Tamil News Today Live: கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Tamil News Today Live : 16-05-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
கள்ளச்சாராயம் - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!


கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
நித்யா கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டறியாதது ஏன்? - ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``மார்ச் மாதம் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் நடைபெற்ற நித்யா கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியைக் கண்டறியாத தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நித்யா கொலைக்குப் பிறகு, அந்தப் பகுதியில் ஆங்காங்கே வன்முறை நடந்துவருகிறது. இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்யவில்லை.
இந்தக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை மறைக்க அரசியல்ரீதியாக அழுத்தம் தரப்படுகிறதா... என்பது குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தக் கொலை வழக்கு குறித்து விரிவான அறிக்கை அளிப்பதோடு, உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
``இ.பி.எஸ்-ஸுக்கு என்ன அருகதை இருக்கிறது'' - பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூற எடப்பாடி பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது. அவருடைய ஆட்சியில் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கிறார்கள்'' எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.
``அரசே மது வணிகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது'' - திருமா


கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ``டாஸ்மாக் மதுபான வணிகம் நடக்கும்போது, கள்ளச்சாராய விநியோகம் இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு கள்ளச்சாராய ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதே நேரம் மதுவிலக்கையும் அமல்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
நாளை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை மாலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
`கள்ளச்சாராயம் விற்பது அரசுக்கு முன்பே தெரிந்திருக்கிறது' - இ.பி.எஸ் சாடல்

விழுப்புரத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கள்ளச்சாராயம், போலி மதுபானம் தொடர்பாக, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 1,600 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், இந்த கள்ளச்சாராய விற்பனையும், போலி மதுபான விற்பனையும் அரசுக்கும், காவல்துறைக்கும் முன்பே தெரிந்திருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
நியூசிலாந்து விடுதியில் தீ விபத்து - 6 பேர் பலி

நியூசிலாந்து நாட்டின், மத்திய வெலிங்டனிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 11 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
பொது சிவில் சட்டம்: ``90 % வேலைகள் முடிந்துவிட்டன!'' - உத்தரகாண்ட் முதல்வர்

பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பொது சிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ``உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு, பொது சிவில் சட்ட வரைவு தொடர்பான 90 சதவிகிதப் பணிகளை முடித்துவிட்டது. ஜூன் 30-க்குள் அவர்கள் பொது சிவில் சட்ட வரைவைத் தயாரித்துவிடுவார்கள். பின்னர் அதை அமல்படுத்துவதை நோக்கி நாங்கள் நகர்வோம். மேலும், அனைத்து மாநிலங்களும் அதை நோக்கி நகர வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு" என்று செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
செந்தில் பாலாஜி வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவுசெய்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கவும், சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணையைத் தொடரவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
``யார் முதுகிலும் குத்த மாட்டேன், பிளாக்மெயிலும் பண்ண மாட்டேன்!” - டி.கே.சிவகுமார்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், இன்னும் முதல்வர் யார் என்பதைத் தேர்வுசெய்வதில் இழுபறி நீடிக்கிறது. சித்தராமையா ஏற்கெனவே டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில், இன்று டி.கே.சிவகுமாரும் டெல்லிக்குச் செல்கிறார். டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டி.கே.சிவகுமார், ``எங்களுடையது (காங்கிரஸ்) ஒன்றுபட்ட வீடு, எங்கள் எண் 135. இங்கு யாரையும் பிரிக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநிலத் தலைவராக ஒரு பொறுப்பைப் பெற்றிருக்கிறேன். யார் முதுகிலும் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்” என்றார்.
ரயிலிலிருந்து திடீரென பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு!

சென்னை கடற்கரை, தாம்பரம் வழித்தடத்தில் சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்து பெட்டிகள் திடீரெனக் கழன்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மின்சார ரயில்களின் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால், கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பாதிப்பைச் சந்தித்தனர். ரயில் பெட்டிகள் கழன்றது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.