Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

பன்னீர் பெயரில் புஷ்பாபிஷேகம்... கடுப்பில் எடப்பாடி விசுவாசிகள்!

சில நாள்களுக்கு முன்பு நீலகிரி அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் ஒன்றிணைந்து சபரிமலை யாத்திரை சென்றிருந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்த கையோடு, ‘கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளராக பன்னீர் தொடர வேண்டும்’ என்று பன்னீரின் பூரட்டாதி நட்சத்திரத்தையும், கும்ப ராசியையும் சொல்லி புஷ்பாபிஷேகம் மற்றும் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இந்த அபிஷேக போட்டோக்களை அவர்கள் தங்களது வாட்ஸ்அப் குரூப்களில் பகிர... இதைப் பார்த்து கடுப்பிலிருக்கிறார்கள் எடப்பாடியின் விசுவாசிகள். “எடப்பாடி அண்ணனை ஓரங்கட்டுறதுக்காகவே பன்னீர் பேருல மட்டும் அபிஷேகம் செஞ்சுருக்காங்க... அண்ணன் பேருலயும் ஒரு அபிஷேகத்தைப் போட்டிருந்தா குறைஞ்சா போயிடுவீங்க!” என்று பொங்குகிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

வெளியே பொதுவுடமை... உள்ளே ஜமீன்தார்! - கோவை தோழர்கள் புலம்பல்...

சமீபத்தில் சி.பி.எம் மாவட்ட மாநாடு கோவை மருதமலையில் நடந்தது. இந்த மாநாட்டில் கட்சிப் பொறுப்பிலுள்ள குறிப்பிட்ட நபர்களின் ஆதரவாளர்களுக்கே மீண்டும் பொறுப்பு போட முடிவு செய்திருந்தார்கள். இதற்குக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலேயே பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதிய நியமனங்கள் தள்ளிப்போயுள்ளன. இதை முன்வைத்துப் பேசும் தோழர்களோ, “சமீபகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் உட்கட்சிப் பூசல்கள் பற்றியெரிகின்றன... வெளியில் பொதுவுடைமை பேசினாலும், உள்ளுக்குள் ஜமீன்தாரர்கள்போல ஒரு சிலரின் கைதான் ஓங்கியிருக்கிறது. கோவையைப் பொறுத்தவரை எம்.பி பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சிவஞானம் ஆகியோர் சொல்வதுதான் கட்டளையாக இருக்கிறது. ஜனநாயகம் சிறிதும் இல்லை” என்று புலம்புகிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

முகாம் மாறிய நேரு ஆதரவாளர்... திருச்சி தி.மு.க உள்குத்து!

அமைச்சர் கே.என்.நேருவின் நிழலாக வலம்வந்தவர், தி.மு.க திருச்சி மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர். சமீபத்தில் இவர் நேருவின் எதிரணியான அன்பில் மகேஷின் முகாமுக்கு அணி தாவிவிட்டார். இது பற்றி திருச்சி உடன்பிறப்புகளிடம் விசாரித்தால், “ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பதவிக்காக நேருவிடம் காய்நகர்த்தினார் சேகர். ஆனால், நேருவோ அந்தப் பதவிக்கு இன்னொருவர் பெயரை டிக் செய்துவிட்டார். இதனால் கடுப்பான சேகர், ‘இத்தனை நாளு விசுவாசமா இருந்து என்ன பிரயோஜனம்?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியதுடன், கையோடு அன்பில் அணிக்குச் சென்று இணைந்து கொண்டார். தற்போது நேருவுக்கு எதிராக முத்தரையர் சமூகத்தினரை திசைதிருப்பும் வேலைகளைச் செய்துவருகிறார் சேகர்” என்றார்கள்.

கரைவேட்டி டாட் காம்

“என்னை காலி பண்ணிட்டாங்க!” - குமரியில் புலம்பும் தாரகை...

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவியாக இருந்த தாரகை கத்பர்ட் கடந்த மாதம் கட்சிப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ், விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி ஆகியோர்தான் தனது பதவி நீக்கத்துக்குக் காரணம் என்று கொந்தளிக்கிறார்கள் தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள். தாரகை முன்பாக கட்சியினர் யாராவது எதிர்ப்பட்டால்கூட, “எந்தக் கட்சியிலயும் பெண்களை மதிக்க மாட்டேங்குறாங்க. பா.ஜ.க-வுல மாநிலத் தலைவரா இருந்தப்ப தமிழிசை செளந்தரராஜனை மதிக்கலை. தி.மு.க-வுல கனிமொழி எம்.பி-யை மதிக்கலை. காங்கிரஸ் கட்சியில என்னை மதிக்கலை. மாவட்டத்துல சீனியராக இருக்குறவங்க, எங்கே நான் வளர்ந்திடுவேனோன்னு என்னை காலி பண்ணிட்டாங்க...” என்று புலம்பித் தள்ளுகிறார். இதையடுத்து, எம்.எல்.ஏ-க்கள் தரப்புக்கும், தாரகை தரப்புக்கும் பனிப்போர் மேலும் முற்றிவருகிறது.

கரைவேட்டி டாட் காம்

விழா கமிட்டியில் இடமில்லை... படபடக்கும் பட்டுக்கோட்டை!

பட்டுக்கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற நாடியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட விழா கமிட்டியில் பட்டுக்கோட்டை தி.மு.க நகரப் பொறுப்பாளரான என்.ஆர்.வி.செந்தில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை மூலம் தன் ஆதரவாளர்களைப் பொறுப்பில் அமர்த்தியிருக்கிறார். இதையடுத்து, “கோயிலின் வளர்ச்சிக்காக உழைத்த பலரை நிராகரித்துவிட்டு இருவரும் தன்னிச்சையாகச் செயல்பட்டுவருகின்றனர். பக்தி முக்கியமல்ல... பணம்தான் முக்கியம் என்று கோயிலுக்கு சம்பந்தமே இல்லாதவர்களை விழா கமிட்டியில் நியமனம் செய்துள்ளனர்” என்று புலம்பும் உள்ளூர் பக்தர்கள் சிலர் இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism