Published:Updated:

``மது அடிமைகள், அரசு மருத்துவமனைக்கு வரலாம்!'' - சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

100 ரூபாய் சரக்கை, கள்ளச் சந்தையில் 300 ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்ற அளவுக்கு போதையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் மதுப்பிரியர்கள்.

21 நாள் ஊரடங்கின் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு யுகமாக கழிகிறதென்றால், 'குடி'மகன்களின் நிலையோ பரிதாபம்! குடிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொள்வதும், கள்ளச் சாராயத்தைத் தேடி ஓடுவதுமாக செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.

மதுப் பிரியர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு சரக்கு விற்போர் ஒருபுறம் என்றால், வெறும் `சுக்கு காபி'யை மது என்று கூறி 300 ரூபாய் விலைக்கு விற்று மோசடி செய்பவர்கள் இன்னொரு புறமுமாக குடிமகன்களைக் கதறவைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே, புதுக்கோட்டையில் மதுவுக்கு மாற்றாக `ஷேவிங் லோஷனை'க் குடித்து மூன்றுபேர் இறந்தும்விட்டனர். மதுரை ஒத்தக்கடையில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்துவந்தவரிடமிருந்து லஞ்சமாக `சரக்கு' பாட்டிலை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் ஜூட் விட்ட தலைமைக் காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டின் நிலை இதுவென்றால், கேரளாவில் குடிக்கமுடியாத விரக்தியில் அடுத்தடுத்து குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ள, அரண்டுபோன அம்மாநில அரசு, மருத்துவர்களின் ஆலோசனையோடு குடிமகன்களுக்கு மது விநியோகிக்க `சிறப்பு பாஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், கேரள உயர் நீதிமன்றமோ அரசின் `பாஸ்' சிஸ்டத்துக்கு இடைக்கால தடை விதித்துவிட்டது. இதற்கிடையே, நாடு முழுக்க குடிப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இப்படி நாடெங்கும் மதுப் பிரியர்கள் திண்டாடிவரும் வேளையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ``குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போனவர்களின் நிலையைக் கருத்திற்கொண்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் 'மறுவாழ்வு மையங்களை'த் திறக்க வேண்டும்'' என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்துப் பேசும் கே.எஸ்.அழகிரி, ``சுதந்திர இந்தியாவில் நாடு முழுக்க மது விற்பனை அமலில் இருந்தபோதும்கூட தமிழ்நாடு, குஜராத் என இரண்டு மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்ற வகையில் குஜராத்தும், மதுவின் தீமையை நன்கு உணர்ந்திருந்த பெருந்தலைவர் காமராஜின் சீரிய முயற்சியினாலும் மட்டுமே இத்தகைய மதுவிலக்கு சாத்தியமாகியிருந்தது.

ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையையே சீரழித்துவிட்டோம். இப்போதும்கூட, கொரோனா என்ற கொடிய நோய்க்கொல்லியினாலும் சிறியதொரு நல்லது நடந்திருக்கிறது என்றால், அது இந்த ஊரடங்கு நாள்கள் முழுவதும் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதுதான்.

`கபசுர குடிநீர் #Corona-வைக் கட்டுப்படுத்துமா?!’ -தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பதில்
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஆனாலும் ஏற்கெனவே குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிப்போனவர்கள் திடீரென இப்பழக்கத்தை விட்டுவிட முடியாமல், கள்ளச் சாராயத்தைத் தேடி அலைகின்றனர். குடிக்க முடியாத விரக்தியில் வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினர்களை அடித்து உதைக்கின்றனர். இந்தக் கொடுமைகளையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், உடனடியாக இவர்களுக்கான மறுவாழ்வு மையங்களை அரசு திறக்க வேண்டும். மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிப்போனவர்களை மீண்டும் நல்வழிக்குத் திருத்திக் கொண்டுவருவதற்கான நல்லதொரு வாய்ப்பாக இந்த ஊரடங்கு காலகட்டத்தை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க, தற்போது செயல்பட்டுவரும் தனியார் மறுவாழ்வு மையங்களோடு அரசும் மையங்களை ஏற்படுத்தி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சையை அளித்தால் மட்டுமே நிரந்தரமாக `மது விலக்கை' அமல்படுத்துவதற்கான சூழ்நிலை கனியும். எனவே, அரசு மருத்துவமனைகள் தோறும் `மறுவாழ்வு மையம்' என்ற புதிய வார்டை உருவாக்க வேண்டும்'' என்றார் அழுத்தமாக.

தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லப்பாண்டியன், ``தமிழ்நாட்டில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர். வருடம்தோறும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, அதை செய்தியாகவும் வெளியிட்டு பெருமையடையும் தமிழ்நாடு அரசு, இந்த மதுப் பழக்கத்தால், பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை மட்டும் திட்டமிட்டு மறைத்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில், மது கிடைக்காமல் அவதியுறுவோரின் துயரங்கள் சொல்லி மாளாது.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்

100 ரூபாய் சரக்கை, கள்ளச் சந்தையில் 300 ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்ற அளவுக்கு போதையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். திடீரென குடியை நிறுத்தும்போது கை - கால் நடுக்கத்தில் ஆரம்பித்து, தூக்கமின்மை, மன உளைச்சல், கோபம் - வெறி என பல்வேறு பக்கவிளைவுகளுக்கு மதுப்பிரியர்கள் ஆளாகிவிடுகிறார்கள். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் கேரள அரசு, அவசியம் ஏற்படுவோருக்கு மருத்துவர் பரிந்துரையோடு மது வழங்க முடிவெடுத்தது. ஆனால், கேரள மருத்துவத்துறை அதிகாரிகள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

குடி நோயாளிகளின் நிலையை உணர்ந்து கேரள முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார். ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி ஐயா இதுவரை எங்கள் பிரச்னை பற்றிப் பேசக்கூட மறுக்கிறார். தமிழ்நாட்டில், குடிநோயாளிகளும் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினம் தினம் தங்கள் அவஸ்தைகளைச் சொல்லி எங்கள் அமைப்புக்கு வரும் செல்பேசி அழைப்புகளே இதை உறுதிசெய்கின்றன.

அரசின் அனுமதியோடு மது வழங்க முடியாத சூழல் தமிழக அரசுக்கு இருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டிருப்போருக்கு உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை கொடுத்து போதையின் பிடியிலிருந்து மதுப் பிரியர்களையும் துன்பத்தின் பிடியிலிருந்து அவர்தம் குடும்பத்தினரையும் மீட்டெடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, மாநிலம் முழுக்க குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களை உடனடியாகத் திறந்து, செயல்படவைக்க வேண்டும்'' என்றார் குமுறலாக.

`ஒரேநேரத்தில் 1,500 பேருக்கு விருந்து; கொரோனா தொற்று' - துபாய் ரிட்டர்ன் இளைஞரால் கலங்கும் ம.பி
டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திடீரென அப்பழக்கத்தை நிறுத்துகிற சூழலில் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, ``தீவிர குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்கள் திடீரென அப்பழக்கத்தை நிறுத்தும்போது பல்வேறு பக்கவிளைவுகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. `டெலிரியம் ட்ரமென்ஸ்' (Delirium Tremens) என்று அழைக்கப்படும் இந்தப் பாதிப்பு கொண்டோருக்கு கை - கால் நடுக்கம் மற்றும் பரபரப்பு, கோபம் ஆகிய அறிகுறிகள் தென்படும். சிலருக்கு உடனடி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. எனவே, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள இந்தச் சூழலில், மது குடிப்போரின் உடல் நிலையையும் கருத்திற்கொண்டு, தமிழக அரசு `மறுவாழ்வு மையங்'களைத் திறந்து சிகிச்சையளிக்க வேண்டும்'' என்றார்.

இந்த நிலையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களுக்கான மருத்துவச் சிகிச்சையின் அவசியம் குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷிடம் பேசினோம்...

``ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய சர்க்கரை நோயாளிகள் மற்றும் கர்ப்பகால சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டிய பெண்கள் போன்றோருக்கு உரிய சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் தற்போதும் செய்துவருகிறோம். இந்த வரிசையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான சிகிச்சையும் ஒவ்வோர் அரசு மருத்துவமனையிலும் இப்போதும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

எனவே, தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்கள் எப்போதும்போல், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு நலம்பெற முடியும். அதேசமயம், போதையின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கான `மறுவாழ்வு மையங்கள்' இந்த ஊரடங்கு காலகட்டத்தில் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு'' என்கிறார் பீலா ராஜேஷ்.

அடுத்த கட்டுரைக்கு