அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா - ஓவியங்கள் : சுதிர்

கடுப்பான ‘காட்பாடி கலைஞர்’!

‘கோபாலபுரத்து விசுவாசி’ என்று சட்டப்பேரையில் கல்லறைக் கதை பேசி, கண்ணீர் வடித்த அமைச்சருக்கு ‘காட்பாடியின் கலைஞர்’ என்று அவரின் ஆதரவாளர்கள் பட்டம் சூட்டியிருக்கின்றனர். இந்த நிலையில், அமைச்சரின் படத்தைக் கல்லறையுடன் சித்திரித்துவிட்ட அ.தி.மு.க ஐடி விங் நிர்வாகியை, போலீஸார் ஜெயிலில் அடைத்தனர். ஆனால், அடுத்த ஆறு நாள்களிலேயே ஐடி நிர்வாகிக்குப் பெயில் கிடைத்துவிட, ஜெயில் வாசலிலேயே அ.தி.மு.க-வினர் திரண்டு ஆளுயுர மாலை போட்டு அமர்க்களப்படுத்திவிட்டனர். ஜெயில், பெயில், மாலை, ஊர்வலம், சரவெடிக் கொண்டாட்டம் எனத் தொடர்ந்த இந்தச் செயலை சொந்தக் கட்சியினரும், காவல்துறையினரும் தடுக்கத் தவறிவிட்டதால், ‘எழுதுங்கள் என் கல்லறையில்... தி.மு.க-வினர் இரக்கமில்லாதவர்கள் என்று...’ என சோகமயமாகப் பாடிக்கொண்டிருக்கிறாராம் அமைச்சர்.

கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

“எதுக்கு இந்தத் தேவையில்லாத விளம்பரம்?”

‘நடப்பு பட்ஜெட்டில் திருச்சிக்குப் பிரத்யேக திட்டங்கள் எதுவுமில்லை’ எனக் கொதித்துக் கிடந்த திருச்சி மக்களை ஆறுதல்படுத்துவதற்காக, தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது, ‘திருச்சியில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும்’ என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ‘திருச்சி எம்.பி கோரிக்கையை ஏற்று டைடல் பார்க் அமைக்க உத்தரவிட்ட முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி!’ என்று கதர்க் கட்சியினர் திருச்சி முழுக்க போஸ்டர் அடித்து அதகளப்படுத்திவிட்டனர். ‘‘ஜெயிச்ச பின்னாடி தொகுதிப் பக்கமே தலைகாட்டாதவர், அவர் கோரிக்கை வெச்சு 600 கோடிக்கு டைடல் பார்க் வாங்கிக் கொடுத்தாரா... இதெல்லாம் கோபம் வரவெக்கிற காமெடி. திருச்சி எம்.பி சொன்னா, அவரோட கட்சிக்காரங்களே காதுகொடுத்துக் கேக்க மாட்டாய்ங்க. எதுக்கு இந்தத் தேவையில்லாத விளம்பரம்’’ எனக் கடுப்பில் கொதிக்கின்றனர் உடன்பிறப்புகள்!

“என்னை ஆளை விட்டுடுங்க!”

கோட்டை மாவட்ட உடன்பிறப்புகள் அண்மையில் நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில், “கட்சிக்காரர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க, நாங்கள் கொடுக்கும் பட்டியலை அமைச்சர் பொருட்படுத்துவதே இல்லை’’ எனப் புகார் வாசித்தனர் மூத்த நிர்வாகிகள். இதில், கோபமடைந்த ‘நீதி நியாயம்’ பேசும் அமைச்சர், “என்னுடைய துறையில், காவலாளி வேலைக்குக்கூட என்னால் பரிந்துரைக்க முடியாது. அதெல்லாம் என் கையில் இல்லை. கரூர்ல ‘அந்த’ அமைச்சர் சொல்றதுதான் நடக்கும். ஆனா, இங்க நாங்க சொல்றது எதுவும் நடக்காது. இப்பவும் சொல்றேன்... எனக்குன்னு எந்த கோட்டாவும் இல்லை. என்னை ஆளை விட்டுடுங்க” என்றவர், விருட்டென கூட்டத்தைவிட்டு வெளியேறினார். புகார் வாசித்த சீனியர்கள், ‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போன கதையால்ல இருக்கு...’ என்று புலம்பியவாறே கலைந்தனர்.

கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

“எங்க குடும்பம் வெச்சதுதான் சட்டம்!”

தென்னை நகரத்திலுள்ள ஆளுங்கட்சி நிர்வாகி அவர். கட்சிக்குள் முக்கியப் பதவியில் அவர் இருக்கும் நிலையில், நகராட்சியின் தலையாய பதவியை வகிக்கிறார் அவரின் மனைவி. இதனால் கட்சிக்குள் மட்டுமல்லாமல், நகராட்சி நிர்வாகத்துக்குள்ளும் அவரது தலையீடு அதிகமாக இருக்கிறதாம். கட்சிக்குள் யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும், நகராட்சிக்குள் யாருக்கு டெண்டர் விட வேண்டும் போன்ற விவகாரங்களில் பொறுப்பு அமைச்சரையே ஓவர்டேக் செய்து தலைமையிடம் நேரடியாகப் பேசுகிறாராம். யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டால், “மேல தலைவர் குடும்பமும்... இந்த ஊருக்குள்ள எங்க குடும்பமும் வெச்சதுதான் சட்டம்” என ‘பன்ச்’ பேசி பஞ்சராக்கிவிடுகிறாராம். இவர்மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி அனுப்பிய புகார்களுக்கு, தலைமையிடமிருந்தும் எந்தவித ரியாக்‌ஷனும் வருவதில்லை என்பதால் குமுறிக்கிடக்கின்றனர் உடன்பிறப்புகள்!

“இதெல்லாம் ஒரு பொழப்பா?”

நாடு முழுக்க கதர்ச்சட்டைகள் ரயில்மறியல் போராட்டம் நடத்திவருவது எல்லோரும் அறிந்ததே. ‘ஜில்’ மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட கதர்க் கட்சி நிர்வாகிகள் சிலர், கைதுசெய்ய முயன்ற காவல்துறையிடம் ‘அரை மணி நேரம் அவகாசம்’ கேட்டுக் கெஞ்சியிருக்கிறார்கள். ‘ரயிலே கிளம்பிவிட்டது... எதற்கு அவகாசம்?’ என்ற குழப்பத்தோடு காவல்துறையினர் காத்திருந்தபோது, காரில் வந்து இறங்கியிருக்கிறார் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளரான அந்த வாரிசு நபர். தனது லேட் என்ட்ரியால் ரயில் கிளம்பியதை அறிந்து உஷாரான வாரிசு, செட்டப் செய்து நிற்கவைத்த நிர்வாகிகளுடன் முஷ்டியை முறுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு வண்டியில் ஏறியிருக்கிறார். இந்த ‘வரலாறு முக்கியம் அமைச்சரே...’ மொமன்ட்டைப் பார்த்த கதர்ச்சட்டை புள்ளிகள் “இதெல்லாம் ஒரு பொழப்பா?” என வாரிசு நிர்வாகியின் காதுபடவே கலாய்க்கிறார்கள்!