Published:Updated:

``இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு!" - குற்றம்சாட்டும் பாஜக அண்ணாமலை

ஸ்டாலின் - அண்ணாமலை

``தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பது ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காணமுடிகிறது." - அண்ணாமலை

``இந்தியாவின் கஞ்சா தலைநகரம் தமிழ்நாடு!" - குற்றம்சாட்டும் பாஜக அண்ணாமலை

``தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பது ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காணமுடிகிறது." - அண்ணாமலை

Published:Updated:
ஸ்டாலின் - அண்ணாமலை

இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு இருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதையால் ஏற்படும் சமூக சீரழிவுகளை செய்திகளின் வாயிலாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பது ஆபரேஷன் கஞ்சா 1.0, 2.0, 3.0 என்று நமது காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காணமுடிகிறது.

ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை பயன்பாட்டுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தார். எடுத்த மூன்றாவது நாள் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 273.9 கோடி ரூபாய்க்கு மது விற்று புதியதோர் சாதனையை செய்தது தமிழ்நாடு அரசு. போதையை ஒழிப்பதில் தமிழ்நாடு அரசின் தீவிரத்தை மக்கள் கண்டு மெய்சிலிர்த்து போன தருணம் அது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி, திறனற்ற தி.மு.க அரசின் இயலாமையை மீண்டும் ஒரு முறை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். மது ஆலை நடத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டி.ஆர்.பாலு, திரு ஜெகத்ரட்சகன் அவர்களையும் உடன் அமர்த்திக்கொண்டு பத்திரிகையாளர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

17-ம் நூற்றாண்டு முதல் இயங்கி வரும் முந்த்ரா துறைமுகத்திலிருந்துதான் இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் போதைப்பொருள் செல்கிறது என்பன போன்ற வாட்ஸ்அப் பொய் தகவல்களை ஒரு அமைச்சர் கூறுவது வேடிக்கை. அது மட்டுமல்லாது இந்த துறைமுகம் கடந்த 8 ஆண்டுகளில்தான் தனியார் மயமாக்கப்பட்டதை போன்றும் பேசியுள்ளார் அமைச்சர். 1998-ம் ஆண்டு முதல் முந்த்ரா துறைமுகம் தனியார்மயம் ஆகிவிட்டது என்பதுகூட அமைச்சருக்கு தெரியாதா?

போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த புள்ளி விவரத்தின்படி 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட கோகைனின் அளவு வெறும் 0.05 கிலோ ஆகும். பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து கடத்தி கொண்டுவரப்படும் போதைப்பொருள் இதுவே. தமிழ்நாட்டில் பெரிய அளவில் புழக்கத்தில் இருப்பது கஞ்சா.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்ற குற்றத்துக்காக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 742. டிசம்பர் மாதம் 2020-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 771. டிசம்பர் மாதம் 2021-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,558.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் கைது அதிகமாகிவிட்டது என்று பெருமைபட்டுக்கொள்ளும் அமைச்சர், தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்புதான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதை உணரவேண்டும்.

அண்ணாமலை
அண்ணாமலை

நான்கு வாரங்களுக்கு முன்பு 2 கிலோ கஞ்சா கடத்திய தி.மு.க பிரமுகர் திருச்சி அருகே கைதுசெய்யப்பட்டார் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உங்கள் கவனத்திற்கு முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வருடம் ஜனவரி மாதம் தி.மு.க நிர்வாகி போதைப்பொருளுடன் ஆந்திராவில் பிடிபட்டார் என்ற செய்தி உட்பட பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பிடிபட்ட நிர்வாகி உபயோகித்த வாகனம் தூத்துக்குடியில் பதியப்பட்டதாகும். இப்படி தூத்துக்குடியிலிருந்து போதைப்பொருள்கள் கடத்தப்படுகிறது என்று வேறு மாநிலத்தவர் குற்றம்சாட்டினால் அது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவு?

கடத்திச் செல்லும் நபர்களை மட்டும் கைதுசெய்து வரும் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, எங்கிருந்து இந்த கஞ்சா வருகிறது... அதை எப்படி முடக்குவது என்பதை ஆலோசிக்காமல் தமிழ்நாட்டை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் தி.மு.க அரசின் சாதனை. மது விற்று தனி நபர் ஒருவரிடம் ஆண்டுக்கு 5,000 ரூபாய் வரை கொள்ளையடிக்கும் தி.மு.க அரசு இந்தியாவில் முதல் இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. டாஸ்மாக் மூலமாக மது விற்று ஒவ்வொரு தமிழனிடமும் சராசரியாக சென்ற ஆண்டு மட்டும் 5,000 ரூபாய் வசூல் செய்த அரசு போதையை ஒழிக்கும் என்று எப்படி நம்புவது?

தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மேல் பழி போடுவதை தி.மு.க நிறுத்திக் கொள்ளவேண்டும். முதலில் தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணாமலை.