Tamil News today live : ``என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம்; உங்களால் கையாள முடியாது!" - பிக்பாஸ் பாலாஜி ட்வீட்

Tamil News today live: 26-03-2023 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
``என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம்; உங்களால் கையாள முடியாது!" - பிக்பாஸ் பாலாஜி ட்வீட்

விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிய `பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 4-வது சீசன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் நேற்றைய தினம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து, ``தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். ஆன்லைன் ரம்மியைக் காட்டிலும், இது அதிகம் பேரைக் கொன்று, பல குடும்பங்களை அழிக்கிறது" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாலை 4:30 மணியளவில் மீண்டும் ட்விட்டரில், ``தமிழ்நாட்டில் குடியால் குடும்பங்களை இழந்து, என்னைப்போல ஆதரவற்று நிற்பவர்கள் அதிகம். என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். உங்களால் கையாள முடியாது" எனப் பதிவிட்டிருக்கிறார். பாலாஜியின் ட்வீட்டுக்கு இணையவாசிகள் கமென்ட்ஸ் செய்துவருகின்றனர்.
``ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம், மிகப்பெரிய அரசியல் மோசடி!" - டி.ஆர்.பாலு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, ``ராகுல் காந்தியின் எம்.பி பதவி காலம் முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இனிமேல் நாடாளுமன்றத்துக்குள் அவர் வர முடியாது. இதன் மூலம் மிகப்பெரிய அரசியல் மோசடி நடைபெற்றிருக்கிறது. இப்படியான மோசடிகளுக்குத் துணை போகிற பிரதமர் மோடி நாட்டிலிருந்து அகற்றப்பட வேண்டும். இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கு மோடியும், அவருக்கு துணை நிற்கிற நண்பர்களும் முயற்சி செய்கிறார்கள். இதை தமிழ்நாடு அனுமதிக்காது" என்றார்.
`இவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் இல்லையே..?' - பாஜக-வைச் சாடிய பிரியங்கா
டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சத்தியாகிரகப் போராட்டம் நடத்திவருகிறார். இதில் பேசிய பிரியங்கா, ``நாட்டுக்காகப் போராடியதற்காக நாங்கள் வெட்கப்பட வேண்டுமா... என்னுடைய குடும்பம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை ரத்தத்தால் வளர்த்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் என்னுடைய தந்தை அவமதிக்கப்பட்டார், என்னுடைய சகோதரருக்கு `மீர் ஜாஃபர்' போன்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

உங்கள் அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் என்னுடைய அம்மாவை அவமதிக்கிறார்கள். உங்கள் முதல்வர் ஒருவர், `ராகுல் காந்திக்குத் தன்னுடைய தந்தை யார் என்றுகூட தெரியாது' என்கிறார். ஆனால், இவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார் காட்டமாக.
``தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி" - ட்விட்டரில் பயோவை மாற்றிய ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் நீதிமன்றம் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால், ராகுல் காந்தி தன்னுடைய எம்.பி பதவியை இழந்தார். இந்த நிலையில், ராகுல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் பயோவை மாற்றியிருக்கிறார். அதில், ``This is the official account of Rahul Gandhi | Member of the Indian National Congress | Dis’Qualified MP" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
``பா.ஜ.க ராகுல் காந்தியைப் பேசவிடுவதில்லை, நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!" - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, டெல்லியில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துகிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பா.ஜ.க ராகுல் காந்தியைப் பேசவிடுவதில்லை. ராகுல் காந்தி நாட்டுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார். இதை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. இன்று காந்தி சிலைக்கு முன்பாக சத்தியாகிரகம் நடத்தப் போகிறோம்" என்றார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் : நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் காங்கிரஸ்!
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி இன்று காலை 10 முதல் மாலை 5 மணி வரை, நாடு தழுவிய அளவில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவிருக்கிறது.
அனைத்து மாநிலங்களிலும் காந்தி சிலைக்கு முன்பாகவும், கட்சி அலுவலகங்களிலும் அந்தந்த மாநில நிர்வாகிகள் தலைமையில் இந்தச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைமை அலுவலகத்திலும், பிரியங்கா காந்தி ராஜ் கட் பகுதியிலும் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்கின்றனர்.