பிரீமியம் ஸ்டோரி

அமைச்சரிடம் கடுகடுத்த ஸ்டாலின்... கூடலூருக்கு அறிவிக்கப்பட்ட மருத்துவமனை!

உயர் மருத்துவ சிகிச்சை வசதிகள் இல்லாத நீலகிரியில், பல ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரவிருப்பதால், ஊட்டியில் இருக்கும் அரசு தலைமை மருத்துவமனையைக் கூடலூருக்கு மாற்றலாம் என்று அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் அழுத்தத்தால் சமீபத்தில் அவரது தொகுதியான குன்னூருக்கு அந்த மருத்துவமனை மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, “சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கும் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், நாங்கள் 70 கிலோமீட்டர் தூரமிருக்கும் ஊட்டிக்கு வரவேண்டியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூடலூரில் தி.மு.க தோற்றதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? வனத்துறை அமைச்சர் எங்களை வஞ்சித்துவிட்டார்!” என்றெல்லாம் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள் அந்தப் பகுதி மக்கள். இது குறித்து முதல்வர் அலுவலகம் வரை புகார்கள் செல்லவே... அமைச்சர் ராமச்சந்திரனை அழைத்த முதல்வர் தரப்பு, “யாரைக் கேட்டு மருத்துவமனையை இடம் மாற்றி அறிவித்தீர்கள்?” என்று கடுகடுத்திருக்கிறது. அதற்கு, “அலுவலக எழுத்தரின் கவனக்குறைவால் இப்படியாகிவிட்டது. உடனடியாக அரசு தலைமை மருத்துவமனை கூடலூருக்கு மாற்றப்படும்” என்று தெரிவித்திருப்பதோடு, அதையே அறிக்கையாகவும் வெளியிட்டிருக்கிறார் அமைச்சர். இதையடுத்து, “இதெல்லாம் தேவையா!” என்று முணுமுணுக்கிறார்கள் நீலகிரி கரைவேட்டிகள்!

கரைவேட்டி டாட் காம்

கோவை மாநகராட்சி மேயர் பதவி... பின்வாங்கும் அ.தி.மு.க நிர்வாகிகள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சியில் மேயர் பதவியைக் குறிவைத்து அ.தி.மு.க-வில் பலரும் வலம்வந்தார்கள். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ஜுனன், முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, மாநில செய்தித் தொடர்பாளர் மகேஸ்வரி உட்பட பலரும் இதற்காக முட்டிமோதினார்கள். ஆனால், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்த நிலையில், இவர்கள் அனைவரும் ‘கப்சிப்’ என்று அமைதியாகிவிட்டார்கள். “எவ்வளவு செலவு செஞ்சாலும், ஆளுங்கட்சிக்குத்தான் முடிவுகள் சாதகமாக இருக்கும்” என்று முணுமுணுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம், “அண்ணே... கொஞ்சம் உடம்புக்கு முடியலை... நான் வேணா நாடாளுமன்றத் தேர்தல்ல நிக்குறேனே...” என்று சாக்குபோக்கு சொல்லிவருகிறார்களாம்!

அரசு ஊழியர்மீது தாக்குதல்... அனிதாவுக்குக் கடைசி எச்சரிக்கை!

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை கன்னத்தில் அறைந்த பஞ்சாயத்தே தீராத நிலையில், அடுத்த பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் அனிதாவின் ஆதரவாளர் பில்லா ஜெகன். சமீபத்தில் தூத்துக்குடி அரசின் பழைய சுற்றுலா மாளிகைக்கு தன் நண்பர்களுடன் சென்றவர், அறைகளைக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால், அங்கிருந்த அறைகள் அனைத்தும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் தர மறுத்துவிட்டார்கள். இதில் ஆத்திரமடைந்தவர், அங்கிருந்த அரசு ஊழியரைத் தாக்கியிருக்கிறார். இந்த விவகாரமும் தலைமைக்குச் செல்லவே, பில்லா ஜெகனை தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறது தலைமை. ஏற்கெனவே தன் தம்பியை சுட்டுக் கொலை செய்த விவகாரத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த பில்லா ஜெகனை, அனிதாதான் போராடி கட்சியில் சேர்த்திருந்தார். இந்தநிலையில் இரண்டாவது முறையாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அனிதா மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் தலைமை, “இதுதான் கடைசி எச்சரிக்கை!” என்று ரெளத்திரம் காட்டியிருக்கிறதாம்!

கரைவேட்டி டாட் காம்

நேருவின் ஆதரவாளருக்கு செக்... காய்நகர்த்தும் அன்பில் கோஷ்டி!

திருச்சி தி.மு.க பாலக்கரை பகுதிச் செயலாளராக இருப்பவர் ‘மண்டி’ சேகர். நேருவின் ஆதரவாளரான இவர்மீது வழக்குகள் உள்ளன. இந்தநிலையில்தான், பெண் ஒருவர் சேகர்மீது ‘தன்னைக் கைவிட்டுவிட்டார்’ என்றரீதியில் முதல்வர் அலுவலகத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அன்பில் மகேஷின் உதவியாளர் அருண், திருச்சி கிழக்குத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தரப்பினர் மண்டி சேகருக்கு எதிராகக் காய்நகர்த்துகின்றனர். ஏற்கெனவே நேருவின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஏழு வட்டச் செயலாளர்களை மாற்றியிருக்கும் அன்பில் தரப்பு, “ரெளடிப்பசங்களுக்கு கட்சியில என்ன வேலை?” என்று கேட்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு