Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

செம்மண் குவாரி வழக்கு மாற்றம்... காய்நகர்த்தினாரா பொன்முடி?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த தி.மு.க ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, செம்மண் குவாரி நடத்தி ஊழல் செய்ததாக விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில், பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணியும் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, ‘பொன்முடிக்கு ஆதரவாகச் செயல்பட்டு அந்த வழக்கைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக’ சந்தேகப்பட்டுத்தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா

சி.வி.சண்முகத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாகச் சொல்லப்பட்டது. தற்போது பொன்முடி மீண்டும் அமைச்சராக வந்திருக்கும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு, இப்போது மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பணி ஓய்வுபெற்ற சி.எஸ்.சுப்பிரமணியன் என்பவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘‘சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தமக்கு தண்டனை உறுதியாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான், மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றவைத்துவிட்டார் பொன்முடி. சிறப்பு அனுமதிபெற்று அரசு வழக்கறிஞராக சி.எஸ்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதும் பொன்முடி விருப்பத்தின் பேரில்தான். இதன் மூலம் இத்தனை ஆண்டுக்காலம் நடந்துவரும் செம்மண் குவாரி வழக்குக்கு முற்றுப்புள்ளிவைக்க பொன்முடி முடிவெடுத்துவிட்டார்’’ என்று பொன்முடியின் ஆதரவாளர்கள் குஷியாகச் சொல்லிவருகிறார்கள். ஆனால், அக்டோபர் 4-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த பொன்முடியை, நீதிமன்றத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீதிபதி காக்கவைத்ததில் மனிதர் கலங்கிப்போய்விட்டாராம்!

‘‘பழைய கட்சிப் பாசம் இன்னும் போகலை!’’

சைக்கிள் கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்குத் தாவி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்டா பகுதியில் போட்டியிட்டு தோற்றார் சிவனடியார் பெயர் கொண்டவர். தற்போது

அ.தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பில் இருந்தாலும், இன்னும் பழைய கட்சிப் பாசம் போகவில்லை என்பது அ.தி.மு.க-வினரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. ‘‘முந்தைய கட்சியின் நிர்வாகிகளிடம் மட்டுமே நெருக்கம் காட்டிவருகிறார். அ.தி.மு.க நிர்வாகிகளைக் கண்டுகொள்வதே இல்லை. தேர்தல் செலவுக்கென கட்சித் தலைமை இவருக்குக் கொடுத்த

12 ஸ்வீட் பாக்ஸ்களில் நான்கை மட்டுமே வெளியில் எடுத்தவர், மீதமுள்ளவற்றை அப்படியே அமுக்கிவிட்டார். அதையும் தன்னைச் சுற்றி முந்தைய கட்சிக்காரர்களையே அரணாக வைத்துக்கொண்டு அவர்களுக்கே செலவு செய்தார்’’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். ‘‘இப்போதுகூட கட்சி நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ-தான் செலவுசெய்துவருகிறார். ஆனால், அந்தச் செலவுகளைத் தானே செய்ததாக மற்றவர்களிடம் பொய்யாக உதார் விட்டுவருகிறார்’’ என்று எரிச்சலுடன் சொல்கிறார்கள் அதிமுக-வினர்.

கிறுகிறுத்த கான்ட்ராக்டர்... அதிர்ந்துபோன இனிகோ இருதயராஜ்!

மார்க்கெட் தொடர்புடைய வார்த்தையைப் பெயரில் முன்னொட்டாகக்கொண்டவர், திருச்சி மையப்பகுதியின் தி.மு.க பகுதிச் செயலாளராக இருக்கிறார். கட்டப்பஞ்சாயத்து, ரெளடியிசத்தில் கோலோச்சும் இவர், பார் உரிமையாளர்களிடம் மாதா மாதம் மாமூல் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ‘‘எம்.எல்.ஏக்களை, மாவட்டச் செயலாளர்களை கவனிப்பது மாதிரி பகுதிச் செயலாளர்களைக் கவனிக்க முடியாதா நீங்க?’’ என்று ஒப்பந்ததாரர்களிடம் பிரச்னையில் ஈடுபடுவதும் இவரின் வழக்கம். சமீபத்தில் ‘‘திருச்சி கிழக்குத் தொகுதி

எம்.எல்.ஏ-வான இனிகோ இருதயராஜுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும்’’ என்று ஒரு கான்ட்ராக்டரிடம் பேரம் பேசியிருக்கிறார். அவர் கேட்ட தொகையால் கிறுகிறுத்துப்போன அந்த கான்ட்ராக்டர், எம்.எல்.ஏ-விடமே ‘‘உங்களுக்கு எத்தனை பர்சன்டேஜ் கொடுக்கணும்?’’ என்று கேட்க, அதிர்ந்துபோன இனிகோ இருதயராஜ், விஷயத்தை முழுமையாக விசாரித்திருக்கிறார். பின்பு இனிகோ இருதயராஜ் சம்பந்தப்பட்ட பகுதிச் செயலாளரை அழைத்து ‘‘கட்சி இருக்குற நிலைமையில என்னை மாட்டிவிடப் பாக்குறீயா?’’ எனக் கடுமையாக டோஸ் விட்டதோடு, ‘‘இதுபோல் நடந்துகொண்டால் அமைச்சரிடம் சொல்லவேண்டியிருக்கும்’’ என்று எச்சரித்து அனுப்பினாராம்.

கரைவேட்டி டாட் காம்

கொடநாடு வழக்கு விசாரணை... கறுப்பு கோட் எம்.எல்.ஏக்கள்!

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், பரபரப்புத் திருப்பங்களுடன் நடைபெற்றுவருகிறது கொடநாடு வழக்கு. வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து, உயர்மட்டத்துக்குத் தகவல் தெரிவிப்பதை தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளின் கரைவேட்டிகள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் கூடலூர் எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க வழக்கறிஞர் திராவிடமணி, கறுப்பு கோட் சகிதமாக கோர்ட்டுக்குள் என்ட்ரி கொடுத்து மேலிடத்துக்கு அப்டேட் செய்துவந்தார். தற்போதைய கூடலூர்

அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான வழக்கறிஞர் ஜெயசீலனும் அதே பாணியில் கரைவேட்டியை மாற்றிவிட்டு வக்கீல் அவதாரம் எடுத்து வழக்கு விசாரணையின்போது ஊட்டி கோர்ட்டுக்குள் என்ட்ரி கொடுத்துவருகிறார். வழக்கின் போக்கையும், கள நிலவரத்தையும் உடனுக்குடன் எடப்பாடிக்கு அப்டேட் செய்துவருகிறாராம்!

மல்லுக்கட்டும் மல்லாடி... சமாதானப்படுத்தும் ரங்கசாமி!

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜ்யசபா எம்.பி பதவியைக் குறிவைத்து முதல்வர் ரங்கசாமியைச் சுற்றிவந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு வாரி இரைத்த மல்லாடிக்கு, ராஜ்யசபா எம்.பி பதவியைக் கொடுத்துவிடலாம் என்று ரங்கசாமியும் முடிவெடுத்திருந்தார். திடீரென உள்ளே புகுந்த பா.ஜ.க., அதைத் தட்டிச் சென்றுவிட்டது. அதில் கடுப்பான மல்லாடிக்கு, புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றுவருகிறாராம் முதல்வர் ரங்கசாமி. ஆனால், ‘‘பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத இந்தப் பதவிக்கும், சுழல் விளக்குக்கும்தான் இவ்வளவு வாரி இறைத்தேனா?’’ என்று முரண்டுபிடிக்கிறாராம் மல்லாடி. அதற்கு, ‘‘எனது பிரதிநிதியாக நீங்கள் டெல்லியில் இருப்பீர்கள்’’ என்று கூறிச் சமாதானப்படுத்தியிருக்கிறாராம் ரங்கசாமி.