Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

“பெரிய மனுஷனுக்கு அழகா?”

மதுரை மாவட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர், கடந்த ஆட்சியில் மாவட்ட அமைச்சர் ஒருவர் மூலம் ஒப்பந்தப் பணிகள், பல்வேறு சிபாரிசுகளைப் பெற்று வளமாக இருந்தார். இரண்டாவது முறை வெற்றிபெற்றும், தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருப்பதால், கையில் பண ஓட்டம் இல்லை. இப்படியே இருந்தால் சரிவராது என்று முடிவெடுத்து, பழைய நட்பில் கரூர் ரூட்டில் மதுரை கிழக்கு ஏரியாவை ரீச் செய்துவிட்டாராம். இதையடுத்து, தொகுதியில் நடக்கும் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை அவரின் ஆதரவாளர்களே எடுத்துவருகிறார்கள். வேலைகளில் கமிஷனும் பக்காவாக வந்துவிடுகிறதாம். “கட்சிக்காகக் கடுமையா உழைச்சு ஜெயிக்கவெச்சோம். இவரோ ஆளுங்கட்சி பிரமுகருக்கு பி.ஏ மாதிரியில்ல ஒட்டிக்கிட்டு திரியுறாரு... இதெல்லாம் ‘பெரிய’ மனுஷனுக்கு அழகா?” என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் தொகுதி அ.தி.மு.க-வினர்.

கரைவேட்டி டாட் காம்

வேலுமணி சேட்டன்! - கேரளாவிலும் அதகளம்...

கோவையில் போட்ட ஆட்டம் போதாதென்று கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலும் தனது விழுதுகளைப் பரப்பிவருகிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. நடந்து முடிந்த கேரள சட்டசபைத் தேர்தலில், இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்திருந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோற்றுவிட்டாலும், அந்தந்தப் பகுதிகளிலுள்ள சின்னச் சின்ன பிரச்னைகளுக்காக இப்போதும் களத்தில் கம்பு சுழற்றுகிறார்கள். அந்தவகையில், பாலக்காட்டில் ஆங்காங்கே அ.தி.மு.க கொடிகளையும், வேலுமணி படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்தவர்களையும் காண முடிகிறது. எப்போதும் கறுப்பு நிற பொட்டுவைக்கும் வேலுமணி, கேரளா நாளிதழ் விளம்பரத்துக்காக சந்தனப்பொட்டு, ஜரிகை வேட்டி சகிதம் சேட்டன்போல போஸ் கொடுத்திருக்கிறார். வேலுமணியின் இடங்களில் நடந்த ரெய்டின்போது, ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சி’ என்று பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க-வினர் போராட்டமும் நடத்தினார்கள். ‘வேலுமணி சேட்டனுக்கு ஏதாவதுன்னா... கேரளாவும் சும்மா இருக்காது’ என்று மலையாள ரத்தத்தின் ரத்தங்கள் இப்போதும் கொந்தளிக்கிறார்கள்.

‘‘நம்ம கட்சி எப்படி வளரும்?’’

தூத்துக்குடி அ.தி.மு.க-வில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் மீது உள்ளூர் நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ‘‘2019, மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை வேண்டுமென்றே கூட்டணியிலுள்ள பா.ஜ.க-வுக்கு விட்டுக்கொடுத்தார்; தமிழிசை போட்டியிட்டு, தோற்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான த.மா.கா-வுக்கு ஒதுக்கினார்; அதன் வேட்பாளர் விஜயசீலனும் தோற்றார். வரவிருக்கும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில், மேயர் வேட்பாளராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவை நிறுத்த அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் அ.தி.மு.க-வை வளரவிடாமல் கூட்டணிக் கட்சியை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்துகிறார். ஊரான் கட்சியை ஊட்டி ஊட்டி வளர்த்தால், நம்ம கட்சி எப்படி வளரும்?” என்று புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கரைவேட்டி டாட் காம்

திருச்சியில் ஆட்டம்போடும் இருவர்!

அமைச்சர் அன்பில் மகேஷின் வலது, இடது கரங்களாகச் செயல்படும் இருவரின் செயல்பாடுகளால், திருச்சி தி.மு.க-வினர் கொதித்துப்போயிருக்கிறார்கள். ‘‘ஐஸ்க்ரீம் பிரமுகர், அவரின் மாமாவான ‘நிலவு’ நிர்வாகி இருவரும்தான் அவர்கள். அன்பில் மகேஷ் யாரைச் சந்திக்க வேண்டும்; யாரைச் சந்திக்கக் கூடாது என்பதை முடிவுசெய்வது அவருக்கு உதவியாக இருக்கும் ஐஸ்க்ரீம் பிரமுகர்தான். தன்னைத் தாண்டி யாரும் அவரைச் சந்தித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஏரியாவில் கட்சிக் கூட்டங்கள் நடந்தால், அதில் மாமாவின் புகைப்படத்தைப் போட்டு போஸ்டர் அடிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவு போட்டிருக்கிறார். ‘நிலவு’ நிர்வாகிக்கு ஒத்துப்போகாததால் இதுவரை ஆறு கிளைச் செயலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்’’ என்று பொங்கும் தி.மு.க நிர்வாகிகள், ‘‘கே.என்.நேருவுக்கும் அன்பில் மகேஷுக்கும் மோதல் உச்சகட்டம் அடைவதற்குக் காரணமே இவர்கள்தான். இவர்களை விலக்கிவைத்தாலே மாவட்டத்திலுள்ள தி.மு.க நிர்வாகிகள் நிம்மதியடைவார்கள்’’ என்றார்கள்.

அரசு அதிகாரிகளை வறுத்தெடுக்கும் எம்.எல்.ஏ!

டெல்டா மாவட்டத்திலிருக்கும் நீர்நிலை பெயரைக்கொண்ட தொகுதியின் எம்.எல்.ஏ ஒருவர், அரசு அதிகாரிகளைச் சகட்டுமேனிக்கு ஒருமையில் திட்டுகிறாராம். கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாகத் தனது கருத்தைக் கூறிய பெண் தாசில்தாரை, “ரொம்ப பேசாத... நான் சொல்றதை மட்டும் நீ செய்” என்று கலெக்டர் முன்னிலையிலேயே கடுகடுத்திருக்கிறார். அதேபோல, கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அரசு மருத்துவர் ஒருவரை, “நான்தான் இங்க எம்.எல்.ஏ... நீ இல்லை... நான் சொல்றதை மட்டும் செஞ்சா போதும்’ என்று ஒருமையில் பேச... அவர் வெளிறிப்போய்விட்டார். ‘‘தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளை இப்படிக் கண்டபடி பேசுவதால், ஆளுங்கட்சிக்குத்தான் கெட்ட பெயர்’’ என்று தி.மு.க-வினரே புலம்புகிறார்கள்.