Published:Updated:

தகுதி வாய்ந்த குடும்பங்கள்: `இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000’ - யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தற்போது தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு 1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சரி, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் நிதிநிலை கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று வேளாண்துறையின் தனி நிதிநிலையும் தாக்கல் செய்யப்படுகிறது. முதன்முறையாகத் தமிழகத்தில் காகிதமில்லா முறையில் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 21-ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்தார். இந்த உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த, பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்’ குறித்து நிதியமைச்சர் பேசினார். ``அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவது மிகவும் கடினமாகிறது. அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை கவனமாக இந்த அரசு தொடர்ந்து பரிசீலனை செய்துவருகிறது" என்றார்.

மேலும், ``குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. ​குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உரிமைத்தொகை கிடைக்கும் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதனால் பல குடும்ப அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினர் ஒருவரை குடும்பத் தலைவர்கள் என மாற்ற முயன்றுவருகின்றனர். இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். உரிமைத்தொகைக்காக குடும்பத் தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை" என்றார்.

நிதிநிலை கூட்டத் தொடர்
நிதிநிலை கூட்டத் தொடர்

தொடர்ந்து பேசியவர், ``இந்தத் திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. இத்தகைய நிதி உதவியை, பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்கும் நபர்களுக்கும் வழங்கக் கூடாது என்று விமர்சனங்களும், வழக்குகளும் எழுந்தன. ஏழை மக்களுக்கு உரிமைத்தொகை சென்றடைவதற்காக வல்லுநர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறியத் தேவைப்படும் அளவுகோல் மற்றும் வழிமுறைகளை இந்த அரசு வகுத்துவருகிறது. இந்த வழிமுறைகள் அனைத்தும் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படும். தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிந்த பின் இந்தத் திட்டம் திறம்படச் செயல்படுத்தப்படும்" என்று பேசினார்.

தி.மு.க தேர்தல் அறிக்கை
தி.மு.க தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது என்ன?

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க மாநாட்டில் `ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்ற 10 ஆண்டுக்கால தொலைநோக்குத் திட்டத்துக்கான வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். அதில் ஏழாவது உறுதிமொழியாக சமூகநீதி என்பதில், ``தமிழ்நாட்டிலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம். ரேஷன் கடைகளில் உணவுப்பொருள்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்" என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்று கூறப்பட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.

`குடும்பத் தலைவிக்கு ரூ.1,000; எழில்மிகு மாநகரங்கள்!’ - திருச்சி தி.மு.க கூட்டத்தின் ஹைலைட்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு