Published:Updated:

Tamil News Today: `பெகாசஸ் உளவு விவகாரம்' - விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்..யார்?'

27-10-2021| இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Oct 2021 4 PM

`பெகாசஸ் உளவு விவகாரம்' - விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் யார்..யார்?'

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 13-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பெகாசஸ்
பெகாசஸ்

ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கத் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிறப்புக் குழு குறித்ததான கூடுதல் தகவல்களை அறிவித்திருக்கிறது. இந்த குழுவானது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் இயங்கும். குழுவில் உளவுப்பிரிவு முன்னாள் இயக்குநர் அலோக்ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஓபராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முறையாக ஆராய்ந்து, 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

27 Oct 2021 4 PM

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவிருக்கும் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சஷ்டி திருவிழா அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்கி, 15-ம் தேதி நிறைவடைகிறது. சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, 10-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

சஷ்டி விழாவின் முக்கிய தினங்களான 9,10-ம் தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

நவம்பர் 4 முதல் 8 வரையும், 11 முதல் 15 வரை தினமும் காலை 5 முதல் இரவு 8 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், திருச்செந்தூர் விடுதிகளில் பேக்கேஜிங் முறையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டிருக்கிறது.

27 Oct 2021 7 AM

`பெகாசஸ் உளவு விவகாரம்' - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

`ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரது செல்போன் உரையாடல்களை பெகாசஸ் என்னும் செயலி மூலம் மத்திய அரசு ஒட்டுக்கேட்டது' என்ற சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு பூதாகரமாக வெடித்தது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. பெகாசஸ் உளவு விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பத்தரிகையாளர் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 13-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு