Published:Updated:

விட்டதும் தொட்டதும்!

தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை சௌந்தர்ராஜன்

‘`2019-ல் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவரையிலும் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாமல், ‘வெயிட்டான தலைவர்’ஆக இருந்தேன்.

விட்டதும் தொட்டதும்!

‘`2019-ல் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவரையிலும் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாமல், ‘வெயிட்டான தலைவர்’ஆக இருந்தேன்.

Published:Updated:
தமிழிசை சௌந்தர்ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழிசை சௌந்தர்ராஜன்

‘முரட்டு சிங்கிள்’ பட்டத்தைத் துறக்கத் துடிக்கும் 90’ஸ் கிட்ஸ்களில் ஆரம்பித்து, ‘சட்டப் புத்தகத்தை அட்டை டு அட்டை திருத்தி முடிச்சாச்சு... அடுத்து சக்கர்பெர்க் புக்கை (ஃபேஸ்புக்) திருத்த ஆரம்பிக்கலாமா ப்ரோ...’ என்று கூலாக அடுத்த ‘ட்வென்டி ட்வென்டி’ ஆடக் காத்திருக்கும் அமித்ஷா - மோடி வகையறா அரசியல்வாதிகள் வரை அனைவருக்குமே வெரைட்டியான புத்தாண்டு உறுதிமொழிகள் வருடம்தோறும் உண்டு! இந்த வரிசையில், ‘புத்தாண்டில் எதை விட்டீங்க... புதுசா எதைத் தொட்டீங்க..?’ என்று தமிழக அரசியல்வாதிகளின் ஜாலியான உறுதிமொழிகளைச் சொல்லச்சொல்லிக் கேட்டோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துரைமுருகன்

‘`சிகரெட், தண்ணி அடிச்சிக்கிட்டிருந்தா, ‘அந்தப் பழக்கத்தையெல்லாம் விட்டாச்சு’ன்னு சும்மா அடிச்சு விடலாம்... ஆனா, எனக்குத்தான் அதுமாதிரி பழக்கமே கிடையாதே!

எனக்கிருந்த ஒரே கெட்ட பழக்கம்... எங்கே போனாலும் நான்வெஜ் அயிட்டங்களாத் தேடிப்புடிச்சு ஒரு பிடிபிடிக்கிறதுதான். ஆனா, அதைக்கூட ஆறு மாசத்துக்கு முன்னாடியே விட்டுட்டேன். இப்போ நான் சுத்த சைவம்!

Durai Murugan
Durai Murugan

அடுத்ததா, வாக்கிங் போறது, யோகா பண்றதுன்னு ஏற்கெனவே பண்ணிக்கிட்டிருந்த நல்ல விஷயங்களைக்கூட இந்த 2019-ல் விட்டுத் தொலைச்சுட்டேன். இந்தப் புத்தாண்டிலாவது அதையெல்லாம் தொடரணும்னு நினைக்கிறேன்... அவ்வளவுதான்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாஞ்சில் சம்பத்

“2019-ல் வெளிவந்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் ‘யாரடா மக்கள்’ என நான் பேசியிருந்த டயலாக்தான் இன்றைக்குத் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் ரிங்டோன். தவிர, ‘சம்பவம்’ என்ற ஒரு புதிய படத்தில் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனவே, 2019 எனக்குச் சிறப்பான ஆண்டு.

Nanjil Sampath
Nanjil Sampath

சினிமா வாய்ப்புகளுக்காக நான் யாரிடமும் போய் நிற்கவில்லை. கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புக்கும்கூடக் காலம் கடந்துவிட்டது. ஆனாலும், ‘2020-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில், முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்க’ உறுதி பூண்டிருக்கிறேன். அடுத்து, வெப் சீரிஸிலும் நடிகராக ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன். தவிர, புத்தகங்கள் எழுதி வெளியிடவும், கனடாவுக்குப் பயணப்படவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்!’’

பொன்.ராதாகிருஷ்ணன்

“2021-ல் தமிழக பா.ஜ.க அங்கம் வகிக்கிற கட்சிதான் ஆட்சி அமைக்கும். அதற்கான முயற்சியை 2020-லேயே தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் எனது புத்தாண்டு உறுதிமொழி!

Pon Radhakrishnan
Pon Radhakrishnan

அடுத்து, என்னை எல்லோருமே ‘ஏன் எப்போதும் சீரியஸாகவே இருக்கிறீர்கள்...’ என்று கேட்டுவருகிறார்கள். எனக்கும் எல்லோரையும் போல கலகலப்பாக இருக்க ஆசைதான். இனிமேல், கல்லூரி நாள்களில் இருந்ததைப்போல ஜோவியலாக என்னை நான் மாற்றிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன்.’’

மன்சூர் அலிகான்

‘`2019-ல் மட்டும் என்னை வைத்து மூன்று லட்சம் செல்ஃபிகளாவது மக்கள் எடுத்திருப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, நான் நிக்கிறது, நடக்கிறது, பல்லு வெளக்குறதுன்னு என்னை வெச்சு விதவிதமா செல்ஃபி எடுத்துப்போட்டு நிரப்பிட்டாங்க மக்கள். நானும் பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கிட்டேன். புத்தாண்டிலாவது இந்த செல்ஃபி எடுக்குற பொழைப்பு வேண்டாம்னு முடிவெடுத்தி ருக்கிறேன்.

Mansoor Ali Khan
Mansoor Ali Khan

ஏன்னா, என்னோட நின்னு செல்ஃபி எடுக்கிறதனால அவங்களோட சுயமரியாதையை இழந்துடறாங்க. ‘உங்களோட 10 பேரு சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்குற அளவுக்கு நீங்க வாழ்க்கையில உயர்றதுதான் முக்கியம். அதனால மத்தவங்களோட போய் நின்னு செல்ஃபி எடுத்துக்காதீங்க’ன்னு கேட்டுக்கிட்டு வர்றேன்!’’

அமைச்சர் செல்லூர் ராஜு

‘`நான் ரொம்பவும் முன்கோபி. கட்சி வேலைகளில் யாராவது சுணக்கம் காட்டினால், பொது இடம் என்றுகூடப் பாராமல் தொண்டர்களைத் திட்டிவிடுவேன். இது தவறான பழக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தப் புத்தாண்டி லிருந்தாவது இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.

Sellur K. Raju
Sellur K. Raju

அடுத்து, எப்பவோ முடிந்துபோன தெர்மாகோல் விவகாரத்தைக்கூட இப்போதுவரை ‘உள்ளூர் விஞ்ஞானி’ என்று மீம்ஸ்களில் கிண்டலடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது எகிப்திலிருந்து இறக்குமதியான வெங்காயத்தைப் பற்றிப் பேசும்போது, ‘இதில் காரம் அதிகமாக இருப்பதால் கொழுப்பைக் கரைக்கும். அதனால் இதயத்துக்கு நல்லது’ என்று சொல்லிவிட்டேன். இதைக்கூட, ‘ஈஜிபுத்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது - சொல்கிறார் விஞ்ஞானி செல்லூர்ராஜு’ என்று மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறாங்க.

அதனால் உறுதியாக ஒரு முடிவெடுத்து விட்டேன்... ‘2020-ம் ஆண்டிலிருந்து அதிகமாக மீம்ஸ் வரக்கூடிய அளவுக்குப் பேசி மாட்டிக் கொள்ளாமல், வார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்று.’’

தமிழிசை சௌந்தர்ராஜன்

‘`2019-ல் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தவரையிலும் நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாமல், ‘வெயிட்டான தலைவர்’ஆக இருந்தேன். இப்போது ஆளுநர் ஆனபிறகு இங்கேயும் நிர்வாக ரீதியான அலுவல்கள் அதிகமாக இருக்கின்றன. நிறைய பணியாளர் களுக்கு மத்தியில் நாமும் பணிபுரியவேண்டிய திருப்பதால், சாலட், ஜூஸ் என்று அடிக்கடி சாப்பிடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

வெயிட்டான ஆளுநராக இருக்கலாம்... ஆனால், குண்டான ஆளுநராகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். ஆக, தலைவராக இருந்தவரையில் சாப்பிடக்கூட நேரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். இங்கே, அதிகமாக சாப்பிட்டுவிடக் கூடாது என்று கஷ்டப்படுகிறேன். இந்தப் புத்தாண்டிலிருந்து டயட்டைக் கடைப்பிடிப்பதிலும் உடற்பயிற்சி செய்வதிலும் இன்னும் கூடுதல் கவனமாக இருக்க நினைத்திருக்கிறேன்.

அப்பாவைப் பற்றி நான் எழுதிவருகிற புத்தகத்தையும் என் பேச்சுகளைத் தொகுத்து ஒரு புத்தகத்தையும் இந்த ஆண்டில் வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.’’

டி.ராஜேந்தர்

‘` ‘மியூசிக்கல் லவ் ஸ்டோரி’ ஒன்றைத் தற்போது படமாக்கிவருகிறேன். படத்தின் பாடல்களுக்கான மெட்டமைத்தல், செட்டமைத்தல் என பிஸியாக இருக்கும்போதுதான், திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் வேலை வந்தது. அதில் சிறியதொரு வெற்றியை இறைவன் எனக்குக் கொடுத்துள்ளான். 2020-ம் ஆண்டு திரைத்துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சி வரவேண்டும். அதற்கான உழைப்பில் மட்டுமே என் கவனம் இருக்கிறது. மற்றபடி அரசியலைப் பற்றி நோ டயலாக்!

T. Rajendar
T. Rajendar

வாழ்க்கையில் நான் வேகமாக ஓடிப் பார்த்து விட்டேன். நான் கடந்துவந்த பாதையை இப்போது திரும்பிப் பார்க்கும்போது, ‘வேகத்தை விட விவேகம்தான் வாழ்க்கையில் முக்கியம்’ என்று உணர்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்ற கீதையின் வழியைத்தான் புத்தாண்டிலிருந்து கடைப்பிடிக்க முடிவெடுத்திருக்கிறேன். எது நடந்தாலும் அது இறைமயம்! படபடப்பு, பதைபதைப்பு எதுவும் இல்லாமல் வாழ்க்கை அமைதியாகப் போகிறது... எல்லாம் இறைமயம்!’’

கே.எஸ்.அழகிரி

‘`காலதாமதம் என்பது என்னோடு ஒட்டிப் பிறந்த குழந்தை. எங்கள் வீட்டில்கூட நான் நான்காவதாகப் பிறந்த குழந்தைதான். அதில்கூட ‘விரைவாக மூத்த பிள்ளையாகப் பிறக்கவில்லை. பொறுமையாகத்தான் பிறந்திருக்கிறாய்’ என என் அம்மா செல்லமாகத் திட்டுவார்.

K S Azhagiri
K S Azhagiri

கட்சிக் கூட்டங்களுக்குக்கூட லேட்டாகப் போய் நின்று நிறைய முறை அசடு வழிந்திருக்கிறேன். நான் லேட்டாக வந்ததைச் சுட்டிக்காட்டும்விதமாக, ‘இதோ அழகிரியே வந்துவிட்டார்...’ என்று அழுத்திச் சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பார் ஜி.கே.மூப்பனார். ஆனால், ப.சிதம்பரம் வார்த்தைகளால் சொல்லாமல், முக ஜாடையிலேயே சொல்லி விடுவார். எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், கடந்த 2019-ம் ஆண்டும் இப்படித்தான் கழிந்திருக்கிறது. 2020-ம் ஆண்டிலாவது இந்தக் காலதாமதம் என்ற என் பிறவிக் குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்... பார்க்கலாம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism