அலசல்
Published:Updated:

அலட்சிய அமைச்சர்கள்... அவதியில் மக்கள்!

அலட்சிய அமைச்சர்கள்... அவதியில் மக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அலட்சிய அமைச்சர்கள்... அவதியில் மக்கள்!

தமிழ்நாட்டில் புலிப்பால்கூட வாங்கிவிடலாம்போல, ஆவின் பால் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது” எனக் கொதிக்கிறார்கள் மக்கள்.

“இப்ப எதுக்குங்க நான் கரன்ட்டு பில் கார்டோட என் ஆதாரை இணைக்கணும்?”, “பால் பாக்கெட் போடுவாங்களா, மாட்டாங்களா?”, “கொசுவும் அதிகமாருக்கு... காய்ச்சலும் அதிகமாருக்கு... ஏன்?”, “எக்ஸாம் எழுதாம எங்கதான் போனாங்க இத்தனை மாணவர்கள்?”, “பஸ் வருமா... வராதா?” இவைதான் தமிழ்நாட்டின் பொது இடங்களில் அதிகமும் கேட்க முடிகிற பிரதானமான ஐந்து கேள்விகள். இந்தக் கேள்விகளோடு தொடர்புடைய ஐந்து துறைகளான மின்சாரம், பால் வளம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து ஆகிய அத்தியாவசியத் துறைகளில் நிலவும் குழப்பங்களாலும் அலட்சியங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் மக்கள். “ஆனால், துறை அமைச்சர்களோ இதையெல்லாம் கொஞ்சம்கூடப் பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை” என்று குற்றம்சாட்டிய விவரப் புள்ளிகளிடம், இந்தத் துறைகளில் இருக்கும் பிரச்னைகள், அதனால் மக்கள் படும் அவதிகள் குறித்து விசாரணையில் இறங்கினோம்...

ஆதாரால் அவதிக்குள்ளாகும் மக்கள்... கிடப்பில் மின்துறைப் பணிகள்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் ‘ஆதார்... ஆதார்...’ என்று அலற வைத்திருக்கிறது மின்வாரியம். ‘மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. ஆனால், உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடாததால் நாளோரு குழப்பம், பொழுதொரு பிரச்னை என தகிக்கிறது மின்துறை. இதனால், `மின்கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும், அப்படி பில் செலுத்த தாமதமாவதால் யூனிட் அதிகமாகி கட்டணம் இரட்டிப்பாவதாகவும்’ ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துவருகின்றன. “சிங்கிள் பேஸ் பிரிவில் மட்டும் மூணு லட்சம் இணைப்புகளுக்கான கோரிக்கைகள் பெண்டிங்கில் இருக்கின்றன. விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்புப் பணியோ இன்னும் காகிதத்தில்தான் இருக்கிறது” என்று கொதிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய, சி.ஐ.டி.யூ மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரங்கராஜன் “மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கும் பணியில், முதலில் ஓனர்களின் ஆதாரை இணைத்தால் போதும் என்றது அரசு. பிறகு, `குடியிருப்பவர்கள் அல்லது உறவுக்காரர்களின் ஆதாரைக்கூட இணைக்கலாம்’ எனக் குழப்பியது. தற்போது ‘ஒரு வளாகம் ஒரே சர்வீஸ்’ எனப் புது விதிமுறையை வெளியிட்டு மக்களை மேலும் பீதியில் தள்ளியிருக்கிறார்கள். இதனால் வாடகைக்குக் குடியிருப்போர், குடியிருப்புக்கான மின்கட்டணத்துக்கு பதிலாக வணிகரீதியிலான மின்கட்டணத் தொகையைக் கட்டும்படி நிர்பந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது இருக்கும் தொகையைக் கட்டவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதில் கமர்ஷியல் பில்லைப் பார்த்தால் மயக்கமே போட்டுவிடுவார்கள். அதோடு, 100 யூனிட் இலவச மின்சாரச் சலுகையும் பறிபோகும் அபாயம் இருக்கிறது. ‘அப்படியெல்லாம் நடக்காது’ என அமைச்சரும், துறை அதிகாரிகளும் போகிற போக்கில் சொல்லும் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை” என்றார் அழுத்தமாக.

செந்தில் பாலாஜி, நாசர், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், சிவசங்கர்
செந்தில் பாலாஜி, நாசர், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், சிவசங்கர்

ஆட்கள் பற்றாக்குறை... அல்லாடும் மின்வாரியம்!

தமிழ்நாடு மின் பொறியாளர்கள் சங்கத் தலைவர் காந்தி நம்மிடம் பேசுகையில், “மின்வாரியத்தைப் பொறுத்தவரை, 10,000 கோடி ரூபாய் ஊதியமாகவே கொடுக்கிறோம் என்ற தவறான கணக்கை அமைச்சர் சொல்லிக்கொண்டே யிருக்கிறார். உணமையில், 5,800 கோடி ரூபாய்தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் அரசுக்கு 59,000 கோடி வருவாய் ஏற்பட்டிருக்கிறது. இதைவைத்தே புதிய ஊழியர்களை எடுக்க முடியும். ஆனால், இருப்பவர்களைவைத்தே ஓட்டுகிறார்கள். இதனால், இறுதியில் பாதிக்கப்படுவது மக்கள்தான். உதாரணமாக, 10 நிமிடங்களில் சரிசெய்ய முடிகிற மின்வெட்டுப் பிரச்னை, மணிக்கணக்கில் தாமதமாகிறது. வேலையாட்களைக் குறைப்பதால் நிதிச்சுமை குறையும் என்று சொல்வதெல்லாம் சுத்தமான ஏமாற்று வேலை” என்றார்.

தட்கல் எனும் ஏமாற்று வேலை!

இது ஒருபுறமிருக்க, விவசாயிகளுக்கான மின் இணைப்பிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். “தமிழ்நாடு, மின்மிகை மாநிலம் எனப் பீற்றிக்கொள்கிறவர்கள், 24 மணி நேரமும் கிடைத்துவந்த விவசாயத்துக்கான மும்முனை மின்சாரத்தை, கோடையின் தொடக்கத்திலேயே ஆறு மணி நேரமாகக் குறைத்திருக்கிறார்கள்” என்று நம்மிடம் வெடிக்கத் தொடங்கினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.துரைராஜ். தொடர்ந்து பேசியவர், “தி.மு.க அரசு வந்த பிறகு தட்கல் முறையில் உடனடியாக மின்சாரத்தை விவசாயிகளுக்குக் கொடுத்துவிடுவோம் என்றார்கள். ஆட்சி வந்த பிறகு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததாகப் பெரிய விழாவே நடத்தினார்கள். ஆனால், இன்று வரை 80 சதவிகித விவசாயிகளுக்கு மின் இணைப்பு வரவே இல்லை. கேட்டால், பணியாளர்கள் குறைவாக இருப்பதால், கொஞ்சம் பொறுங்கள் என்கிறார்கள். இந்த நத்தை வேகப் பணிக்குப் பெயர்தான் தட்கலா?” என்றார் ஆதங்கத்துடன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்க அவரது வீட்டுக்கே சென்றோம். “வேலைகள் நிறைய இருக்கின்றன. மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்” எனச் சொல்லி, நமது கேள்விகளுக்கு விளக்கமளிக்காமல் தவிர்த்துவிட்டார்.

செயற்கையாக ஏற்படுத்தப்படும் பால் தட்டுப்பாடு... அல்லாடும் மக்கள்; அலட்சிய அமைச்சர்!

“தமிழ்நாட்டில் புலிப்பால்கூட வாங்கிவிடலாம்போல, ஆவின் பால் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது” எனக் கொதிக்கிறார்கள் மக்கள். கடந்த மார்ச் 13, 14-ம் தேதிகளில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்கவில்லை. மக்கள், முகவர்களைக் கேட்க... முகவர்களோ, ஆவின் அதிகாரிகளிடம் கேட்க... ‘விநியோகம் செய்வதற்குப் பால் இல்லை. வந்ததும் சொல்கிறோம்’ என `பகீர்’ கிளப்பினார்கள் அதிகாரிகள். இது குறித்துப் பால் முகவர்கள் வீடியோ வெளியிட்ட பிறகுதான், தமிழகம் முழுவதும் நிலவிவரும் பால் தட்டுப்பாடு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். “பால் விவசாயிகளுக்கான தொகையை ஆவின் உரிய தேதிக்குக் கொடுப்பதில்லை. இதனால் பாலை, தனியாருக்கு விற்பனை செய்யும்படி ஆவினே மறைமுகமாக விவசாயிகளை நிர்பந்திக்கிறது. அதையும் தாண்டிக் கிடைக்கும் பாலையும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஒன்றிய அளவிலேயே சில்லறை விற்பனை செய்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைச் சரியாகக் கண்டுகொள்ளாததன் விளைவாகவே, பால் கொள்முதல் 41 லட்சத்திலிருந்து 27 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது. இதன் தொடர் விளைவாக, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தனியார் நிறுவனப் பால்களை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்களை மக்கள் அதிகமாக நாடுவதால், அவர்கள் கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து முறை விலையை ஏற்றியிருக்கிறார்கள். இந்த விலையேற்றத்துக்குக் காரணமான ஆவினே இதை ஒரு காரணமாகச் சொல்லி, தன் விலையையும் ஏற்றிக்கொண்டிருக்கிறது. பாலில் மட்டுமல்ல, பால் பொருள்கள் தயாரிப்பிலும் கோட்டைவிட்டிருக்கிறது ஆவின். இதனால், ஏற்பட்ட தட்டுப்பாட்டைச் சரிசெய்ய, இப்போது வெளிச்சந்தையிலிருந்து பால்பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறார்கள். அரசின் லாபகரமான ஒரு நிறுவனமாக, மக்களுக்குத் தரமான, நியாயமான விலையில் பால் மற்றும் பால் பொருள்களை விநியோகிக்கும் நிறுவனமாக இயங்கவேண்டிய ஆவின், முழுமையாகத் தனியாரின் பக்கம் மக்களை விரட்டும் நிலையில் இருக்கிறது. இது, அரசுக்கும் மக்களுக்கும் பெரிய இழப்பு” என்றார் ஆதங்கமாக.

இதுபோக, ஆவினுக்குப் பால் வழங்கும் விவசாயிகளோ ‘கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்கிற கோரிக்கையோடு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலைமை நீடித்தால், கொள்முதல் மேலும் குறையும். ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்படலாம்.

இந்தப் பிரச்னைகள் குறித்து விளக்கம் கேட்க, பலமுறை அழைத்தும் நமது அழைப்பை அமைச்சர் நாசர் ஏற்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு எடுத்தபோதும், ‘வேலையாக இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்’ என வேகமாக நம் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை... தனியார் மருத்துவமனையை நாடும் மக்கள்!

தமிழகத்தில் சமீபகாலமாக எங்கும் கொசுக்கள்... மர்மக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்று விதவிதமாகக் காய்ச்சல்கள் பரவிவருகின்றன. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனோ ‘மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை’ என்று கூலாகச் சொல்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாகப் பேசிய மாவட்டச் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர், “ஆரம்பகட்டத்திலேயே கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டியிருக் கவேண்டியவர்கள், மொத்தமாகக் கோட்டை விட்டுவிட்டார்கள். அதன் விளைவுதான் இவ்வளவு கொசுக்கள். பல்வேறு வகையான காய்ச்சலின் பின்னணியில் இந்தக் கொசுக்களுக்கும் பங்கிருக்கிறது. அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அரசின் இந்தக் கள்ள மௌனம் காய்ச்சலைவிட ஆபத்தானது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கொசு ஒழிப்பு மருந்துகள்கூட போதிய அளவு எங்களிடம் இல்லை.

இப்போது பெருமளவில் காய்ச்சலால் அவதிக்குள்ளாகும் ஏழை, எளிய மக்கள் முதலில் நாடுவது அரசு மருத்துவமனைகளைத்தான். ஆனால், ஆரம்ப சுகாதார மையங்களிலும், நகர்ப்புற சுகாதார மையங்களிலும் போதுமான மருத்துவர்களோ, செவிலியர்களோ இல்லை. மருந்துத் தட்டுப்பாட்டை, தொடர்ந்து அரசு மறுத்தாலும் கிராமங்களில், சிறு நகரங்களில் இன்னும் அத்தியாவசிய மருந்துத் தட்டுப்பாடு இருக்கிறது என்பதுதான் உண்மை நிலை. இதனால், சின்னக் காய்ச்சலுக்குக்கூட தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யவேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றனர் மக்கள்.

தற்போது வேகமாகப் பரவிவரும் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் குறித்து முன்கூட்டியே கண்டறியத் தவறவிட்டது தமிழக சுகாதாரத்துறை. மத்திய அரசு எச்சரிக்கும் வரை, இது குறித்த தடுப்பு நடவடிக்கைகள், வழிமுறைகள் எதையும் முறையாக அறிவுறுத்தவில்லை. இதனால் கோவை, மதுரை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகள் இப்போது நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன” என்றனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையிலுள்ள 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வே இன்னும் நடத்தப்படவில்லை. இப்படி, பல்வேறு பணி நியமன சர்ச்சைகளும் சுகாதாரத் துறையில் அனலடிக்கின்றன.

இந்த விவகாரங்கள் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் கட்டுக்குள்தான் இருக்கிறது. மருத்துவத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 6,613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் ஏழு லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள்” என்றார்.

ரங்கராஜன், எஸ்.துரைராஜ், காந்தி, பொன்னுசாமி, பேட்ரிக் ரெய்மாண்ட்
ரங்கராஜன், எஸ்.துரைராஜ், காந்தி, பொன்னுசாமி, பேட்ரிக் ரெய்மாண்ட்

தேர்வுகளைத் தவிர்க்கும் மாணவர்கள்... கண்டுகொள்ளாத பள்ளிக்கல்வித்துறை!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 13-ம் தேதி ப்ளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. இதற்காகப் பதிவு செய்திருந்த 8,51,303 மாணவர்களில், தமிழ்த் தேர்வுக்கு 50,674 மாணவர்களும், ஆங்கில மொழித் தேர்வுக்கு 49,500 மாணவர்களும் வரவில்லை. பதிவுசெய்திருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனித் தேர்வர்களில் 1,115 பேர் தேர்வுக்கு வரவில்லை. இவ்வளவு எண்ணிக்கையில் மாணவர்கள் ஏன் தேர்வைத் தவிர்த்தார்கள்?

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசியபோது, “இப்போது தேர்வைத் தவிர்த்திருக்கும் மாணவர்கள், எப்போதிருந்து பள்ளிக்கு வரவில்லை என்கிற அடிப்படைத் தகவல்களே அரசிடம் இல்லை. இது கவலைக்குரிய விஷயம். இப்போது பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கொரோனா காலத்தில் தேர்வானவர்கள். பொதுத் தேர்வை எதிர்கொள்ள அவர்களை அரசு முறையாகத் தயார்படுத்தியிருக்க வேண்டும். மொழிப் பாடத்துக்கே இத்தனை மாணவர்கள் வரவில்லையென்றால், கடினமான இயற்பியல், கணிதம் போன்ற தேர்வுகளை எத்தனை மாணவர்கள் தவிர்ப்பார்களோ என யோசிக்கும்போதே கலக்கமாக இருக்கிறது. தினம் ஒரு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த, போதிய அளவு ஆசிரியர்கள் இல்லை என்பதை இந்த பள்ளிக்கல்வித்துறை எப்போது புரிந்துகொள்ளப்போகிறதோ தெரியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவரிடம் இது குறித்துப் பேசியபோது, “அரசு அறிவிக்கும் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கே வருவதில்லை. பள்ளிப் படிப்பை முடித்ததும், மதிப்பெண் சான்றிதழ்களை இ-சேவை மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், இன்னும் நடைமுறைக்கே வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட 6,029 ஹைடெக் கம்ப்யூட்டர் லேப்புகள் இணைய வசதி இல்லாததால் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது அவற்றை மொழி ஆய்வகத் திட்டத்துக்காகத் தாரை வார்த்துவிட்டார்கள். லேப்டாப், சைக்கிள், சீருடை உள்ளிட்ட உதவிப் பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் 13 பொருள்களிலும் குழப்படிதான். நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் எதுவும் இருக்கக் கூடாது என்று அரசு தொடர் சட்டப் போராட்டம் நடத்துவதாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கும் மாதிரிப் பள்ளிகளுக்கு, `பேஸ்லைன் சர்வே’ என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்” எனக் கொட்டித் தீர்த்தார்.

இது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டோம். “தற்போது தேர்வு எழுதாத மாணவர்களை, கள அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாகக் கண்டறிந்து பள்ளி அளவில் பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு, ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், துணைத் தேர்வு எழுதுவதற்கும், உயர்கல்விக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்” என்றார்.

தனியார்மயத்தை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்துத்துறை!

தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தேர்வுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் திண்டாடி வருகிறார்கள். சமீபத்தில், கல்பாக்கம், மாமல்லபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்வு மையத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் சிரமமடைந்தனர். தேர்வுக்குச் செல்ல முடியாமல் தவிப்புடன் பேருந்து நிறுத்தத்தில் அல்லாடும் மாணவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. தமிழ்நாடு முழுவதுமே தேவையான அளவுக்குப் பேருந்துகள் இல்லை. இருக்கும் பஸ்களிலும் பாதிக்குப் பாதி, மோசமான நிலையில்தான் இருக்கின்றன. மக்கள் இதனால் கடும் அவதியடைகிறார்கள்.

“இதற்கு முக்கியக் காரணம், பேருந்துகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் பற்றாக்குறைதான்” என்று ஆரம்பித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், “ஊழியர்களின் பற்றாக்குறையால்தான் வழித்தடங்களில் சரிவரப் பேருந்துகள் இயங்க முடியாத நிலைமை இருக்கிறது. பேருந்துகளின் மோசமான நிலைக்கும் அதுவே காரணம். பேருந்துகள் பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்து அதையும் மறந்துவிட்டார்கள். இதுபோக, சென்னையிலுள்ள வழித்தடங்களில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாகவும். முதற்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 500 தனியார் பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார் அமைச்சர். இந்த நிலையில், சென்னையிலுள்ள மூன்று பணிமனைகளைத் தேர்வுசெய்து அதை ‘பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்’ அடிப்படையில், தனியாருடன் இணைந்து மேம்படுத்த மொத்தம் 1,541.38 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதெல்லாம் போக்குவரத்துத்துறையை, தனியார்மயத்தை நோக்கித் தள்ளும் முன்முயற்சிகள். கலைஞர் அரசுடைமையாக்கிய போக்குவரத்துத்துறையை ஸ்டாலின் தனியாருக்குத் தாரை வார்க்கப் பார்க்கிறார். மக்களின் வரிப்பணத்தையும் வீணடித்து, வருமானத்தையும் தனியாருக்குக் கொடுக்க ஒரு துறை அவசியமா?” என்றார்கள் கொதிப்பாக.

சிவசங்கர், நாசர், செந்தில் பாலாஜி, , மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ்
சிவசங்கர், நாசர், செந்தில் பாலாஜி, , மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ்

“விழா நாள்களில் தனியார் பேருந்துகள் இஷ்டத்துக்கு ஆயிரக்கணக்கில் விலை ஏற்றுவதைக் கட்டுப்படுத்தவோ, முறைப்படுத்தவோ சட்டமே இல்லை என்கிறார்கள். இந்த லட்சணத்தில், தனியாரிடம் போக்குவரத்தை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தால், அவர்கள் அதில் லாபம் பார்க்காமல் விடுவார்களா... அதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா... மகளிருக்கான இலவசப் பயணம், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான பாஸ்கள் அனுமதிக்கப்படுமா என்றெல்லாம் நிறைய கேள்விகள் இருக்கின்றன” என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டோம். “முதல் நாள் தேர்வின்போது ஒருசில இடங்களில் பேருந்து தாமதமாகச் சென்றது உண்மைதான். அடுத்த நாளே அது சரிசெய்யப்பட்டுவிட்டது. கண்டிப்பாகப் பேருந்துகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும். சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்து இயங்கினாலும், கட்டண உயர்வு இருக்காது. போக்குவரத்துத் துறை, தனியார்மயம் ஆகும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார் அழுத்தமாக.

மக்களின் அன்றாட வாழ்க்கையின், மிக அடிப்படையான தேவைகளை வழங்குவதில், உறுதிசெய்வதில், பாதுகாப்பதில்கூட அப்படி என்னதான் பிரச்னை அரசுக்கு... மின்சாரம், பால் வளம், மருத்துவம், கல்வி, போக்குவரத்து என்பது தற்போது அதிகமும் மக்களிடம் பேசுபொருளாகியிருக்கும் துறைகளாக இருப்பதால், அதில் கவனம் குவித்தோம். மற்றபடி, இதர துறைகளெல்லாம் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று அர்த்தமல்ல. இந்தத் துறைகள் சார்ந்த விசாரணைகளின்போதே மற்ற பல துறைகளைப் பற்றிய புகார்களும் சர்ச்சைகளும் நம்மிடம் குவிந்தன. அவை தனிக் கட்டுரைகளாக எழுதப்பட வேண்டியவை.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்று மாவட்டம்தோறும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய துறைகளாக இந்த ஐந்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள் மக்கள். செய்வீர்களா?