Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

“எப்போ ஜெயிலுக்குப் போவாரு?” - கோவை எதிர்பார்ப்பு

நேரில் பார்த்தால் மட்டும்தான் அந்த முன்னாள் அமைச்சரைப் பார்த்து பம்முகிறார்களாம் கோவை அ.தி.மு.க நிர்வாகிகள். மற்றபடி ‘அண்ணனை எப்போ ஜெயில்ல போடுவாங்க!’ என்று கேட்காத குறையாக அவர் மீதான நடவடிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்களாம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோதுகூட, ‘‘முதல்ல அண்ணன் மேலதான் கைவெப்பாய்ங்கன்னு பார்த்தோம்... இப்படியாகிடுச்சே” என்று அங்கலாய்த்துக்கொண்டார்களாம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க-வில் அந்த முன்னாள் அமைச்சரால் ஓரங்கப்பட்டவர்கள், டம்மி பதவியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ‘‘அங்க போனா பத்தோட பதினொண்ணா இருக்கவேண்டி வரும். நம்ம அண்ணன் ஜெயிலுக்குப் போறவரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணா, கோவையில நாமதான் டான்” என்று மனக்கோட்டை கட்டியிருக்கிறார்களாம்!

கரைவேட்டி டாட் காம்

“சார், சொல்லச் சொன்னாரு!” - கரூர் கடுகடுப்பு...

‘மாப்பிள்ளை அவருதான். ஆனா, சட்டை என்னோடது’ என்கிற கதையாகிவிட்டது கரூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களின் நிலைமை! குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி ஆகிய மூவர்தான் அந்த எம்.எல்.ஏ-க்கள். இவர்கள் மூவரும் தங்கள் தொகுதி நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என எதற்குச் சென்றாலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் கூடவே அட்டையாக ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். “நீங்க இப்படித்தான் பேசணும், சார் சொல்லச் சொன்னாரு... நீங்க இப்படித்தான் பேட்டி கொடுக்கணும், சார் சொல்லச் சொன்னாரு...” என்று சகல விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதால் கடுகடுப்பில் இருக்கிறது மூவரணி!

“போன ஆட்சியே பரவாயில்லை!” - குமுறும் தஞ்சை ஆளுங்கட்சி நிர்வாகிகள்...

தஞ்சை தி.மு.க-வின் ‘பூமி’ புள்ளி ஒருவர், தனது ஏரியாவுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் பார் தொடங்குவதற்கு சொந்தக் கட்சியினரிடமே 3 லட்ச ரூபாயும், மாத மாமூலாக 20,000 ரூபாயும் தர வேண்டும் என்று கறார் காட்டுகிறாராம். ‘‘உங்ககிட்ட இவ்வளவு பணத்தைக் கொடுத்துட்டு, நாங்க எப்படிச் சம்பாதிக்க முடியும்?’’ என்று கேட்டால், ‘‘நாலஞ்சு மாசத்துக்கு மட்டும் பர்மிட் பணத்தை அரசுக்குக் கட்டுங்க. அப்புறம் பணம் கட்டாம பாரை நடத்திக்கலாம். யாரும் நம்மளைக் கேட்க மாட்டாங்க. போலீஸ் ரெய்டு வந்தாலும் நான் பார்த்துக்குவேன்’’ என சொல்லியே பாக்கெட்டை நிரப்பிக்கொள்கிறாராம். “போன ஆட்சியே பரவாயில்லை... இவ்வளவு அடாவடி காட்டலை!” என்று குமுறுகிறார்கள் தஞ்சை ஆளுங்கட்சி நிர்வாகிகள்!

“ஆதாரம் இருந்தா சொல்லுங்க!” - ஏமாற்றத்தில் நெல்லை கதர்கள்...

நெல்லை மாவட்ட கதர் பிரமுகர் ஒருவர் சமீபத்தில் மசாஜ் சென்டரில் நடந்த ரெய்டில் ஏடாகூடமாகச் சிக்கி, பலத்த சிபாரிசுக்குப் பிறகு கைது நடவடிக்கையிலிருந்து தப்பினார். ஆனாலும், விவகாரம் வெளியில் கசிந்துவிட்டதால், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக “அட போங்கப்பா... ஃபைனான்ஸ் வசூலிக்கப் போனப்ப போலீஸ் வந்துட்டாங்க... விஷயம் தெரிஞ்சதும், `அண்ணே நீங்க கிளம்புங்க’னு மரியாதையா அனுப்பிவெச்சாங்கப்பா” என்று வான்டடாகச் சென்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, எதிர்க் கோஷ்டியினர் சிலர் இந்த விவகாரத்தை மாநிலத் தலைமை வரை கொண்டு செல்லவே... “எல்லாம் சரி... அவர் மேலதான் கேஸ் போடலையே... ஆதாரம் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க, ஆக்‌ஷன் எடுக்குறேன்” என்று சொல்லவே தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரும்பியிருக்கிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

“கட்சி மாறி வந்தவங்களுக்குத்தான் மரியாதை!” - புலம்பும் குமரி உடன்பிறப்புகள்...

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க தொண்டரணி அமைப்பாளராக இருப்பவர் எம்.ஜே.ராஜன். ஏற்கெனவே தி.மு.க-வில் எம்.எல்.ஏ-வாக இருந்துவிட்டு, அ.தி.மு.க-வுக்கு தாவி மீண்டும் கடந்த மாதம் தி.மு.க-வில் சேர்ந்தவர் ஏ.ராஜன். சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வந்திருந்தபோது, கட்சி நிர்வாகிகள் பலரும் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரின் அருகில் குஷன் இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஏ.ராஜன். ஆனால், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் இருக்கும் எம்.ஜே.ராஜன், ஓர் மூலையில் நின்றுகொண்டிருந்தார். இதைப் பார்த்த உடன்பிறப்புகள் சிலர், “கட்சி மாறி மாறி வந்தவங்களுக்குத்தான் மரியாதை... உண்மையான கட்சித் தொண்டனைப் பாரு... மூலையிலதான் நிக்கணும்” என்று புலம்புகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism