Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

பூனைக்கு மணி கட்டுவது யாரென்று புலம்பிவருகிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள்!

கரைவேட்டி டாட் காம்

பூனைக்கு மணி கட்டுவது யாரென்று புலம்பிவருகிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள்!

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘‘அண்ணனின் நூறாவது மிரட்டல்!’’

வேலூர் மாவட்ட ஜெ பேரவையில் பொறுப்பிலிருக்கும் பிரமுகர் ஒருவர் ஊரைச் சுற்றிலும் ஏகத்துக்கும் கடன் வாங்கிவைத்திருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் திரும்பக் கேட்டால், ‘கடன் கொடுத்தவர்கள் மிரட்டலால் நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்’ என்று அவர்களின் பெயர்களை லெட்டரில் எழுதிவைத்துவிட்டு மாயமாகி விடுகிறாராம். ஏற்கெனவே நான்கைந்து முறை இப்படிக் காணாமல்போனவர், ஓரிரு வாரங்களில் வீடு திரும்பியிருக்கிறார். இதனால், கடன் கொடுத்தவர்கள் அவரைப் பார்த்தால், ‘பார்த்து செய்ப்பா’ என்று கெஞ்சுகிறார்கள். இதற்கிடையே புதிதாகக் கடன் வாங்கிய இடத்தில் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், ஒரு மாதத்துக்கு முன்னர் தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு மாயமாகிவிட்டார். அவரின் மனைவி கொடுத்த புகாரை அடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், பெங்களூரில் அறை எடுத்து குடியும் கும்மாளமுமாக இருந்த பிரமுகரை மீட்டிருக்கிறார்கள். இவரது அட்ராசிட்டியைப் பார்த்து பணம் கொடுத்தவர்கள் பதறிப்போய் கிடக்க, வேலூர் அ.தி.மு.க நிர்வாகிகளோ, ‘இது அண்ணனின் நூறாவது தற்கொலை மிரட்டல்’ என்று கலாய்க்கிறார்கள்!

‘‘கட்சி வேற... தொழில் வேற!’’

திருச்சி அ.தி.மு.க ஐடி பிரிவு நபர் ஒருவர், டெல்டா பகுதி ‘ட்ரீட்மென்ட்’ புள்ளியை, `தாத்தா’ என்று உரிமையாக அழைக்கும் அளவுக்கு நெருக்கமான உறவுக்காரர். கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், ‘தி.மு.க-வினரிடம் நெருக்கம் காட்டுகிறார்கள்’ என்று தாத்தாவிடம் போட்டுக்கொடுத்தே சொந்தக் கட்சியினர் பலரைக் களையெடுக்க வைத்தாராம். இந்தநிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தி.மு.க-வினருடன் நெருக்கம் காட்டிவருவதுடன், டெண்டர்களுக்காக அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களை அணுகிவருகிறார். இது குறித்து அ.தி.மு.க-வினர் கேள்வி கேட்கும்போது, “கட்சி வேறு, தொழில் வேறு” என்று கூலாகக் கூறியிருக்கிறார். “உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என்று கொந்தளிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

‘‘ஸ்டாம்ப் சைஸ் போட்டோகூட போடலை!”

நீலகிரி மாவட்டத்தில், மாவட்டச் செயலாளர் முபாரக் ஆதரவாளர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆதரவாளர்கள் என்று இரு கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறது தி.மு.க. தற்போது அமைச்சரின் கை ஓங்கியிருக்கும் நிலையில், மா.செ முபாரக்கைத் திட்டமிட்டே ஓரங்கட்டுவதாகக் கொதிக்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். சமீபத்தில் வனத்துறை அமைச்சரின் நிகழ்ச்சிக்காக, ஒட்டப்பட்ட போஸ்டரில் மா.செ-வின் படமோ, பெயரோ இடம்பெறவில்லை. இதையடுத்து, ‘‘வட்டச் செயலாளருக்கு இருக்கிற மரியாதைகூட நமக்கு இல்லாமப் போச்சு. ஸ்டாம்ப் சைஸ் போட்டோகூட எனக்குப் போடலை’’ என்று புலம்புகிறாராம் மா.செ முபாரக்.

மசாஜ் சென்டரில் சிக்கிய கதர் பிரமுகர்!

நெல்லை நகரிலுள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடக்கிறது என்று வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரெய்டுக்குச் சென்றபோது, நகரின் முக்கிய கதர் பிரமுகர் ஒருவர் கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார். அவர் உட்பட நான்கு பேரை போலீஸார் அள்ளிக்கொண்டுஸ்டேஷனுக்குச் சென்றிருக்கிறார்கள். ஸ்டேஷனில் அந்தப் பிரமுகர் தன்னை விடுவிக்கக் கோரி எவ்வளவோ கெஞ்சியும், போலீஸார் மசியவே இல்லை. ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கவே, அப்போதும் விடாதவர்கள் அதிகாலைவரை ஸ்டேஷனிலேயே உட்காரவைத்த பிறகே விடுவித்திருக்கிறார்கள். காரணம், கடந்த காலங்களில் பதவி அதிகாரத்தை வைத்துக்கொண்டு போலீஸாரை அந்தப் பிரமுகர் படாதபாடுபடுத்தினாராம். இறுதியாக அவரை விடுவித்தபோதுகூட, “இனிமே எங்களுக்கு ஏதாச்சும் குடைச்சல் கொடுத்தா, மசாஜ் சென்டர்ல வெச்சு உங்களை எடுத்த போட்டோவை வெளியிடுவோம்’ என்று எச்சரித்தே அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்து, ‘துண்டைக் காணோம்... துணியைக் காணோம்’ என்று ஓடியிருக்கிறார் கதர் பிரமுகர்!

‘ஓசி பிரியாணி’ கேட்கும் தி.மு.க நிர்வாகி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘உதயமான’ பேரூராட்சியில் ஆளுங்கட்சியின் பொறுப்பிலிருக்கும் செல்வமான நிர்வாகி, பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களிடம் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது சின்ன வீட்டுக்கும் சேர்த்து வகை வகையான அசைவ அயிட்டங்களை வாங்கித் தர வேண்டும் என்று மிரட்டுகிறாராம். அன்றைய நாள்களில் அதிகாலையிலேயே மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, நண்டு, இறால் என்று வாட்ஸ்அப்பில் வரும் அயிட்டங்களைப் பார்த்து தலைசுற்றாத குறையாக அதிர்ந்துபோகும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களுக்குள் முறைவைத்துக்கொண்டு செலவைப் பங்கிட்டு, அசைவ அயிட்டங்களை அவருக்கு சப்ளை செய்கிறார்கள். பூனைக்கு மணி கட்டுவது யாரென்று புலம்பிவருகிறார்கள் துப்புரவுப் பணியாளர்கள்!