Published:Updated:

``ஸ்டாலின் கட்டுப்பாடான தலைவர்; பொதுக்குழுவில் அவர் பேசியது..!” - மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு சர்ச்சை, டெங்கு பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வாடகைத்தாய் சர்ச்சை, அ.தி.மு.க-வின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

``ஸ்டாலின் கட்டுப்பாடான தலைவர்; பொதுக்குழுவில் அவர் பேசியது..!” - மா.சுப்பிரமணியன் சொல்வதென்ன?

தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு சர்ச்சை, டெங்கு பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வாடகைத்தாய் சர்ச்சை, அ.தி.மு.க-வின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு இருப்பது உண்மையா?"

"இரண்டு மாதங்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால், அது அப்போதே சரிசெய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 32 மருந்துக் கிடங்குகளில் தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பு இருக்கின்றன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவு மருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி யாரேனும் அவர்கள் பகுதியில் மருந்துத் தட்டுப்பாடு என்று சொன்னால், அவர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் நேரடியாக மருந்து கிடங்குகளுக்குச் சென்று மருந்து இருக்கிறதா, இல்லையா என்பதை சோதனை செய்துகொள்ளலாம்."

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"தட்டுப்பாடு இல்லை என்று சொல்கிறீர்கள்... பிறகு இந்தச் சர்ச்சை கிளம்பக் காரணம் என்ன?"

"அது குறித்து விசாரணை செய்யப்பட்டது. மருந்துக் கிடங்குகளில் நீண்ட ஆண்டுகளாக பணியாற்றிய சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் கிளப்பிவிட்ட செய்தி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அடித்துச் சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு என்பது இல்லவே இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத் தேவையான கூடுதல் மருந்துகளை முதலமைச்சர் காப்பீட்டு நிதி மூலம் வாங்கிக்கொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யாராவது அரசு மருத்துவமனையில் இல்லை என்று சொன்னால் 104-க்கு புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்."

"அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீடு திட்டம் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறதே?"

"கண்டிப்பாகக் கிடையாது. முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதய அறுவை சிகிச்சை முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மக்கள் பயன்பெற்றுவருகிறார்கள். மருத்துவர்கள் காப்பீடு அட்டை வாங்கக் கட்டாயப்படுத்தவேண்டிய அவசியமே கிடையாது. அது அவர்களுக்குக் கூடுதல் பணிச்சுமைதான். காப்பீடு அட்டை இல்லாத மக்கள் அனைவரும் கண்டிப்பாகக் காப்பீடு அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். ஏதாவது ஒரு மருத்துவ அவசரம் என்னும் நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கக்கூட மிகவும் அது உதவியாக இருக்கும்."

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"மீண்டும் தி.மு.க தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்...?"

``கலைஞர் மிகப்பெரிய அளவில் இந்தக் கழகத்தை வழிநடத்தினார். அதைத் தொடர்ந்து, ஒரு தலைவன் எப்படிச் செயல்பட வேண்டும். தொண்டர்களை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு தலைமைப் பண்புடன், மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் தளபதி இருந்துவருகிறார். இரண்டு முறை அல்ல... இருபது முறை அவர் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டாலும், அது எங்கள் இயக்கத்துக்கு வலுசேர்க்கும். தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷயமாக இருக்கும்."

" `தி.மு.க-வில் தலைவர்களின் பேச்சை அமைச்சர்கள் கேட்பது கிடையாது’ என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே..."

"அது மிகவும் தவறு. தளபதி மிகவும் கட்டுப்பாடான தலைவர். ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கைகொண்டவர். அனைத்து அமைச்சர்களும் அவர்மீது அளவுகடந்த அன்பையும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள். அவர் தலைவர், அவரின் கீழ் கழகத்தில் பணியாற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது. பொதுக்குழுவில் அவர் பேசியது, ஒரு குடும்பத்தில் மற்றொருவர் செய்வதைச் சுட்டிக்காட்டுவதுதானே தவிர வேறொன்றும் இல்லை."

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"சென்னையின் மழைநீர் கட்டமைப்பு சரிசெய்வதில் பெரும் சிக்கல் நீடிப்பது எதனால்?"

"சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட இந்த 340 வருடங்களில் சென்னையில் மழைநீர் வடிகால் நீளம் கிட்டத்தட்ட 2,100 கிலோமீட்டர். ஆனால், இந்த ஒரு வருடத்தில் மட்டுமே 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் நகரம் முழுவதும் பணிகள் நடைபெறுவதால் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டைப்போல, பெருமழை பெய்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் கண்டிப்பாக 80 சதவிகிதம் பலன் தரும்."

"பருவமழை தொடங்கவிருக்கிறது, இந்தச் சமயத்தில் வரும் டெங்கு போன்ற நோய்களுக்கான சுகாதாரத்துறை சார்பில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?"

``இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு ஆகிய மூன்று துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட துறை சார் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கால்வாய் தூர்வாருதல், கொசு மருந்து அடிப்பது முதல் மருத்துவ முகாம்கள் நடத்துவது வரை இந்த மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பாகவே இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது இதுவே முதன்முறை. டெங்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்ப் பரவலுக்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது."

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"தமிழ்நாட்டில் வாடகைத்தாய் திட்டம் கண்காணிக்கப்பட்டுவருகிறதா?"

``தமிழ்நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதுபோக, அந்தந்தப் பகுதி மருத்துவத்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டுவருகிறார்கள். யாரேனும் விதிமுறைகளை மீறிச் செயல்படுவது தெரியவந்தால், அவர்கள்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசுத் தரப்பிலும் இரண்டு கருத்தரித்தல் மையங்கள் ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன."

"தமிழகத்தில் சமீபத்தில் அதிக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்களே?"

"பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட காய்ச்சல்தான். சில குழந்தைகளுக்கு இன்ஃபுளுயென்சா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதே சமயத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட தற்போது மிகவும் குறைவுதான். உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம். அந்தச் சமயத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் 1,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போதுவரை அதே எண்ணிக்கையில் முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவமனைகளைக்கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்குச் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பரிசோதனை செய்திருக்கிறோம்."

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

"தமிழ்நாடு மருத்துவத்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன... என்னென்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?"

"தமிழகத்திலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுமே அரசு மருத்துவமனைகளுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும் என்பதுதான்."