கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

‘மண்ணின் மைந்தர்கள் உரிமைகளை வலியுறுத்துவது பாசிசமா?’

பெ.மணியரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெ.மணியரசன்

அண்ணா பேச்சின் வாயிலாகத்தான், முதன் முதலாக காரல் மார்க்ஸ், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய பெயர்களைத் தெரிந்து கொண்டேன்.

ஐம்பதாண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையிலும் முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னிறுத்தியும் போராடிவருபவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன். காவிரி உரிமை மீட்புக்குழு, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு, தெய்வத் தமிழ்ப்பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுவரும் மணியரசன், மே பத்தாம் தேதி தனது 75-வது அகவையில் காலடி எடுத்து வைத்தார். அவரின் இந்த அரை நூற்றாண்டுக்கால அரசியல் பயணம் குறித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘`அரசியல் மீதான ஈர்ப்பு உங்களுக்கு எந்த வயதில் ஏற்பட்டது?’’

‘`தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆச்சாம்பட்டி எனும் கிராமம்தான் என் சொந்த ஊர். நான் நான்காவது படிக்கும்போது, எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள செங்கிப்பட்டியில், நாவலர் நெடுஞ்செழியன் பங்கேற்ற தி.மு.க கூட்டம் நடைபெற்றது. என் மாமா என்னை அந்தக் கூட்டத்துக்கு அழைத்துப் போனார். நாவலரின் பேச்சைக் கேட்டபிறகு தி.மு.கவின் மீது ஒரு ஈடுபாடு வந்தது. தொடர்ந்து, அண்ணாவின் பேச்சு, மாலைமணி, காஞ்சி போன்ற தி.மு.க இதழ்களில் வந்த கட்டுரைகளைப் படித்ததன் வாயிலாக தமிழ்மொழி, இன உணர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1965 மொழிப்போர் காலத்தில், திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மாணவனாக நான் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். எங்கள் பள்ளி, இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் குழுவுக்குச் செயலாளராகவும் இருந்தேன். நான், திருச்சி தேசியக் கல்லூரியில் பி.யூ.சி படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் ஊரில், என் முயற்சியில் தி.மு.க கிளையைத் தொடங்கினோம். எங்கள் கிளையின் வட்டப் பிரதிநிதியாக நான் இருந்தேன். இப்படித்தான் என் அரசியல் வாழ்வு தொடங்கியது.

அண்ணா பேச்சின் வாயிலாகத்தான், முதன் முதலாக காரல் மார்க்ஸ், விஞ்ஞான சோஷலிசம் ஆகிய பெயர்களைத் தெரிந்து கொண்டேன். ‘தீக்கதிர்’ என்கிற பெயரில் வார இதழ் வருவதைத் தெரிந்துகொண்டு வாங்கிப் படித்தேன். 1969-ல் நடந்த வியட்நாம் விடுதலைப் போர் எனக்குள் பல மாற்றத்தை உண்டாக்கியது. மிகச்சிறிய நாடு அமெரிக்க ஏகாதிபத் தியத்தை எதிர்த்துப் போரிடு வது வியப்பாக இருந்தது.

1970-களில் லெனின் நூற்றாண்டையொட்டி, கம்யூனிச நூல்கள் ஏராளமாக வெளியாகின. அவற்றை வாங்கிப் படித்தபிறகு, தமிழ்நாடும் சோஷலிச மண்ணாக இருக்கவேண்டும் என்கிற விருப்பம் உண்டானது. பின்பு, அதற்கான அமைப்பாக தி.மு.க இருக்காது என முடிவு செய்து முறைப்படி கடிதம் கொடுத்து விலகினேன். அந்த நேரத்தில், மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியில் ஏராளமான புரட்சிகரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த ஈர்ப்பில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். தொடர்ந்து, 13 ஆண்டுகள் முழு நேர ஊழியராகப் பணியாற்றினேன்.’’

 ‘மண்ணின் மைந்தர்கள் உரிமைகளை வலியுறுத்துவது பாசிசமா?’

‘`மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பு வகித்துவந்த நீங்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் திரும்பக் காரணமாக அமைந்த விஷயம் எது?’’

‘`ஈழச்சிக்கல் உள்ளிட்ட பல விஷயங்களில் கொள்கையளவில் சில மாறுபாடுகள் ஏற்படவே, 1984-ல் நான் உட்பட பல தோழர்கள் கட்சியிலிருந்து விலகி, தனியாக ஒரு கம்யூனிச அமைப்பைத் தொடங்கினோம். ஆனால், இந்தியாவில் பல இன மக்கள் வாழ்வதால், அனைத்திந்திய அளவில் சோஷலிசப் புரட்சி சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு வந்தோம். ஓர் இனம் இறையாண்மையுடன் தன்னைத்தானே ஆட்சி செய்யாமல் சோஷலிசத்தை அடைய முடியாது. அதனால் இனி தமிழ்த் தேசியத்தின் பெயரில்தான் இயக்கம் நடத்தவேண்டும் எனவும் முடிவு செய்தோம். தொடர்ந்து, 1990 பிப்ரவரி 25-ல், தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாட்டைச் சென்னை பெரியார் திடலில் நடத்தினோம். தொடர்ந்து முப்பதாண்டு களுக்கும் மேலாக தமிழ்நாட்டு இறையாண் மைக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.’’

‘`தொடர்ந்து திராவிட அரசியலை விமர்சிக்கிறீர்களே, தமிழ்த் தேசியத்துக்கு முதன்மை எதிரி திராவிடமா?’’

‘`இல்லை. முதன்மையான எதிரி பிராமணியமும் இந்திய தேசிய ஆதிக்க சக்தி களும்தான். அவர்கள்தான் மொழிகள், மாநில உரிமைகளுக்கு எதிரானவர் களாக, தமிழினத் துக்குப் பகைவர்களாக இருக்கி றார்கள். ஆனால், அவர் களுக்கு நட்பு சக்திகளாக திராவிடக் கட்சிகள் செயல்படுகின்றன. அதன் காரணமாக அவர்களையும் இரண்டாம் நிலையில் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. அதேவேளை, நம் முதல் பகை சக்தியாக தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளைப் பார்க்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை.’’

‘`காவிரி, நீட், எழுவர் விடுதலை, தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளின் பல கோரிக்கைகளுக்காக தி.மு.க-வும் குரல் கொடுக்கிறது. ஆனால், தமிழ்த்தேசியவாதிகள் தி.மு.க-வையே அதிகம் எதிர்ப்பது ஏன்?’’

‘`தமிழ்த் தேசியவாதிகள், தி.மு.க-வை மட்டுமே எதிர்க்கிறார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. அதேவேளை, தி.மு.க வெறும் வாயளவில்தான் இந்த விஷயங்களையெல்லாம் உச்சரிப்பார்களே தவிர, ஆட்சியில் இருக்கும்போது தீர்வுக்காக எதையும் செய்த தில்லை. தவிர, தி.மு.க மீது இளைஞர்களுக்குக் கோபம் இருப்பதற்குக் காரணம், ஈழத் தமிழர் விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போட்டதால்தான். இந்தியாவின் துணையோடுதான் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்து தமிழினத்தை அழித்த கட்சி காங்கிரஸ். அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருந்தது தி.மு.க. அப்போது ஏற்பட்ட வடு இளைஞர்கள் மத்தியில் இன்னும் மறையவில்லை.’’

 ‘மண்ணின் மைந்தர்கள் உரிமைகளை வலியுறுத்துவது பாசிசமா?’

‘`சாதி ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளில் உங்கள் இயக்கம் உட்பட தமிழ்த்தேசிய அமைப்புகள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?’’

‘`தமிழ்த் தேசியவாதிகள் யாரும் எந்த நிலையிலும் சாதி ஆதிக்கத்தை ஆதரிப்பதில்லை. சாதி ஒழிப்பு என்பதைவிட, இந்தக் காலத்தில் சாதி ஆதிக்க ஒழிப்பு, மனிதர்கள் சமத்துவம் ஆகியவற்றை உடனடி இலக்காக வைத்துச் செயல்பட்டுவருகிறோம்.’’

‘`ஆரம்பத்தில், பெரியாரை தமிழ்த் தேசியத் தந்தை என உங்கள் அமைப்பில் வரையறுத் திருந்தீர்கள். நாளடைவில் அதை மாற்றியது ஏன்?’’

``எங்கள் அமைப்பில் உள்ளவர்கள் பிறவி மேதைகள் அல்லர். முயன்று தவறி கற்றுக்கொண்டு முன்னேறுபவர்கள். அந்தவகையில், பெரியாரைத் திறனாய்வு செய்தபோது, பெரியார் தமிழ் மொழியை, தமிழர் எனும் இன அடையாளத்தை ஏற்காதவர் என்பதைப் படித்துத் தெளிந்து கொண்டேன். தமிழ்த் தேசியத்தை ஏற்காத பெரியாரைத் தமிழ்த் தேசியத் தந்தை எனச் சொன்னது தவறு என உணர்ந்தேன். அதனால் எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டோம்.’’

‘` `வெளியாரை வெளியேற்றுவோம்’ என்று வடமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைப்பது பாசிசம் இல்லையா, வெளிநாடுகளில் தமிழர்களும் தொழிலாளர்களாக, அகதிகளாக இருக்கிறார்களே?’’

‘`எங்கள் அமைப்பினர் நேரடியாகச் சென்று வெளியேற்றுவது என்று அர்த்தம் கிடையாது. அது, தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு அரசு, அமைப்புகள் ஆகிய அனைவருக்குமான பொது முழக்கம். ‘மண்ணின் மக்களுக்கே வேலை’ என்பதற்குப் பல மாநிலங்களில் ஏற்கெனவே சட்டங்கள் இருக்கின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டிலும் அப்படியொரு சட்டம் தேவை என்பது பாசிசமா, சொந்த மண்ணின் மக்களை வறுமையில் வாட விடுவதுதான் ஜனநாயகமா? வேலைவாய்ப்பு மட்டுமல்லாது தமிழ்நாட்டுத் தொழில் வணிகமும் பறிபோகிறது. தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், மண்ணின் மக்களுக்கு துரோகம் செய்கின்ற மனப்பாங்குக்குப் பழகிவிட்டவர்கள் எங்களை விமர்சிக்கிறார்கள். தயவுசெய்து அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.’’

‘`மன்னர்களின் பெருமைகளைப் பேசுகிறார், பழைமைவாதத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் மணியரசன் என எழும் விமர்சனங்கள் குறித்து?’’

‘`மன்னர்களிடம் இருந்த முற்போக்கான அம்சங்களை எடுத்துக்கொள்வதிலும் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதிலும் எந்தத் தவறுமில்லை. ரஷ்யப் பேரரசர் மகா பீட்டரின் 200-ம் ஆண்டு விழாவின்போது அவர் செய்த முற்போக்கு நடவடிக்கைகளை லெனின் பாராட்டிக் கட்டுரை எழுதியிருக்கிறார். மன்னர்களின் முற்போக்குப் பாத்திரங்களை நிராகரிப்பது வரலாற்றை நிராகரிப்பதாகும்.”

‘`ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் என்கிற உங்களின் கோரிக்கைக்காக, உங்களுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டதே?’’

``ஆம். கடுமையான மிரட்டல்கள் வந்தன. காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். ஏற்கெனவே இதுபோல பல அடக்குமுறைகளை, வன்முறைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். என்ன விளைவு வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.’’

‘`கடந்த ஏழு ஆண்டுக்கால பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘`வரம் கொடுத்தவன் தலையிலே கால் வைத்ததைப் போல, வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறித்ததும், பன்னாட்டு முதலாளிகளின் சொர்க்கபுரியாக இந்தியாவை மாற்றியதும்தான் பா.ஜ.க கடந்த ஏழு ஆண்டுகளில் செய்த சாதனை.’’