''முதல்வரின் அறிவுறுத்தலின்படி எடப்பாடி பழனிசாமியை நானே தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். ஆனால், `கலந்தாலோசித்துவிட்டு முடிவு சொல்கிறேன்’ என்று கூறிய எடப்பாடியார், என்னிடம் பதில் தெரிவிக்காமல், சட்டமன்றச் செயலாளரிடம் `நாங்கள் விழாவில் கலந்துகொள்ள மாட்டோம்’ எனத் தெரிவித்துவிட்டார்" சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை, அதிமுக புறக்கணித்தது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அளித்த பதில்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவும் கடந்த இரண்டாம் தேதி சென்னையில் நடைபெற்றன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்துவைத்தார். இந்த விழாவுக்கு, தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அந்தக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதற்கான காரணங்களையும் அடுக்கினார்.

''தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1937-ம் ஆண்டு நடைபெற்றது. சட்டமன்ற பொன்விழா கொண்டாடவிருந்த நேரத்தில், அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, அப்போது அந்த விழாவை நடத்த முடியவில்லை. இந்தநிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அப்போது, இரண்டு வருடங்கள் கழித்து 1989-ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. 1937-ம் ஆண்டைக் கணக்கிட்டுத்தான், அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் பொன்விழா கொண்டாடப்பட்டது. அப்படிப் பார்த்தால் 2037-ல்தான் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. எனவே, தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் முரண்பாடு இருக்கிறது'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஜெயக்குமாரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க தரப்பில் விளக்கமும் தரப்பட்டது. ஆனாலும், அ.தி.மு.க-வினர் யாரும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்தநிலையில், தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேள்வியெழுப்ப,
'' "முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாக்கு அவர்கள் அழைப்பிதழ் மட்டுமே கொடுத்தனர். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. இந்த விழா திட்டமிடலின்போதே, முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து, `இந்த விழாவை எதிர்க்கட்சிகளின் தோழமையோடும், அனுசரணையோடும் நடத்தப்பட வேண்டும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அழைத்துப்பேசி இந்த விழாவில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும்’ எனக் கூறினார். மேலும், `அவருக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர் அமர்ந்திருக்கும் வரிசையில் அவர்களுக்கு அருகிலே இருக்கை ஒதுக்கப்பட்டு, வாழ்த்துரை வழங்கவும் இடமளிக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார்'' என்று துரைமுருகன் விளக்கமளித்தார்.

துரைமுருகனின் விளக்கம் குறித்து, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்.
``மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தபோது, சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த ஜெ.அன்பழகன் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அம்மா மறைந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தி.மு.க-வினர் எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள் என்பதை நாடறியும். அதையெல்லாம் மறந்துவிட்டு தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பேசுகிறார். அதுமட்டுமல்ல, அம்மாவுக்கு எதிராக பொய் வழக்கைத் தொடர்ந்து, அதனால் அம்மா அடைந்த இன்னல்களை அ.தி.மு.க தொண்டர்கள் உயிருள்ளவரை மறக்க மாட்டார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவை ஒருபுறம் இருந்தாலும், படத்திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முறையாக அழைப்பு விடுக்கவில்லை. அண்ணா தி.மு.க பிரதான எதிர்க்கட்சி, அவர்கள் விழாவுக்கு வர வேண்டும் என்கிற அக்கறையோடு அவர்கள் நடந்துகொள்ளவும் இல்லை. அதேபோல சட்டமன்ற நூற்றாண்டு விழா என வரலாற்றையும் திரித்தார்கள். அதனால்தான் விழாவைப் புறக்கணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்'' என்றார் அவர்.
இது குறித்து, தி.மு.க-வின் சட்டத்துறை இணைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமனிடம் பேசினோம்.
''முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்பது மிகவும் தவறான ஒரு குற்றச்சாட்டு. அழைப்பிதழ் அடிப்பதற்கு முன்பாக, அதில் பெயர் போடுவது குறித்துக் கேட்பதற்காக, எடப்பாடி பழனிசாமியை அவை முன்னவர் தொடர்புகொண்டார். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து முறையான பதில் வரவில்லை. அவர்கள் விழாவுக்கு வர விரும்பவில்லை என்பது அப்போதே தெரிந்துவிட்டது. அதனால்தான், பத்திரிகையில் பெயர் போடவில்லை. கடைசி நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்து அவர்கள் விழாவில் கலந்துகொண்டிருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருப்போம். ஆனால், விழா நடப்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்பாக `நாங்கள் விழாவைப் புறக்கணிக்கிறோம்’ என ஜெயக்குமார் ஊடகங்களில் பேசினார்.

ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில் நாங்கள் கலந்துகொள்ளாததால், அவர்கள் புறக்கணிப்பதாகக் கூறினார். `நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை சட்டமன்றத்தில் திறப்பது சரியல்ல' என ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவில், தி.மு.க கலந்துகொள்ளாததற்கான காரணத்தை நாங்கள் பலமுறை விளக்கிவிட்டோம். நாங்கள் செல்லவில்லை சரி, பிரதமரோ, ஜனாதிபதியோ ஏன் ஜெயலலிதா அம்மையாரின் படத்தைத் திறக்க முன்வரவில்லை... சபாநாயகரைவைத்து ஏன் படத்தைத் திறந்தார்கள்... அதனால், தி.மு.க அன்று எடுத்த முடிவு என்பது வேறு, அ.தி.மு.க தற்போது எடுத்திருக்கும் முடிவு என்பது வேறு. கலைஞரின் படத்திறப்பு விழாவில், கலந்துகொண்டிருந்தால் எடப்பாடி பழனிசாமிக்குப் பெருமையே தவிர, எடப்பாடி பழனிசாமி வந்து கலந்துகொண்டிருந்தால் இந்த விழாவுக்குப் பெருமையல்ல. இந்த ஆண்டு, சட்டமன்ற நூற்றாண்டு விழா அல்ல என அ.தி.மு.க-வினர் பேசுவது அர்த்தமற்றது. எங்களை விடுங்கள்... ஆளுநர், ஜனாதிபதியின் உரைகளையாவது அ.தி.மு.க-வினர் தயவு செய்து கேட்க வேண்டும்'' என்கிறார் அவர்.