பிரீமியம் ஸ்டோரி

எல்லை மீறும் சம்பந்தி... கட்டம்கட்டும் டெல்டா ‘மாப்பிள்ளை’

டெல்டா மாவட்ட அ.தி.மு.க ட்ரீட்மென்ட் புள்ளியின் சம்பந்தி, சமீபநாள்களாகக் கட்சிக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டாராம். ஏற்கெனவே, தஞ்சாவூரில் அ.தி.மு.க பொன்விழாக் கூட்டம் நடைபெற்றபோது கட்சிக் கொடியை ஏற்றியவர், தற்போது ‘கட்சி நிகழ்ச்சி எதுவா இருந்தாலும், எனக்குக் கட்டாயம் அழைப்பு கொடுக்கணும்’ என்று நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டிருக்கிறாராம். இதில் அவருக்கு ஒத்துவராத கட்சி நிர்வாகிகள், மாப்பிள்ளை மூலம் கட்டம்கட்டப்படுகிறார்கள். இதையடுத்து, “எந்தப் பொறுப்பிலும் இல்லாத சம்பந்தி, கட்சிக்குள்ள எல்லை மீறலாமா?” என்று புலம்புகிறார்கள் தஞ்சாவூர் அ.தி.மு.க நிர்வாகிகள்!

கரைவேட்டி டாட் காம்

“கூட இருந்தே குழிபறிக்குறாங்க!” - தூத்துக்குடிக் களேபரம்...

முன்னாள் தி.மு.க கவுன்சிலரான தூத்துக்குடியைச் சேர்ந்த உமாதேவி, வரும் மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட்டுக்காக விண்ணப்பிக்கும் முடிவில் இருந்திருக்கிறார். இந்தநிலையில், சமீபத்தில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், ‘‘சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தேன். ஆறு மாதங்களுக்குள் என் பெயரை எப்படி நீக்க முடியும்?’’ என்று குமுறியதுடன், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளார். இதையடுத்து உள்ளூர் தி.மு.க கரைவேட்டிகளோ, ‘‘பொதுவா எலெக்‌ஷன் நெருங்குனாலே எதிர்க்கட்சிகாரங்க பேரை நீக்குற கூத்துதான் நடக்கும். இப்போ கூட இருந்தே குழிபறிக்குற வேலையை ஆரம்பிச்சுட்டாங்களா!” என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்!

‘‘என்னதான்யா நடக்குது திருப்பூர்ல?” - எகிறிய தலைமை... கப்சிப் நிர்வாகி!

திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க செயலாளர் டி.கே.டி.நாகராசன் சமீபத்தில், ‘உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மாநகராட்சி வார்டு வரையறை சரியாக செய்யப்படவில்லை. எனவே, மாநகராட்சியைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்’ என்று அறிக்கை வெளியிட்டார். சமூக வலைதளங்களிலும் இந்த அறிக்கை பகிரப்பட, கொதித்துப்போன உடன்பிறப்புகள் சிலர், ‘‘கடந்த பத்தாண்டுகளாக திருப்பூரில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தைக்கூட நடத்தாதவர், இப்போது பொங்குவது ஏன்? இது நமது ஆட்சியையே குற்றம் சொல்வதுபோல் இருக்கிறது’’ என்று தலைமைக்குப் புகார் தட்டியிருக்கிறார்கள். கடுப்பான தலைமை, ‘‘இப்பதான் திருப்பூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ செல்வராஜ் டாஸ்மாக் கடைக்கு எதிரா போராட்டம் நடத்துனாரு... இப்போ இவர் கிளம்பியிருக்காரு. என்னதான்யா நடக்குது திருப்பூர்ல? அவரோட பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டம் நடத்தச் சொல்லுங்க’’ என்று எகிறவே... உள்ளிருப்பு போராட்டத்தை ரத்து செய்துவிட்டு கப்சிப் ஆகிவிட்டது நகரச் செயலாளர் தரப்பு!

கரைவேட்டி டாட் காம்

“ஒரு லட்சம் பேரைத் திரட்டுனா கொரோனா வந்துடாதா?”

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதகளம் தொடர்கிறது. டிசம்பர் அல்லது ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், வார்டு வார்டாகச் சென்று மனுக்களை வாங்கி வரும் செந்தில் பாலாஜி, விரைவில் ஒரு லட்சம் பேரைத் திரட்டி பொதுக்கூட்டம் நடத்திக்காட்டுவதாக கட்சித் தலைமையிடம் சொல்லியிருக்கிறாராம். இதையடுத்து அவருக்கு எதிரான உள்ளூர் கோஷ்டிகளோ, “இப்பதான் கொரோனா குறைஞ்சிருக்கு... இவர் ஒரு லட்சம் பேரைத் திரட்டுனா கொரோனா தொற்று ஏற்படாதா?” என்று பொங்குகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், ‘உள்ளாட்சியில் எதிர்க்கட்சியைத் தெறிக்கவிடலாமா?’, ‘கொங்குல இனி எவனுக்கும் இல்லை பங்கு’ என்ற வாசகங்களுடன் கோவையில் போஸ்டர்களை ஒட்டி அதிரடிக்கிறார்கள்!

நிர்வாண கோலம்... முகத்தில் குத்து! - அசராத அ.தி.மு.க முன்னாள் எம்.பி.

நீலகிரி அ.தி.மு.க முன்னாள் எம்‌.பி கோபாலகிருஷ்ணன், சமீபத்தில் குன்னூரில் தலைக்கேறிய போதையில் நிர்வாணமாக ஒருவர் வீட்டிலிருந்து வெளியே வந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிர்வாண கோலத்திலிருந்த கோபாலகிருஷ்ணனைச் சிலர் தாக்கியதால் முகத்தில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்துவந்தார். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் வகித்துவந்த மாவட்ட அவைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. முன் ஜாமீனுக்காக அவர் போராடிவந்த நிலையில், ஒருவழியாக தற்போது முன் ஜாமீனும் கிடைத்துவிட்டது. இவ்வளவு நடந்தும் மனிதர் கொஞ்சமும் அசரவில்லையாம். ஒன்றுமே நடக்காததுபோல வெள்ளையும் சொள்ளையுமாக ஏரியாவில் வலம்வருவதைப் பார்த்து ஏரியாவாசிகளே ஆச்சர்யப்படுகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு