Published:Updated:

``சீமான்மீது தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்!" - உறுதியளிக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்

தங்க தமிழ்ச்செல்வன்
News
தங்க தமிழ்ச்செல்வன்

``ராப்பகலாக நேர்மையாக உழைத்துவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இப்படியெல்லாம் தேவையற்ற வீர வசனங்களைப் பேசி எங்களைச் சீண்டுகிறார்கள்'' என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, 'மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கான எதிர்ப்பிலிருந்து விலகுகிறது தி.மு.க' என்பது போன்ற விமர்சனங்கள் இணையத்தில் றெக்கை கட்டிவருகின்றன.

இதற்கிடையே தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, 'கோ பேக் என்றவர்கள் ப்ளீஸ் கம் என்கிறார்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல, நாம் தமிழர், தி.மு.க-வினரிடையேயான முட்டல் மோதல்களில் ஆரம்பித்து நகைக்கடன் தள்ளுபடி, பாடநூல் அச்சடிப்பு, பொங்கல் பரிசு... எனத் தமிழக அரசைச் சுற்றிய நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் அரசியல்ரீதியாக அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.

பரபரப்பான இந்தச் சூழலில், தி.மு.க-வின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளரும், தேனி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினேன்...

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``தமிழக அரசின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டுக்கு பிரதமர் வரவிருக்கிற சூழலில், 'கோ பேக்’ என்றவர்கள் `ப்ளீஸ் கம் என்கிறார்கள்' என தமிழக பா.ஜ.க விமர்சித்திருக்கிறதே?''

``மாநில நலன், உரிமையைப் பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு துணையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அன்றைய அரசியல் சூழலில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., 'கோ பேக் மோடி' என்று சொன்னது. ஆனால், இன்றைக்கு தி.மு.க ஆளுங்கட்சியாக இருக்கிறது. மாநில நலன் சார்ந்த விஷயங்களில் ஒன்றிய அரசு நம்மோடு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் 'ப்ளீஸ் கம்' என்று அழைக்கிறோம். எனவே, வாருங்கள்... வந்து தமிழ்நாட்டுக்கு நல்லதைச் செய்யுங்கள்! அதை விட்டுவிட்டு, அதிகார ஆணவத்துடன் விமர்சிப்பது நல்லதல்ல.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``தமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் மோடியின் வாயால், 'தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்' சொல்லவைக்கும் முயற்சியை தமிழக அரசு செய்துவருவதாகச் சொல்கிறார்களே?''

(சிரிக்கிறார்.) ``இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா? அரசு சார்ந்த திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் வருகிறார். இப்படியொரு சூழலில், இது போன்றெல்லாம் கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? நான் ஒன்றும் ஜோசியக்காரன் இல்லையே!''

சீமான்
சீமான்

``நாம் தமிழர் கட்சியினர் கண்ணியமற்ற முறையில் விமர்சித்துப் பேசினார்கள் என்பதற்காக, மேடையிலேயே தி.மு.க-வினர் தாக்குதல் நடத்துவது நியாயம்தானா?''

``அப்படி யாரேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அவர்கள்மீது தி.மு.க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். கடலூர் தி.மு.க எம்.பி மீது குற்றச்சாட்டு வந்தவுடனேயே அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே... இது தி.மு.க-வின் பெருந்தன்மை இல்லையா? எனவே, தவறு செய்தவர்கள் தி.மு.க உறுப்பினராக இருந்தாலும்கூட அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``வன்முறையைத் தூண்டுகிற வகையில் பேசிவருகிறார் சீமான் என தி.மு.க உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டிக்கின்றன. ஆனாலும் அவர்மீது, தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்?''

``எடுப்பார்கள்... விட மாட்டார்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்.''

அண்ணாமலை
அண்ணாமலை

``ஶ்ரீரங்கம் கோயிலில் மரபுகளை மீறியதான விவகாரத்தில், 'தைரியம் இருந்தால், என் மீது நடவடிக்கை எடுங்கள்' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சவால்விடுகிறாரே...?''

``கொரோனா, வெள்ளம், ஒமைக்ரான் என நாங்கள் செய்து முடிக்கவேண்டிய பணிகளே நிறைய இருக்கின்றன. இதற்கிடையே பா.ஜ.க எனும் தேசியக் கட்சியைச் சார்ந்த மாநிலத் தலைவர் ஒருவரே இப்படிப் பிடிவாதமாகப் பேசினால், நாங்க என்ன பண்ண முடியும் சொல்லுங்க?

உயர் நீதிமன்ற நீதிபதியே பாராட்டக்கூடிய அளவுக்கு ராப்பகலாக நேர்மையாக உழைத்துவருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இப்படியெல்லாம் தேவையற்ற வீர வசனங்களைப் பேசி எங்களைச் சீண்டுகிறார்கள். வம்பு இழுக்கிறவர்களுக்கெல்லாம் அரசாங்கம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா..?

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேசமயம், சில விஷயங்களில் கொஞ்சம் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டும்.''

``தமிழ்நாடு பாடநூல் புத்தக அச்சடிப்புப் பணிகளை அண்டை மாநிலங்களுக்கு டெண்டர்விட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?''

``நானும் இது குறித்த செய்திகளைப் படித்தேன். குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனாலும் இது குறித்த முழுமையான விவரம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எந்தவொரு சூழலிலும் தமிழக நலனுக்கு எதிரான விஷயங்களை தி.மு.க அரசு செய்யாது. நிச்சயம் முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார்.''

ராஜ கண்ணப்பன்
ராஜ கண்ணப்பன்

``பேருந்துப் பயணியின் காலில் பாலை ஊற்றி பாத பூஜை நடத்துவது, அரசு விழாவில் பூமி பூஜை நடத்துவது போன்ற பழக்கங்கள் திராவிட மாடல் ஆட்சியிலும் தொடரலாமா?''

``தமிழ்நாட்டில் மட்டும் அரசு ஊழியர்கள் 14 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவரவருக்கென்று தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன.

திராவிட அரசியல், 'அனைவருக்கும் சமமான உரிமை; ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக் கூடாது' என்பதை உயிர்மூச்சாகக் கொண்டது. தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்த திராவிட சித்தாந்தத்தின் மீது 100 விழுக்காடு நம்பிக்கைகொண்டவர். எனவே, அந்தப் பாதையிலிருந்து ஒரு நாளும் அவர் விலகிவிட மாட்டார்.

அதேசமயம் பொதுமக்கள் சார்ந்த விஷயங்களில், அந்த மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துதான் போகவேண்டியிருக்கிறது. அந்தவகையில்தான், இது போன்ற விழாக்களில் கலந்துகொண்டு மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றனர் தி.மு.க தலைவர்கள்.''