Published:Updated:

'ஒன்றிய அரசு முதல் பெரியார் வரை...' ஆளுநர் உரையில் பாஜக-வைச் சீண்டியதா ஸ்டாலின் அரசு?

ஆளுநர் உரை

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பெரியார், ஒன்றிய அரசு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பா.ஜ.க எதிர்க்கும் பல்வேறு அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சேர்ந்திருந்ததன் நோக்கம் என்ன?

Published:Updated:

'ஒன்றிய அரசு முதல் பெரியார் வரை...' ஆளுநர் உரையில் பாஜக-வைச் சீண்டியதா ஸ்டாலின் அரசு?

ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பெரியார், ஒன்றிய அரசு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பா.ஜ.க எதிர்க்கும் பல்வேறு அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சேர்ந்திருந்ததன் நோக்கம் என்ன?

ஆளுநர் உரை

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள தி.மு.க அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கொரோனா நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல், விலையேற்றம் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. மாநில சுயாட்சி, மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அம்சங்கள், பொருளாதாரத்தைச் சீரமைக்கக் குழு, கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க நிதி ஒதுக்கீடு, புதிய மருத்துவமனைப் பணிகளை விரைவாக முடிப்பது, ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை, சேவைகள் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும், லோக் ஆயுக்தா அமைப்புக்குப் புத்துயிரும் உரிய அதிகாரமும் அளிக்கப்படும், வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது அந்த உரை. இவற்றையெல்லாம்விட ஆளுநர் உரையில் மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டிருந்தது, 'மாநில சுயாட்சி' என்ற திராவிடச் சிந்தனைகளை பா.ஜ.க-வின் அரசியல் பின்னணியில் வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைப் பேசவைத்திருப்பதுதான் தற்போது அரசியல் தளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பெரும்பாலும் ஆளுநர் உரைகள் ஆளும் அரசு செய்ததை ஆகா, ஓகோவெனப் புகழ்ந்தும், அதேநேரத்தில் செய்யப் போகிற திட்டங்கள் குறித்துப் பெருமை பேசுவதாகவும், ஆளும் அரசின் மொழியிலேயே இருக்கும். அதை ஆளுநர் வாசித்துவிட்டுச் செல்வார். அப்படித்தான் பன்வாரிலால் புரோஹித்தின் உரையையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் புதிய திட்டம், நவீன திட்டம், ஆட்சியாளர்களுக்குப் பிடித்த வாசகங்கள் என்கிறபடி இல்லாமல், ஓர் அரசாங்கம் இயல்பாகவே தன் கொள்கையாக வைத்திருக்க வேண்டிய விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த ஆளுநர் உரை அமைந்திருந்ததுதான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த உரையைக் கடுமையாக விமர்சித்தும்வருகின்றன.

ஆளுநர் உரையில் பெரியார் குறித்தும், மாநில சுயாட்சி பற்றியும் இடம்பெற்றிருந்தது பா.ஜ.க-வைச் சீண்டவா என திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினோம். ``தி.மு.க-வின் அடிப்படையான நோக்கமே சமத்துவமும் சமூகநீதியும் உள்ள சுயமரியாதையான சமூகத்தை உருவாக்குவதுதான். அதுதான் மிகவும் முக்கியமானது. ‘எந்த மனிதனும், யாருக்கும் குறைந்தவர் இல்லை. பிறப்பால் பிரிவினை பார்க்கக் கூடாது’ என்ற பெரியாரின் கொள்கைகளை ஆளுநர் உரையில் தங்கள் ஆட்சியின் கொள்கையாக தி.மு.க அறிவித்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியான ஒன்று. 'மாநில சுயாட்சி' என்ற அடிப்படையில்தான் தி.மு.க அரசு ஆளுநர் உரையையே தயாரித்திருக்கிறது. மத்திய அரசு, நடுவண் அரசு என்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் தவறு. மத்தியில் இருப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான ஒன்றிய அரசு என்பது ஆளுநர் உரையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. தற்போது தி.மு.க அரசு சொல்லிவரும் ஒன்றியம் என்பதையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் ஒரு புள்ளியில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

விடுதலை ராஜேந்திரன்
விடுதலை ராஜேந்திரன்

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குவார்கள் என நம்புகிறேன். அதுதான் சுயமரியாதை, சுயாட்சி என்பதன் முழு அர்த்தத்தைக் கொடுக்கும். ‘எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் இன்பத் தமிழகத்தை உருவாக்குவோம். திராவிடத் தத்துவம்தான் இந்த ஆட்சியின் கொள்கை’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவார்த்த பின்புலம் என்ன, எதன் அடிப்படையில் தன்னைக் கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறது என்பதைத்தான் இந்த ஆளுநர் உரை பிரதிபலிக்கிறது” என ஆளுநர் உரையின் தன்மை குறித்து விளக்கினார்.

ஆளுநர் உரை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``பெரியார் விரும்பிய சுயமரியாதைச் சமூகத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டது மிக முக்கியமான விஷயம். அ.தி.மு.க ஆட்சியில் பெரியார் என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள். அண்ணா பெயரையே குறிப்பிடாதவர்கள், பெரியார் பெயரைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறுதான். `அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி’ என்று அவ்வப்போது சொல்வார்கள். பா.ஜ.க உடனான உறவை பாதிக்கும் என்பதால் மாநில சுயாட்சி, கூட்டாட்சி என்ற சொற்களையெல்லாம் தவறிக்கூட சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க-வுக்கு அடங்கிப்போனார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்கும்விதமாகத்தான் இந்த ஆளுநர் உரையையே தயாரித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஆட்சிக்கு வந்தே 45 நாள்கள்தான் ஆகியிருக்கின்றன. ஆளுநர் உரையில் சொல்லப்பட்டிருக்கும்ம் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில் நான் முக்கியமாகப் பார்ப்பது ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை அழுத்தமாகச் சொன்னதோடு, மாநில சுயாட்சிக்குச் சிக்கல் வந்தால் அதை எதிர்த்து நாங்கள் குரல் கொடுப்போம் என்று சொன்னதும்தான். ஒன்றிய அரசுடன் நல்லுறவுடன் இருக்கிறோம் என்று சொன்னால் கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு நல்லுறவைப் பேணுவோம் என்ற முந்தைய வரியையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் இந்த ஆளுநர் உரை எந்த அளவுக்குத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணர முடியும்.

பேராசிரியர் அருணன்
பேராசிரியர் அருணன்

தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். மாநில அரசுப் பணிகளில் தமிழர்களுக்கும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும்தான் முன்னுரிமை என்று அறிவித்திருப்பது நீண்ட நாள்களாக நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அறிவிப்பு என்றாலும், இதற்கு எதிராக முந்தைய அரசு வெளியிட்ட அறிவிப்புகளை ரத்து செய்வோம் என்று அறிவித்திருப்பது எதிர்பாராத ஒன்று. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் எனப் பல அம்சங்கள் கவனிக்கும்படியாக இருந்தன. ஆனால், குடியுரிமை சட்டம் குறித்து ஆளுநர் உரையில் ஏதும் இல்லாததது எனக்கு ஏமாற்றமாக இருந்தது” என உரையில் தான் விரும்பிய மற்றும் தனக்கு ஏமாற்றம் தந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாராயணன் திருப்பதி, ``ஆளுநரின் உரை முழுக்க முழுக்க தமிழிலிருந்தது. அந்த உரையில் சொல்லப்பட்டதெல்லாம் ஈ.வெ.ரா சொன்னது தொடங்கி தமிழையும், தமிழர்களையும் காப்பாற்றிய பல அறிஞர்கள் வரை சொன்னவற்றைத்தான் தற்போது ஆளுநர் உரையில் சேர்த்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அண்ணாதுரை, அதற்குப் பின் கருணாநிதி என ஆட்சியிலிருந்தவர்கள் ஈ.வெ.ரா-வை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அவர் தொடர்பாக அவர்கள் வைத்த விமர்சனங்களையும் சேர்த்தேதான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மற்றபடி ஆளுநர் உரையில் அவர் பேசியிருப்பவை பற்றி பெரிய அளவில் விமர்சனத்துக்கு உட்படுத்தும்படி ஏதும் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.