Published:Updated:

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு... திருமாவளவன் குரல் எழுப்பியதன் பின்னணி என்ன?!

சாதிவாரிக் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக, தற்போது பேசுவதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு... திருமாவளவன் குரல் எழுப்பியதன் பின்னணி என்ன?!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக, தற்போது பேசுவதன் பின்னணி என்ன?

Published:Updated:
சாதிவாரிக் கணக்கெடுப்பு

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக ஜனவரி 7-ம் தேதி  தொடங்கி கணக்கெடுப்பு நடந்துவருகிறது. அங்கு இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, சமூக நீதி பேசும் தமிழ்நாட்டிலும் இந்தக் கோரிக்கை பல கட்சிகளால் வைக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், `தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது பல ஆண்டுகளாக கட்சிகள் வைக்கும் முக்கியக் கோரிக்கை என்றாலும், அதை ஆளும் கட்சிகள் முன்னெடுப்பதில் தயக்கத்தையே காட்டி வருகின்றன. குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கூட்டணிக் கட்சிகள், பல மாநில கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அது அவர்கள் ஆட்சியில் இருந்தவரையிலும் வெளிவரவில்லை. அதன்பிறகு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் அந்தக் கணக்கெடுப்பு வெளியிடவில்லை. காங்கிரஸ் எடுத்த கணக்கெடுப்பில் பல குளறுபடிகள் இருப்பதாக விமர்சித்து அதை வெளியிட மறுத்தது பாஜக அரசு.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

இந்த நிலையில் சமீபகாலமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டுமென மாநிலக் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ``வடமாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வலுவான குரல் ஒலிக்கிறது. பீகார் மாநில அரசும் அதை முன்னெடுத்திருக்கிறது. தமிழகத்திலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை” எனப் பேசியிருந்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கெளதம் சன்னாவிடம் பேசினோம். அவர், ``1961-ம் ஆண்டுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன்பிறகு பல ஆண்டுகளாகவே விகிதத்தை அவர்களே கணக்கிட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது தமிழக சட்டசபையில் பட்டியலினத்தவர்களின் பிரதிநிதித்துவம் 44-ஆக இருந்தது 46-ஆக உயர்ந்திருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுத்து சரியாக கணக்கிட்டிருந்தால் அது 50-ஆகக் கூட அதிகரித்திருக்கலாம்.

கௌதம் சன்னா
கௌதம் சன்னா

அதேபோல், பட்டியலினத்தவர்கள் பழங்குடியினருக்கு 18%, 1% இட ஒதுக்கீடாக மட்டுமே இருக்கிறது. தேவையிருந்தும் அது உயர்த்தப்படவில்லை. இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருப்பதால், பலரும் தங்களின் மக்கள்தொகை அதிகமாக இருப்பதாகக் கற்பனைக் கதைகளைச் சொல்கிறார்கள். எனவே, இதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் தேவைப்படுகிறது” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ``தற்போது பீகார் இதைக் கையில் எடுத்ததை அடுத்து, மாநில அரசாலும் இதைக் கையிலெடுக்க முடியும் என தெரியவந்திருக்கிறது. எனவே, தமிழக அரசும் இதை விரைந்து செய்ய வேண்டும். மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்தும் எனும் நம்பிக்கை யாருக்கும் இல்லை. மக்களை மதரீதியிலாகப் பிரிக்க வேண்டும். அப்படிப் பிரிப்பதன் வாயிலாக, ஒவ்வொரு மதத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் அரசியலைச் செய்துவருகின்றன.

சிறுபான்மை மக்கள்தொகையைப் பொறுத்தவரை பெரிதாக அது உயரவில்லை. ஆனால், பாஜக தொடர்ந்து, `அவர்களின் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ந்து இந்தியாவைக் கைப்பற்றி நம்மை ஆட்சி செய்வார்கள்’ எனும் வாதத்தைப் பரப்பி வெறுப்பை உமிழ்கிறார்கள். அப்படியே அவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதில் என்ன தவறு இருந்திட முடியும். அவர்களும் இந்த மண்ணில் பிறந்தவர்கள். அப்போது ஆட்சி செய்கிற முழு உரிமை அவர்களுக்கும் இருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு

மற்ற நாடுகளை ஆட்சிசெய்யும் இந்தியர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும் சிலரால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு காலத்தில் உலகத்தை ஆட்சி செய்த இங்கிலாந்தை தற்போது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆட்சி செய்கிறார். அவருக்கு ’ஜனநாயகம்’ என்னும் அடிப்படையில் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த மண்ணில் பிறந்த ஒருவரை மதத்தைக் காரணம் காட்டி ஆட்சி செய்யக் கூடாது என எப்படிச் சொல்ல முடியும். ஆகவே, இந்த எண்ணிக்கையெல்லாம் துல்லியமாக இருந்தால் மட்டுமே இந்த வாதங்கள் அனைத்தும்  தவறானது என்பதை நிரூபிக்க முடியும். எனவே, மாநில அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை முன்வைத்து இதை நிறைவேற்ற குரல் கொடுப்போம்" என்றார். 

ஜனநாயகம்
ஜனநாயகம்

இது குறித்து பேசிய எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர் , ``சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தினால் தற்போது இருக்கும் இட ஒதுக்கீடு தாண்டி கேட்பார்கள். மேலும், அரசியல் அதிகாரத்தைப் பெற இவர்கள் அணிதிரள்வார்கள். அதை வைத்து எங்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என அனைவரும் கேட்கத் தொடங்குவர் என்பதும் ஆட்சியாளர்களின் பயமாக இருக்கலாம். ஏனென்றால், அதன்பிறகு பெரும்பான்மையினர் அரசியல் என்பது இல்லாமல் போய்விடும். இந்தக் கணக்கெடுப்பு நான் இந்த சாதி என்பதைச் சொல்லும் பொருள் அல்ல. இத்தனை பேர் இந்த சாதியில் இருக்கிறோம் என்பதை வலியுறுத்த மட்டும்தான். குறிப்பாக, இத்தனை ஆண்டுக்காலமாக  சாதிப் பட்டியலில் இணைக்கப்படாதவர்கள், இட ஒதுக்கீடு என்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக பயன்பெறுவார்கள். எனவே, அனைத்து மாநிலங்களும் முன்வைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னேறிய மாநிலமாக இருக்கும் தமிழகத்திலும் எடுக்க வேண்டும்," என்றார். 

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

இது தொடர்பாக தி.மு.க-வின் மாணவரணி மாநிலத் தலைவர் இராஜீவ் காந்தி பேசியதாவது, ”திமுக அரசைப் பொறுத்தவரையிலும், 100% இட ஒதுக்கீட்டை வகுப்புவாரியாகப் பிரித்து அளிக்க வேண்டும் என்பதே நோக்கம். சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு தனியாக நடத்துவதைவிட, மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இணைந்து நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஆனால், பீகாரில் அதை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி -
ராஜீவ் காந்தி -

மேலும், அரசுப் பணிகளில் சமூகத்தில் வளர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் அந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள். எனவே, அதைச் சீர்செய்து சமூகத்தில் முன்னேற்றம் அடையாத வகுப்பினருக்கு அது கிடைக்க வேண்டும். இந்த நிலையைச் சரிசெய்ய சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். எனவே, மாநில அரசு அதைச் செய்ய முடியுமா என்பதை விவாதித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ``பாஜக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பில் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. தற்போது பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கக் கூடாது என்னும் நோக்கில் அவர்கள் ஆதரவாளர்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல், இந்தக் கணக்கெடுப்பு விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது என்றும் மாநில அரசு இதை எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி எழுப்பியிருக்கிறது. இட ஒதுக்கீட்டை சரியாக நிர்ணயிக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம். ஆனால், அதைப் பல ஆண்டுகளாக நடத்தாத அவலம் இந்தியாவில் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதைச் சரிபார்த்து வெளியிட கால அவகாசம் தேவைதான். ஆனால், இத்தனை ஆண்டுகளாக வெளியிடாமல் இருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.

ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
ஆர்.கே.ராதாகிருஷ்ணன்

அவர்கள் இதை மட்டுமல்ல, 2021-ம் ஆண்டு எடுக்கவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. ஒவ்வொரு சாக்கு சொல்லி எடுக்காமல் இருக்கிறார்கள். மக்கள் அறியாமையில் இருந்தால்தான் நாம் ஆட்சியில் இருக்க முடியும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர். அதை உணர்ந்தே இதை பாஜக அரசு செய்துவருகிறது. மேலும், இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மக்களை வைத்தே அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், அதிலிருந்து விலகி பொதுப் பிரிவினரை வைத்து அரசியல் செய்கிறது. இதனால், கணக்கெடுப்பின் மூலம் அதில் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்த்துவருகிறது பாஜக" என்றார்.