Published:Updated:

Tamil News Today Live: ``குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது!" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
Live Update
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ( ட்விட்டர் )

Tamil News Today Live : 18-05-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

18 May 2023 8 PM

``குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது!" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

``கருத்துச் சுதந்திரத்தைக் காக்கவேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை. அதற்காக, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது. `தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் ஏற்புடையனவா என்று நாங்கள் முடிவுசெய்கிறோம்." - `தி கேரளா ஸ்டோரி' படத்துக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்.

18 May 2023 4 PM

மத்திய சட்டத்துறை இணைய அமைச்சரும் மாற்றம்!

எஸ்.பி.சிங் பாகேல்
எஸ்.பி.சிங் பாகேல்
ட்விட்டர்

மத்திய சட்டத்துறை இணையமைச்சராக இருந்த எஸ்.பி.சிங் பாகேல் (SP Singh Baghel) சுகாதாரத்துறை இணையமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல்துறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 May 2023 4 PM

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு பயணம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கர்நாடக முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை பெங்களூருக்குச் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை பெங்களூருக்குச் செல்லும் முதலமைச்சர், 20-ம் தேதி பெங்களூரில் நடைபெறும் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

18 May 2023 2 PM

``மலக்குழி மரணங்களைக் குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்னையாகக் கடந்துபோக வேண்டாம்!" - பா.இரஞ்சித்

Tamil News Today Live: ``குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது!" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

மலக்குழி மரணங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு, பா.இரஞ்சித் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,``தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். இந்தக் கொடுமையான சமூக அவலத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் கடும் கண்டனங்கள்.

மலக்குழி மரணங்களை, குறிப்பிட்ட சமூக மக்களின் பிரச்னையாக மட்டும் கருதிக் கடந்து போகாமல் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அவலமாகக் கருதி, சட்டங்களை இன்னும் கடுமையாக்கி, மக்களிடையே சரியான விழிப்புணர்வை உண்டாக்கி, உடனே தடுக்க முனைவோம்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

18 May 2023 1 PM

``பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்'' - ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

`ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கிடையே, அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பெருமை கொண்டாடிவருகின்றன.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. இது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பதிவில், ``ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் இன்று வரை யாரேனும் குரல் கொடுத்திருந்தால் அது பிரதமர் மோடி மட்டும்தான். ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க, தொடர்ச்சியாக முயன்ற, பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி" எனத் தெரிவித்திருக்கிறார்.

18 May 2023 12 PM

கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு -  காங்கிரஸ் அறிவிப்பு

Tamil News Today Live: ``குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது!" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

18 May 2023 12 PM

``வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்!” - வானதி

பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவர் வானதி, ``கொள்ளிடம் ஆற்றில் திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் உயிரிழந்த ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், ``திருச்சி, ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்புப் பகுதியில், 'ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம்' என்ற வேத பாடசாலை செயல்பட்டுவருகிறது. கோடை விடுமுறையையொட்டி இங்கு நடக்கும் சிறப்பு வகுப்புகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வேதம் பயின்றுவருகின்றனர்.

இந்த குருகுலத்தில் பயிற்சிபெறும் மாணவர்கள் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அதுபோல, மே 14-ம் தேதி அதிகாலை ஈரோடு, நசியனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (17), திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் (13), ஹரிபிரசாத் (14) உள்ளிட்ட நான்கு பேர் கொள்ளிடம் ஆற்றில் குளித்திருக்கின்றனர்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பொதுவாக, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகம் இருக்காது. அதுவும் கோடைக்காலம் என்பதால், தண்ணீர் குறைவாக இருக்கும். அந்த நம்பிக்கையில்தான் சிறுவர்கள் அங்கு குளித்திருக்கின்றனர். ஆனால், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென்று கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதனால், கொள்ளிடத்தில் குளித்துக்கொண்டிருந்த அந்த நான்கு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இதில் கோபாலகிருஷ்ணனைத் தவிர மற்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்திருக்கிறது. பிள்ளைகளைப் பறிகொடுத்திருக்கும் பெற்றோர்களின் மனம் எப்படித் தவிக்கும் என்று நினைக்கும்போதே தாங்க முடியாத துயரம் ஏற்படுகிறது.

மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்கு, எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே காரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்தப் பொறுப்பின்மைக்குக் காரணமானவர்கள்மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பொறுப்பின்மையால் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

கொள்ளிடம் போன்ற ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வழக்கமாக மக்கள் குளிக்கும் பகுதிகளில், யாரையும் குளிக்க விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். எச்சரிக்கைப் பலகைகளையும் வைக்க வேண்டும். இனி இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

18 May 2023 11 AM

ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் அனுமதி வழங்கியதை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த நிலையில், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், `` ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் ஆவணங்கள் திருப்தியளிக்கும் வகையில் இருக்கின்றன. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும்'' எனத் தெரிவித்திருக்கின்றனர்.

கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

18 May 2023 11 AM

கார்கே இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார்... முடிவுக்கு வந்ததா சி.எம் ரேஸ்?

Tamil News Today Live: ``குறிப்பிட்ட சமுதாயத்தைத் தவறாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது!" - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, பெரும்பான்மை பெற்றது. இந்த நிலையில், முதல்வர் பதவியைக் கைப்பற்ற சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கிடையே போட்டி ஏற்பட்டது. டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் இல்லத்துக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் ஒன்றாகச் சென்றிருக்கின்றனர். இவர்களின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

18 May 2023 10 AM

`மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்!’

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு
சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு-வின் இலாகா மாற்றப்பட்டிருக்கிறது. அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கிரண் ரிஜிஜுவுக்கு, புவி அறிவியல்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

18 May 2023 7 AM

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பர்யமாக நடத்தப்பட்டுவந்த நிலையில், இடையில் நீதிமன்ற உத்தரவால் தடை ஏற்பட்டது. இதைக் கண்டித்து பொதுமக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

ஜல்லிக்கட்டு வீரர்
ஜல்லிக்கட்டு வீரர்

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை விசாரித்துவந்த அரசியல் சாசன அமர்வு, அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்டது. பின்னர், இந்த மனுக்களின் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு இன்று வழங்குகிறது.