக்கியமான தேர்தல். இந்தியா முழுவதும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ள பா.ஜ.க-வினால் கைப்பற்ற முடியாத கனவுபூமியாக, வெல்ல முடியாத எஃகுக் கோட்டையாக, இந்துத்துவ அரசியலுக்கு இடம்கொடாத திராவிட நிலமாக இருக்கும் தமிழகத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் மோடி தினந்தோறும் திருக்குறள்களை ஒப்பித்துப்பார்க்கிறார். இன்னொருபுறம் இந்தியா முழுவதும் பலவீனமான நிலையில் தமிழகத்தையும் தாரைவார்த்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் ராகுல்காந்தி தமிழகத்தில் காளான் பிரியாணி சமைத்துப்பார்க்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகளில் நாலு கட்சிகளின் கௌரவம் அடங்கியிருக்கிறது.

எடப்பாடி - மோடி, ஸ்டாலின் - ராகுல் எந்தக்கூட்டணி வெல்லப்போகிறது என்பதை மே 2 சொல்லும். உழைப்பாளர் தினத்துக்கு மறுநாள் தமிழகத்தில் யார் உழைப்புக்குப் பலன் கிடைத்திருக்கிறது என்பதைச் சொல்லப் போவதற்கான நாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு