Tamil News Today Live: மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Tamil News Today Live : 23-05-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்!

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
``குடியரசுத் தலைவரை அவமதிப்பது சரியா'' - ரவிக்குமார் எம்.பி

புதிய நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மின்னஞ்சல் மூலம் வரப்பெற்றேன். நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவர் மாண்பமை குடியரசுத் தலைவர்தான். அவரது பெயர்கூட அழைப்பில் இல்லை. அவரை இப்படி அவமதிப்பது சரியா?'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
"வெளிநாட்டுப் பயணம் முதலீட்டை ஈர்க்கவா... முதலீடு செய்யவா?" - இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, ஏற்கெனவே துபாய்க்குக் குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்று வந்தார் ஸ்டாலின். ரூ6,000 கோடி முதலீடு வரும் என வாயால் வடை சுட்டார். இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை'' என விமர்சனம் செய்திருக்கிறார்.
லாரியில் பயணித்த ராகுல் காந்தி!

ராகுல்காந்தி நேற்று இரவு திடீரென எந்தத் திட்டமிடலும் இல்லாமல் ஹரியானா நெடுஞ்சாலையிலுள்ள லாரி நிறுத்துமிடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது ஓட்டுநர்களுக்கு இருக்கும் பிரச்னைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
சிங்கப்பூருக்குப் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``முதலீட்டாளர்களைச் சந்தித்து உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கிறேன். புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்குப் பயணம் செய்கிறேன். துபாய் பயணத்தின்போது ஒப்பந்தமான ஆறு நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டன'' என்றார்.
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின், இன்று பயணம்!
இரண்டாடுகளுக்கு முன்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர்கொண்ட பொருளாதாரமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்தது. இதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவிருக்கிறது. அதற்கான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்பது நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு அந்த நாட்டு அமைச்சர்களைச் சந்திக்கிறார். மேலும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசுகிறார். சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து, வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகளைச் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவிருக்கிறார்.
200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்று, சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் உயரதிகாரிகளும் செல்கின்றனர்.