மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு சட்ட திட்டங்களைச் செயல்படுத்திவருவதாக தமிழ்நாடு மீனவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு கடலில் காற்றாலை அமைப்பது போன்ற, மீனவர்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவருவதாகவும், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். மேலும், கோரிக்கையை நிறைவேற்ற தவறும்பட்சத்தில் போராட்டத்தை முன்னெடுப்போம் என தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

மீனவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது...:
மத்திய அரசின் திட்டங்கள்:
மத்திய அரசு உலக முதலாளிகளுக்கு சட்டரீதியாக இந்திய கடலையும், கடற்கரையையும் தாரை வார்க்கும்விதமாக உலக முதலாளிகள் கூட்டமைப்பு (WTO) உருவாக்கிக் கொடுத்த நாசகாரச் சட்டங்களை மீனவர்கள் மீது திணிக்க முயல்கிறது. இதில் கடற்கரை மேலாண்மைச் சட்டம் 2020, கடல் மீன்வளர்ப்பு சட்டம், கடல் மீன்பிடி சட்டம், ஆழ்கடல் மீன்பிடி சட்டம், கடல்நீர் வழிப்பாதைச் சட்டம் உள்ளிட்ட நாசகாரச் சட்டங்கள் மீனவர்களைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையையும், கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவிடாமல் தடுக்கும் வேலையையும் செய்கின்றன.
இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் எளிதாக சட்டரீதியாக கடலையும், கடற்கரையையும் கைப்பற்றும் சூழ்நிலை இருக்கிறது. இது குறித்து மீனவர்கள், தங்கள் எதிர்ப்பை மத்திய அரசுக்குப் பதிவுசெய்தார்கள். மேலும் தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு டெல்லி வரை சென்று போராடி, மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து இந்திய மீன்பிடிச் சட்டம், இந்திய ஆழ்கடல் மீன்பிடிச் சட்டம் உள்ளிட்டவற்றை நிறுத்திவைக்க கோரிக்கை வைத்தோம். எனவே, மத்திய அரசு மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்தச் சட்டங்களில் பாரம்பர்ய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல திருத்தங்கள் செய்து தற்போது இந்தத் திட்டங்களை நிறுத்திவைத்திருக்கிறது.

மாநில அரசின் திட்டங்கள்:
அதேசமயம் தமிழகத்தை ஆளும் திமுக அரசு, கடந்த ஒராண்டாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் கடலையும் கடற்கரையையும் கார்ப்பரேட்டுக்கு ஏகபோக குத்தகைக்குக் கொடுக்கும் பல நாசகாரத் திட்டங்களைப் போட்டு செயல்படுத்திவருகிறது.
1. கன்னியாகுமரி முதல் நாகபட்டினம் வரையுள்ள பாரம்பர்ய மீன்பிடிப் பகுதியில் கடலில் காற்றாலை போட்டு, மீனவர்களின் மீன்பிடிப் பகுதிகளை ஆக்கிரமித்து, மீனவர் வாழ்வுரிமையை அழிக்கும் திட்டம்.
2. கடலின் நடுவே பேனா சிலை போன்ற கட்டுமானங்களைக் கட்டி மீனவர்களின் மீன்பிடி வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டம்.
3. கடலில் சுரங்கம் தோண்டி, கனிமம் எடுத்து கடல் வளத்தை அழிக்கும் திட்டம்.
4. கடற்கரை கனிம மணல் எடுத்து கதிர்வீச்சை மீனவர்கள் மீது திணிக்கும் திட்டம்.
5. கடலில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம்.

தமிழகத்தில் 1,072 கிமீ நீளமுள்ள கடற்கரையில் 608 மீனவ கிராமங்களில் பல லட்சம் மீனவர்கள் கடலை வாழ்வாதரமாகக்கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். இந்திய நாட்டின் 4% GTP பொருளாதார வளர்ச்சியில் 1% பொருளாதார வளர்ச்சியைத் தருவது மீன்பிடித் தொழில். மேலும் ஒரு லட்சம் கோடி அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவது மீன்பிடித் தொழில். அதேசமயம் இந்திய கடல் எல்லையைப் பாதுகாக்கும் முதல்நிலை பாதுகாப்பு அரணாக, சம்பளம் வாங்காத கடற்படை வீரனாக இந்த நாட்டைப் பாதுகாப்பது மீனவன்தான். இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பொருளாதார சக்தியாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் மீனவன், தனது வாழ்வாதாரத்துக்கு நம்பியிருப்பது கடலை மட்டும்தான். ஆனால், தமிழக மீனவனின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழக பாரம்பர்ய கடலில் நாசகாரத் திட்டங்களைப் போடுவது நியாயம்தானா..?
தீராத கச்சத்தீவு பிரச்னை:
தமிழக பாரம்பர்ய கடல் எல்லை என்பது நீரோடி தொடங்கி பழவேற்காடு வரையுள்ள 18 ஆயிரம் சதுர கி.மீ. இதில் ஏற்கெனவே 1974-ல் கச்சத்தீவு, காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதால் கிட்டத்தட்ட வளமான 500 சதுர கி.மீ-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய கடல் பகுதி இலங்கை வசம் சென்றது. இதனால் இன்றுவரை கச்சத்தீவு பாரம்பர்ய மீன்பிடிக் கடல்பகுதியில் மீன்பிடிப்பது தொடர் பிரச்னையாக இருக்கிறது. இதனால் 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்குவதும், தமிழக மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்துவதும் தொடர்கதையாகிவருகிறது. அன்று மத்திய, மாநில அரசுகளின் தவறான முடிவால் இன்றுவரை தமிழக மீனவர் சமுதாயம் பாதிக்கப்பட்டுவருகிறது" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து, தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னத்தம்பியிடம் பேசியபோது, ``இன்று தமிழக அரசு கன்னியாகுமரி முதல் நாகபட்டினம் வரையுள்ள தமிழக பாரம்பர்யக் கடலை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, சுமார் 8,000 சதுர கி.மீ அளவுக்குக் கடலில் காற்றாலை போட்டால் தமிழக மீனவர்கள் எங்கு சென்று மீன்பிடிப்பது... கடலில் செல்லும் படகுகளை பிரேக் போட்டு நிறுத்த முடியாதே... கடலில் காற்றாலை போட்டால் அதில் மீன்பிடிப் படகுகள் மோதி தினமும் மீனவர் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே... இதைப் பரிசீலனை செய்தீர்களா... கடலில் மீனவர் வலை பரப்பினால் மீனவர் வலை சேதமடையுமே... கடலில் காற்றாலை போட்டால் மீனவர்கள் எங்கு சென்று மீன்பிடிப்பார்கள் என்பதைத் தமிழக அரசு பரிசீலனை செய்ததா... இது குறித்து தமிழக முதலமைச்சர் மீனவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``தமிழக அரசு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. இதை மீனவர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கடந்தகாலங்களில் மீனவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள்தான் ஆட்சி மாற்றங்களைக் கொண்டு வந்தன என்பதை நினைவுபடுத்துகிறோம். மீனவர்களுக்கு தி.மு.க நல்லது செய்யும் என நம்பி மீனவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்ததால் தற்போது கடற்கரையை ஒட்டிய 36 தொகுதிகளில் தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறோம்.
எனவே, கடலில் காற்றாலைத் திட்டம், கடலில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம், கடலில் சிலை வைக்கும் திட்டம், கடற்கரையில் கனிம மணல் எடுக்கும் திட்டம் போன்ற மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் திட்டங்களை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மீனவர்கள் தொடர் போரட்டத்தை முன்னெடுப்போம்" எனத் தெரிவித்தார்.

மீனவர்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் இது தொடர்பாக பதில் தரும் பட்சத்தில் அமைச்சரின் பதிலையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.