Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

புது வீடு... புது கார்! - மதுரை வாரிசின் திடீர் வளர்ச்சி...

மதுரை தி.மு.க-வில் பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் அமைச்சரான பொன்னான நபர், தன் மகனிடம் கட்சிப் பொறுப்புகள் பலவற்றையும் ஒப்படைத்துவிட்டார். இதைப் பயன்படுத்திக்கொண்டு, மகன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்று புலம்புகிறார்கள் மதுரை உடன்பிறப்புகள். சமீபத்தில் கட்சிக்குச் சம்பந்தமில்லாதவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பொறுப்புகளில் நியமித்தார் என்றும் புகார் எழுந்தது. ‘‘மாநகராட்சி காய்கறி மார்க்கெட், பார்க்கிங் ஏலங்களை கட்சியினர் பெயரில் எடுத்தவர், அவற்றை அ.தி.மு.க-வினருக்குப் பகடிக்குக் கொடுத்துவிட்டார்’’ என்று புகார் வாசிப்பவர்கள், ‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்த நாலு மாசத்துலேயே புது வீடு, புது கார் வாங்கிட்டாரு... இன்னும் என்னென்ன ஆட்டம் போடப்போறாரோ?” என்று புலம்புகிறார்கள் மதுரை தி.மு.க பிரமுகர்கள்!

ஓரங்கட்டப்படுகிறாரா புகழரசன்? - மயிலாடுதுறை தி.மு.க பஞ்சாயத்து...

மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க-வில் மாவட்டப் பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கும், வழக்கறிஞரணியைச் சேர்ந்த புகழரசனுக்கும் நடக்கும் பனிப்போர்தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. வழக்கறிஞர் புகழரசன் தன் தந்தையும், மறைந்த தி.மு.க பேச்சாளருமான ‘மாதிரிமங்கலம்’ கண்ணையன் பெயரில் ஆண்டுதோறும் நலத்திட்ட உதவிகளைக் கட்சியினருக்கு வழங்கிவருகிறார். அந்த வகையில், நலிவடைந்த கழகப் பிரமுகர்கள் 70 பேருக்கு மாதந்தோறும் 600 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சிக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்து, நிவேதா முருகனுக்கு நேரில் சென்று அழைப்பும் விடுத்திருந்தார். ஆனால், நிகழ்ச்சியை நிவேதா முருகன் புறக்கணித்ததுடன் நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்களையும் செல்லவிடாமல் தடுத்துவிட்டாராம். ‘‘பூம்புகார் தொகுதியில் போட்டியிட நிவேதா முருகன் வாய்ப்பு கேட்டிருந்த நிலையில், புகழரசனும் அதற்கு முயன்றார். அதை மனதில் வைத்துக்கொண்டே புகழரசனை ஓரங்கட்டுகிறார் நிவேதா முருகன்” என்று முணுமுணுக்கிறார்கள் மயிலாடுதுறை தி.மு.க நிர்வாகிகள்.

டீரீட்மென்ட் புள்ளியின் பாரபட்சம்... புலம்பலில் தஞ்சை தெற்கு அ.தி.மு.க!

பட்டுக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.சேகர், அ.தி.மு.க-வின் தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக இருக்கிறார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் என்பதால், ஏரியாவில் கோலோச்சும் ட்ரீட்மென்ட் புள்ளி இவரைக் கட்சி நிகழ்ச்சிகள் எதற்கும் அழைப்பதில்லையாம். கட்சியின் விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் திட்டமிட்டே இவரது பெயரைத் தவிர்க்கிறார்களாம். ‘‘ஏரியாவின் ட்ரீட்மென்ட் புள்ளி, தனக்குக் கூழைக் கும்பிடு போடுபவர்களை மட்டுமே அரவணைக்கிறார். எடப்பாடி, பன்னீர் ஆதரவாளர்கள் என்றால்கூட, ‘மாவட்டத்துல எனக்கு மட்டும்தான் ஆதரவாளராக இருக்கணும்’ என்று மற்றவர்களை ஒதுக்கிவைக்கிறார். இவரது பாரபட்சமான நடவடிக்கைகளால், வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை தெற்குப் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு கடும் சேதாரம் ஏற்படும்” என்று இப்போதே எச்சரிக்கிறார்கள் தஞ்சாவூர் அ.தி.மு.க நிர்வாகிகள்!

கரைவேட்டி டாட் காம்

‘‘என்கிட்டயே கமிஷன் கேட்குறாங்க..!’’ - புதுக்கோட்டை நிர்வாகியின் வசூல் வேட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருக்கும் சத்தியமூர்த்தி, “ஆலங்குடி பேரூராட்சியில் வரும் அரசு சம்பந்தமான வேலைகளுக்கு டெண்டர் போட்டால், உள்ளூர் தி.மு.க நிர்வாகி ஒருவர் என்னிடமே 15 சதவிகிதம் கமிஷன் கேட்கிறார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், பேரூர் கழகச் செயலாளர், திருச்சி மண்டல தொலைபேசி ஆலோசனைக்குழுத் தலைவர் என்று இந்த மாவட்டத்தில் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறேன். கட்சியின் மூத்த உறுப்பினரான எனக்கே இந்த நிலைமை என்றால், கட்சி எப்படி வளர்ச்சியடையும்?’’ என்று தலைமைக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். இரு தரப்பிடமும் மாவட்டத் தலைமை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. ‘‘கட்சிக்காகச் செலவு பண்ண வேண்டியிருக்கு... கமிஷன் கொடுத்தால்தான் பேரூராட்சியில் டெண்டர் எடுக்க முடியும்” என்று உள்ளூர் நிர்வாகி கறார் காட்டுகிறாராம்.

வாரிசுகளை முன்மொழிந்த அமைச்சர்கள்... குமுறும் தூத்துக்குடி உடன்பிறப்புகள்!

தூத்துக்குடி தி.மு.க-வில் வடக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக அமைச்சர் கீதா ஜீவனும், தெற்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இருக்கிறார்கள். அமைச்சர்கள் என்கிற வகையில் இருவரது செயல்பாடுகளிலும் முதல்வருக்கு திருப்தி இல்லையாம். அதனால், இருவரது மாவட்ட கட்சிப் பொறுப்புகளையும் பறித்தால், ஒருவேளை துறையின் செயல்பாடுகளில் வேகம் காட்டுவார்களோ என்று அறிவாலயம் யோசிக்கிறது. இதையடுத்து, ‘‘மாவட்டப் பொறுப்புல உங்களுக்கு அடுத்தபடியா யாரை நியமிக்கலாம்?’’ என்று இருவரிடமே சீனியர்கள் கேட்க, கீதா ஜீவன் தன் தம்பி ஜெகனின் பெயரையும், அனிதா ராதாகிருஷ்ணன் தன் மூன்றாவது மகன் ஆனந்த மகேஷ்வரனின் பெயரையும் முன்மொழிந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் உள்ளூர் உடன்பிறப்புகளின் காதுகளுக்கு வரவே, ‘‘கட்சியைக் காப்பாத்தணும், கட்சி வளரணும்னு நினைச்சுக் கேட்டா திரும்பவும் குடும்ப உறுப்பினர்களையே முன்மொழிஞ்சுருக்காங்க... மாவட்டத்துல கட்சிக்காக வேலை பார்க்குறவங்க யாரும் பதவிக்கு வந்துடக் கூடாதுனு எவ்வளவு நல்ல எண்ணம் பாரு!’’ என்று குமுறுகிறார்கள்.