
‘வட்டம்’ பாலா - ஓவியங்கள்: சுதிர்
`தனிக்கட்சி’ தம்பியின் அக்கப்போர்... உச்சகட்ட கடுப்பில் அக்கா அமைச்சர்!
தென் மாவட்டத்தைச் சேர்ந்த முரட்டு பக்தரின் குடும்ப வாரிசுகளில் ஒருவர் அமைச்சராகவும், இன்னொருவர் மேயராகவும் இருப்பது ஊரறிந்த விஷயம். இன்னொரு தம்பி, ‘நாம் இந்தியர்’ என்ற பெயரில் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். ‘ரகசிய இயக்கமா அது?’ என்று கேட்டுவிடாதீர்கள்... அவரும், அவரின் நண்பர்களும் மட்டுமே இருக்கிற கட்சி என்பதால், அந்தக் கட்சியின் ‘செயல்பாடுகள்’, ‘சாதனைகள்’ எதுவும் வெளியே தெரியவில்லை. அவ்வப்போது பொதுக்கூட்டம் என்ற பெயரில், தனிக்கூட்டம் நடத்தி ஆளுங்கட்சியை விமர்சிக்கும் அவர், சமீபத்தில் தன்னைப் பற்றித் தானே ஒரு புத்தகம் எழுதி, தன் கையாலேயே வெளியிட்டிருக்கிறார். அமைச்சரக்காவின் கட்சி அலுவலகத்துக்கு எதிரே நடந்த இந்த விழாவில், வழக்கம்போல ஆளுங்கட்சியை விமர்சித்துப் பேசியதுடன், “2031-ல் தமிழகத்தில் நாம் இந்தியர் கட்சி ஆட்சி அமைக்கும். மாவட்டத்துக்கு ஒரு ஆள் வந்தால் போதும். ஆட்சியைப் பிடித்துக் காட்டுவேன்” என்று பேசி கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார். “2031-ல நாம ஆட்சிக்கு வராட்டியும், அமைச்சரக்கா அவங்க தம்பி கட்சியில சேர்ந்து அமைச்சராகிடலாம்போலயே?” என்று சிலர் கேலி பேச, கடுப்பின் உச்சத்தில் கத்திவிட்டாராம் அக்கா அமைச்சர்!

உள்ளூர்த் திருவிழா... ஓர் ஐடியா... கவுன்சிலர்களை வாயடைக்கச் செய்த சேர்மன்!
‘அவார்டு’ நகராட்சியில் ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் சேர்மன் பதவியில் இருப்பவரின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுவந்தனவாம். பங்கு கிடைக்காத கோபத்தில் குமைந்துகொண்டிருந்த கவுன்சிலர்கள், ‘திவாலாகும் நகராட்சி’ என்ற பெயரில் ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டனர். ‘குப்’பென வியர்த்துப்போன சேர்மன், கவுன்சிலர்களைச் சமாதானப்படுத்த யோசனை கேட்டு, தனது அரசியல் ஆசானான ‘சுகர்’ பிரமுகரைச் சந்தித்தாராம். அவர் கொடுத்த ஐடியாவின் பேரில், உள்ளூரில் விமரிசையாகக் கொண்டாடப்படும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 31 கவுன்சிலர்களுக்கும் தலா 35 பூந்தி பாக்கெட்டுகளை வழங்கி, அவர்களின் வாயை அடைத்துவிட்டாராம்.
ஆடியோ லீக் விவகாரமும்... அதிர்ச்சியான அமைச்சரும்!
‘அன்பான’ அமைச்சரின் ஆதரவாளர்கள், லஞ்சம் கேட்டு ஒரு பெண்ணை செல்போனில் மிரட்டிய ஆடியோ விவகாரம் மலைக்கோட்டையையே கிடுகிடுக்கவைத்தது. ‘இதெல்லாம் மீசைக்கார அமைச்சர் தரப்பின் வேலைதான்... ஆடியோவை லீக் செய்து அரசியல் செய்கிறார்’ என்று கொதித்துப்போனாராம் அன்பானவர். ஆனால், ‘அன்பான’ அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் ஒருவர்தான் அந்த ஆடியோவை லீக் செய்திருப்பது தீவிர விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ‘உங்க உதவியாளர் போடும் ஆட்டத்துக்கு முடிவுகட்டவே ஆடியோவை லீக் செய்தேன்’ என கிளைச் செயலாளர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டாராம் அமைச்சர்.
‘‘லஞ்சம் வாங்கச் சொன்னதே தலைவர்தான்!’’
‘ஜில்’ மாவட்டத்தில், ‘மினி கேரளா’ என்றழைக்கப்படும் நகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் பில்டிங் அப்ரூவல் விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய வீடியோ அண்மையில் வைரலானது. நகராட்சிக் கூட்டத்திலும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க... “நான் லஞ்சம் வாங்கியது உண்மைதான். அதை வாங்கச் சொன்னதே நகராட்சித் தலைவர்தான். வாங்கிய பணத்தை அப்படியே அவர் கையில் கொடுத்துவிட்டேன். அதற்கான கமிஷனைத் தலைவரும் எனக்குக் கொடுத்துவிட்டார்” என தடாலடியாக போட்டுடைத்துவிட்டார் கவுன்சிலர். வண்டுமுருகன் வடிவேலு கதையாக மாட்டிக்கொண்ட நகராட்சித் தலைவர், சபையில் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடியிருக்கிறார். ‘அந்த கவுன்சிலர் பேரிலேயே சத்தியம் இருக்குது. கண்டிப்பா பொய் சொல்லியிருக்க மாட்டார்’ என்று சொல்லி, எதிர்க்கட்சி உறுப்பினர்களெல்லாம் சேர்மனைக் கழுவி ஊற்றுகிறார்களாம்.

இழந்ததை மீட்கப் போராடும் அம்மணி... ஆதரவுக்கொடி பிடிக்கும் புள்ளிகள்!
வட மாவட்டத்திலுள்ள பிரியாணிக்கு ஃபேமஸான ஊரில், இலைக் கட்சி தயவில் ‘கூட்டுறவு’ பதவியில் பந்தா காட்டிவந்தார் ‘காதலைப்’ பெயராகக்கொண்ட அம்மணி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபசார வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்றதால் அவரது ‘புகழ்’ மங்கியது. ஜாமீனில் வெளிவந்த பிறகும்கூட, இருந்த இடம் தெரியாமல் அமைதிகாத்தார் அம்மணி. அண்மையில் புதிய டீமுடன், மீண்டும் களமிறங்கியுள்ளார். அதோடு, கட்சியில் தான் இழந்த பதவிகளை மீண்டும் அடையும் முயற்சியுடன், உள்ளூரைச் சேர்ந்த வீரமான முன்னாள் அமைச்சர் உட்பட பல முக்கியஸ்தர்களையும் ரகசியமாகச் சந்தித்து, சமரசம் பேசிவருகிறாராம். அம்மணிக்கு சில உள்ளூர் புள்ளிகளும் ஆதரவுக்கொடி பிடிப்பதால் விரைவில் கட்சி நிகழ்ச்சிகளிலும், மேடையிலும் அவரைப் பார்க்கலாம் என்கிறார்கள் ர.ர-க்கள்.