
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள கரியசோலைப் பகுதியில், குடிநீர்க் கிணறு ஒன்றைத் தூர்வாரியபோது உள்ளே எலும்புக் கூடுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘குடிசைகளை மறைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள ஆனந்தக் காவிரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், அரசுத் தலைமை கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு எதிரேயிருந்த குடிசை வீடுகள் அமைச்சர்களின் பார்வையில்படக் கூடாது என்பதற்காக, சாலையோரத்தில் பெரிய துணியைக் கட்டி வீடுகளை மறைத்திருந்தனர் அதிகாரிகள். ‘‘நாங்கள் வசிக்கும் வீட்டை மறைப்பதற்குக் காட்டுகிற அக்கறையை, எங்கள் வறுமையை ஒழிப்பதற்கு காட்டினால், இவர்கள் இப்படித் துணியைக் கட்டி மறைக்கவேண்டிய அவசியமே வந்திருக்காதே...’’ என்று ஆதங்கப்படுகின்றனர் பகுதி மக்கள். ‘குஜராத்தில் குடிசைகளை மறைக்க சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தை விமர்சித்தவர்கள், சொந்த ஊரில் துணியைக்கட்டி மறைக்கிறார்களே... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’ என்று கேட்கின்றனர் எதிர்க்கட்சியினர்!

ஆட்சியரின் பாராட்டுக்குரிய ஆக்ஷன்!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், வயதான தம்பதியர் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்திருக்கின்றனர். மனுவில் கையெழுத்துக்கு பதிலாக, கைநாட்டு வைத்திருந்ததைக் கவனித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், “எங்கருந்து வர்றீங்க... மனு யாரு எழுதிக் கொடுத்தாங்க... எவ்வளவு கொடுத்தீங்க?” என விசாரிக்க... “நாங்க விளாத்திகுளத்துலருந்து ரெண்டு பஸ் மாறி வர்றோமுங்க. ரெண்டு பேருக்கும் வந்து போகுற பஸ் சார்ஜ் 150 ரூபா. மனு எழுத 50 ரூபா கொடுத்தோம்” எனச் சொல்லியிருக்கின்றனர் அந்த முதிய தம்பதியர். உடனே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு எழுதிக் கொடுத்தவர் களை நோக்கிச் சென்ற ஆட்சியர், “மனு எழுதிக் கொடுக்க இனிமேல் யாருகிட்டயும் பணம் வாங்க கூடாது. தனியே உங்களுக்கு இடம் ஒதுக்கித் தருகிறேன். திங்கட்கிழமை மட்டும் ஒரு நாள் ஊதியமாக ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்தே வழங்குகிறேன்” என்றவர், இதைக் கண்காணிப்பதற்காக இரண்டு வருவாய் ஊழியர்களையும், பாதுகாப்புக்கு ஒரு காவலரையும் நியமித்திருக்கிறார்.


திராவிட சாமியார்களும், தி.மு.க அமைச்சர்களும்!
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் சென்னப்ப மலைமீது ‘கோடி தாத்தா’ என்ற சாமியார், பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கோயில் கட்டிவருகிறார். ராமநாதன் என்ற பெயரில், சாதாரண சைக்கிள் ஷாப் நடத்திவந்த இந்த நபர், திடுக்கென்று சாமியாரானதே மர்மம்தான். இப்படியிருக்க, கோடிகளைக் கொட்டி கோயில் கட்டிவரும் ‘கோடி தாத்தா சாமி’யாரிடம் ஆசி பெறுவதற்காகவும், கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், அவரின் மனைவியும் அடிக்கடி இங்கு வந்து செல்கிறார்கள். அதேபோல், வேலூர் மாவட்டத்திலுள்ள காங்குப்பம் மலையைக் குடைந்து கோயில் கட்டி, சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் மகானந்த சித்தர் என்ற சாமியாரிடம் கேட்டுவிட்டே எந்தக் காரியத்திலும் இறங்குகிறாராம் சீனியர் அமைச்சர் துரைமுருகன். சமீபத்தில், வேலூருக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவும் துரைமுருகனுடன் சென்று, மகானந்த சித்தரிடம் ஆசி பெற்றிருக்கிறார். இரண்டு அமைச்சர்களுக்கும் ‘திருஷ்டி’ சுற்றி, பூசணிக்காயை உடைத்துச் சிதறவிட்டிருக்கிறார் மகானந்த சித்தர். சிதறியது பூசணிக்காய் மட்டுமா..?
‘‘புதிய சாலை அமைக்க முந்நூறு கோடிப்பே..!’’
கோயமுத்தூர் மாநகரில் சாலைகள் படுமோசமாக இருக்கின்றன. ஆண்ட கட்சியும், ஆளுங்கட்சியும் மாறி மாறி அடுத்தவர்மீது குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றன. இந்த நிலையில் ஆளுங்கட்சி சார்பில், சாலைப் பணிகளுக்காக மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கி செலவழித்துவருவதாகத் தம்பட்டம் அடித்துவருகின்றனர். ஆனால், பணி முடிக்கப்பட்ட பெரும்பாலான சாலைகளும் புதிது போல் இல்லை. மேலும், இதில் ஊழல் புகார்களும் எட்டிப்பார்க்கின்றன. சாலைகளைப் பொறுத்தவரை நெடுஞ்சாலைகள், இணைப்புச் சாலைகள் என்று தனித்தனியாக மதிப்பிடுவார்கள். ஆனால், ‘நெடுஞ்சாலைகளுக்கு என்ன மதிப்பில் சாலை போடுவார்களோ, அதே மதிப்பில் கணக்கு காண்பித்து சிட்டிக்குள் சாலை அமைத்து ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுக்குத்தான் முந்நூறு கோடிப்பே...’ என்று எதிர்க்கட்சிகள் மீம்ஸ் போட்டு விமர்சிக்கிறார்கள்.

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை!
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள கரியசோலைப் பகுதியில், குடிநீர்க் கிணறு ஒன்றைத் தூர்வாரியபோது உள்ளே எலும்புக் கூடுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எலும்புகளின் வடிவங்களைக் கண்டு குழம்பிய போலீஸார், தடய அறிவியல் துறையினரிடம் ஆய்வுக்காக ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வில், ‘அவை மனித எலும்புகள் இல்லை’ என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து ‘வனவிலங்குகளை வேட்டையாடி எலும்புகளைக் கிணற்றுக்குள் வீசியிருக் கலாம்’ என்கிற கோணத்தில் அறிக்கையைச் சமர்ப்பித்து, அந்த எலும்புகளை மரபணு ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைத்திருக் கிறார்கள். ஆய்வு முடிவுக்குக் காத்திருக்கிறது மொத்த அரசுத் துறையும். ‘கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை’யாக வேட்டையைக் கோட்டை விட்டதை அம்பலப்படுத்தி விடுவார்களே என்கிற கலக்கத்தில் இருக்கிறதாம் கூடலூர் வனத்துறை!
- தேன்மொழி