
- ‘வட்டம்’ பாலா, ஓவியம்: சுதிர்
ஓ.சி-யில் நடந்த வெள்ளிவிழா... எம்.பி-யால் மாநகராட்சிக்கு நஷ்டம்!
மாங்கனி மாநகராட்சிக்குச் சொந்தமான அரங்கம் ஒன்று நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென்றால் நாளொன்றுக்கு வாடகை, ஜி.எஸ்.டி மற்றும் தூய்மைப் பணிகளுக்காக 2.66 லட்சம் ரூபாயும், மின்சாரக் கட்டணமாக யூனிட் ஒன்றுக்குத் தலா 13 ரூபாயும் செலுத்த வேண்டும். ஆனால், சமீபத்தில் இங்கு நடைபெற்ற ‘மீசைக் கவிஞர்’ பெயரிலான தொண்டு நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கு, பத்து பைசாகூட வாடகை, மின்கட்டணம் வசூலிக்காமல் ஓ.சி-யில் அரங்கத்தை வழங்கியிருக்கிறார்கள். இதன் பின்னணியை விசாரித்தால், ஆளுங்கட்சி எம்.பி-யான ‘வில் வித்தை’ பிரமுகரின் பெயர் அடிபடுகிறது. குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகத் தனக்கு நெருக்கமான விசுவாசியின் துணைவியார் இருப்பதால், தன்னுடைய எம்.பி லெட்டர் பேடிலிருந்து ஒரு சிபாரிசுக் கடிதம் எழுதிக்கொடுத்திருந்தாராம் ‘வில் வித்தை’ பிரமுகர். அப்படிக் கிடைத்ததுதான் இந்த ஃப்ரீ ஆஃபராம். ‘தொண்டர்களான எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் பாட்டில்கூட வாங்கித்தர மாட்டார். விசுவாசியின் வீட்டம்மாவுக்கு சிபாரிசு லெட்டரா...’ என்று முறைக்கிறார்கள் உ.பி-க்கள்!
எல்லை பிரிக்கச் சொல்லும் அமைச்சர்... வெயிட் காட்ட நினைக்கும் எம்.எல்.ஏ!
‘பூட்டு’ மாவட்டத்தின் ஆன்மிக மலைப்பகுதியையும், சுற்றுலா மலைப்பகுதியையும் சேர்த்து புதிய மாவட்டமாக்க முயன்றுவருகிறாராம் ‘இனிப்பு’ அமைச்சர். இவரின் இந்த யோசனைக்கு மேலிடத்திலிருந்தும் கிரீன் சிக்னல் கிடைக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கட்சியிலும் ஆட்சியிலும் ‘இனிப்பின்’ கை ஓங்குவதை விரும்பாத, ‘பஞ்சாமிர்த’ தொகுதி எம்.எல்.ஏ மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளை வலுவாக்கி, வரவிருக்கும் எம்.பி தேர்தலில் தலைமைக்குத் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறாராம். அதற்காகவே அண்மையில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை, ஒன்றியச் செயலாளர்கள் செலவில் கிடா விருந்தாகவே நடத்திக் காட்டினார். தற்போது, தெற்கு ஒன்றியப் பகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டியில் வேட்டி, சேலை விநியோகத்தையும் வற்புறுத்தியிருக்கிறார். ‘தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கு. இவங்க வெயிட்டைக் காட்ட லோக்கல் நிர்வாகிகளைச் செலவு செய்ய வெக்கிறாங்க...’ எனப் புலம்புகிறார்கள் கறுப்பு, சிவப்பு கரைவேட்டிகள்.

“இவங்க சண்டையில எங்களை டீல்ல விட்டுட்டாங்க!”
‘கோட்டை’ மாவட்டத்தில் மட்டும் ஆறு பேர் இலைக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர்களாக இருக்கிறார்கள். அதேபோல தமிழகம் முழுவதும் இலைக் கட்சிக்கு 400-க்கும் மேற்பட்ட தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இருக்கின்றனர். ‘தங்கத் தாரகை’ பொதுச் செயலாளராக இருந்தவரைக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,000 வரை சம்பளமாகவும், கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினால், சன்மானமாக கணிசமான தொகையும் வழங்கப்பட்டுவந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் துணிவானவர்-பணிவானவர் மோதலிலேயே கட்சியின் அன்றாட அரசியல் நீடித்துவருவதால், இந்தத் தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கு மேடை வாய்ப்புகள் குறைந்துபோய் வருமானமின்றி நிற்கிறார்கள். ‘அம்மா போனதுக்கு அப்புறம் எங்களுக்கு மாதச் சம்பளம் `கட்’ ஆகிருச்சு. இப்ப இருக்குறவங்க எங்களை மேடை ஏறவே விடுறதில்லை. அவங்க சண்டையில எங்களை டீல்ல விட்டுட்டாங்க...’ என்று குமைகிறார்கள் கோட்டை மாவட்ட ‘மைக்’ டைசன்கள்!
சட்டவிரோத மது விற்பனை... தி.மு.க - அ.தி.மு.க கூட்டு!
‘வெயில்’ மாவட்ட புதிய பேருந்து நிலையத்தின் முகப்பிலேயே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. அதனருகிலேயே, இலைக் கட்சி பிரமுகர் ஒருவர் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அனுமதியின்றி பார் செட்டப் உருவாக்கிவைத்திருக்கிறார். இங்கு நேரம் காலமின்றி 24 x 7 மதுபான விற்பனை ஜரூராக நடைபெற்றுவருகிறது. இதன் பின்னணியை விசாரித்தால் ஆளுங்கட்சியின் ‘ஷாக்’ அமைச்சர் பெயரைச் சொல்லித்தான் இலைக் கட்சிப் பிரமுகரே கடைவிரித்திருக்கிறாராம். அதனாலேயே மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட இந்தப் பகுதியில் ரோந்து வருபவர்கள் எவரும் இந்தச் சட்டவிரோத மது விற்பனையைக் கண்டுகொள்வதில்லை என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘வெளியில்தான் கட்சிரீதியா ரெண்டுபட்டு நிக்கிற மாதிரி காட்டிக்கிறாங்க... சரக்கு, வியாபாரம்னு வந்துட்டா ஒண்ணு கூடிடுறாங்க...’ என்கிறார்கள் வேதனையோடு!
மனம் திருந்திய ‘மன்னர்’ பிரமுகர்... மிரட்சியில் அண்ணனின் விழுதுகள்!
‘ஜில்’ மாவட்ட நகராட்சி ஒன்றில் கவுன்சிலராக இருக்கும் ஆளுங்கட்சி ‘மன்னர்’ பிரமுகர் முழுநேர பில்டிங் கான்ட்ராக்டராகவே வலம்வருகிறார். ‘இயற்கை எழில் கொஞ்சும் ஏரியாவில் காட்டேஜ் அமைக்க வேண்டுமா... என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்...’ என்கிறரீதியில் தன் ஆளுங்கட்சி அதிகார பலத்தைக் கையில் வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக மலைகளைக் குடைந்தும், மரங்களை வெட்டியும் புதிய புதிய கட்டுமானங்களை எழுப்பிக் கொடுத்துவந்தார். திடீரென மனம் திருந்திய குமாரனாக, தன் மைந்தனின் திருமண அழைப்பிதழை, மர விதைகள் கொண்ட பசுமைப் பத்திரிகையாக அடித்து, ‘இயற்கையைக் காப்போம்’ என்று கழக உடன்பிறப்புகளுக்கெல்லாம் பிரசங்கம் செய்தாராம். “அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி...” என விழிகள் விரிய மிரண்டு கிடக்கிறார்களாம் அண்ணனின் விழுதுகள்.