Published:Updated:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா: நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கிறதா திமுக அரசு?!

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா

இந்த சட்டமசோதா `நிலம், நீர்நிலைகள், நீரோடைகள், ஏரி குளங்களை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகத் தாரைவார்க்கும் திட்டம்' எனக் குற்றம்சாட்டுகிறார்கள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர்.

Published:Updated:

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா: நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்க்கிறதா திமுக அரசு?!

இந்த சட்டமசோதா `நிலம், நீர்நிலைகள், நீரோடைகள், ஏரி குளங்களை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகத் தாரைவார்க்கும் திட்டம்' எனக் குற்றம்சாட்டுகிறார்கள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தின் கடைசி நாளான 21.04.2023 அன்று, பல்வேறு துறைகளைச் சார்ந்த 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், `மாநிலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்தும் வகையிலான, `தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட மசோதாவை (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) அறிமுகம் செய்து நிறைவேற்றினார்.

இந்தநிலையில், இந்த சட்டமசோதா `நிலம், நீர்நிலைகள், நீரோடைகள், ஏரி குளங்களை சிறப்பு திட்டங்கள் எனும் பெயரில் தனியார் பெரு நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமாகத் தாரைவார்க்கும் திட்டம்' எனக் குற்றம்சாட்டி பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, ``தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிமுகம் செய்த இந்த சட்டமசோதா எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்கிற வகையில் கண்டிக்கப்பட வேண்டியது. நீர்நிலைகள், நீரோடைகள், வாய்க்கால் ஆகியன அமைந்துள்ள 100 ஏக்கருக்கு குறையாத நிலங்களைச் சிறப்புத் திட்டம் என்னும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருங்கிணைத்து வாரிக்கொடுக்கவே தமிழ் நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்பு திட்டங்கள்) சட்டம் (Tamil Nadu Land Consolidation (for Special Projects) Act, 2023) என்னும் புதிய சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மசோதாவிற்கான நோக்கக் காரண விளக்கவுரையில் நிலமானது மாநிலத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், பரிமாற்றம், உரிமை மாற்றம், ஒப்படைப்பு, குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக தோன்றியுள்ளன. உள்ளாட்சி அமைப்பு சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களால் நிலங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளில் அரசு நிலத்திற்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிர்வாக உத்தரவுகள், குறிப்பாணைகளை பிறப்பிப்பதால் நிலத்தை ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது நேரம் மற்றும் பண இழப்புக்கு வழிவகுக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டு போக்கை மாற்றிக் கொள்கின்றன. இவை பொதுநலன் கருதி பாதுகாக்கப்பட வேண்டும். தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக் கொண்டால், அந்த நிலத்திற்கான அரசின் முடிவின்படி, வருவாய் வாரியத்தின் நிலையாணை அடிப்படையில் அதை வழங்க வேண்டும். இந்த நிலப்பரிமாற்ற முறையை சட்டப்பூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், நீர்நிலையை பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மசோதாவின்படி 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு(water storage) குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்கிற உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என இம்மசோதா கூறுகிறது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசு மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அதைக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை உருவாக்கும். நான்கு அரசு அதிகாரி, ஒரு அரசால் பரிந்துரைக்கப்படும் சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் கொண்ட அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அந்த வரைவு திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும்.

இந்த நடைமுறை முழுவதும் முழுக்க முழுக்க திட்டங்களுக்குச் சாதகமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும் அமைந்துள்ளது. திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை நிபுணர் குழு நினைத்தால் தள்ளுபடி செய்யலாம் என்கிற வாய்ப்பே இங்கு இல்லை. அரசு ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கேயும் திட்டத்தை சூழல் பாதிப்பு அதிகமிருக்கும் என்றால் நிராகரிக்கலாம் என்கிற சரத்தே இல்லை.

மேலும் இந்த ஒட்டுமொத்த மசோதாவிலும் அரசு ஒரு நீர்நிலையை, ஓடையை, வாய்க்காலை அதன் சூழல் முக்கியத்துவத்துடன் அணுகவில்லை என்பது தெளிவாகிறது. ஒரு நீர்நிலை என்பது தனித்த சூழல் அமைவு கிடையாது. அருகிலுள்ள வேளாண் நிலத்தோடோ, மேய்ச்சல் நிலத்தோடோ அல்லது கால்நடைகளுக்கு நீர் ஆதரமாகவோ எனப் பல பயன்பாடுகளை உள்ளடக்கிய பெரும் சூழல் சங்கிலியின் கண்ணியாக நீர்நிலை உள்ளது. நீர்நிலையை மட்டும் வைத்துவிட்டு அதனைச் சுற்றியுள்ள நிலங்களின் பயன்பாட்டை மாற்றுவது அந்த நீர்நிலையின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தமிழகத்தின் நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள்

கடந்த ஆண்டு நடந்த உயிர்ப்பன்மையத்துக்கான உச்சிமாநாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் உலகின் 30% நிலத்தை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாக்க எத்தனையோ உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன. இவை அனைத்திற்கும் எதிராக அமைந்துள்ளது இச்சட்ட மசோதா. மேலும் நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள் மற்றும் ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் இந்த சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. எனவே உடனடியாக இச்சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்!" என கோரிக்கை வைத்திருக்கிறது.

அதேபோல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``முழுவதுமாக வணிக நோக்கில் மட்டுமே கொண்டுவரப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பரப்பலகில் இருக்கும் நீர்நிலை வகைப்பாடு குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லாதது, நீர்வளம் குறித்தத் தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையையே உணர்த்துகிறது. தடம் மாறும் நீர் நிலைகளைக் கொண்ட நிலங்களை அரசு எடுத்துக் கொள்ளும் என்பது போன்ற நம்பிக்கையளிக்கும் பிரிவு இச்சட்டத்தில் இருந்தாலும்கூட அப்படி எடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் தொகுக்கப்பட்டு வணிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்படாது என்று எந்த உத்தரவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

பரந்தூர் வானூர்தி நிலையம் அமைப்பது போன்று அரசு தன் தேவைக்காகவும், மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் எளிமையாக நிலம் கொடுப்பதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீர்நிலைகள் மீது அக்கறை இன்றி, அவசரமாக இயற்றப்பட்டிருக்கும் இச்சட்டம் அடிப்படையிலேயே முழுமையற்று அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் இச்சட்டத்தினை நாம் தமிழர் கட்சி முற்றுமுழுதாக எதிர்க்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமிழ்த்தேசியப் பேரியக்கமும், `தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம் – 2023 உண்மையில், பெருங்குழும நிறுவனங்கள் நீர்நிலைகளையும் சேர்த்து, விழுங்கிக் கொள்ளலாம் என்பதற்கு அரசு வழங்கும் உரிமம்தான்' என குற்றம்சாட்டியிருக்கிறது. இதுகுறித்து த.தே.பே வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பரந்தூர் பகுதி மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்கள் விளை நிலங்களையும், அங்கே பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதை எதிர்த்து வாழ்வா, சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து ஊர்களில் இருந்துகூட இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கூடிவிடாமல், காவல்துறை முற்றுகையில் அக்கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் தேசிய பேரியக்கம்: பெ.மணியரசன்!
தமிழ் தேசிய பேரியக்கம்: பெ.மணியரசன்!

இந்தக் கொடிய அடக்குமுறைக்கும், இருட்டடிப்புக்கும் இடையிலும் அம்மக்கள் விடாப்பிடியாக மண் காப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், இதுகுறித்து ஆய்வுக் குழு அமைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, இப்போது நிறைவேற்றி இருக்கிற நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் வழியாக பரந்தூர் பகுதியிலுள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட நிலங்களைப் பறிப்பதற்கான சூதான திட்டம் தீட்டியிருக்கிறது. இதுமட்டுமின்றி, இனி எந்த நிலப்பறிப்பையும், நீர்நிலை ஆக்கிரமிப்பையும் ``சிறப்புத் திட்டம்" என்ற பெயரால், தமிழ்நாடு அரசின் உதவியோடே தனியார் பெருங்குழுமங்கள் செய்ய முடியும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவலை குரல்களுக்கு திமுக அரசு என்ன பதில் சொல்லப்போகிறதோ?!