Published:Updated:

“காமராஜரை பற்றிப் பேச பா.ஜ.க-வுக்கு அருகதை கிடையாது!” - தமிழருவி மணியன் பளார்

தமிழருவி மணியன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழருவி மணியன்

நான் ஒரு சுத்தமான துறவி. என் சுயத்திலும் பொதுவாழ்விலும் நான் கண்ணகியைப்போல நெருப்பு வாழ்க்கை நடத்தினாலும், அதைக் கொச்சைப்படுத்துவதற்கு இங்கு ஒரு கும்பல் இருக்கிறது.

“காமராஜரை பற்றிப் பேச பா.ஜ.க-வுக்கு அருகதை கிடையாது!” - தமிழருவி மணியன் பளார்

நான் ஒரு சுத்தமான துறவி. என் சுயத்திலும் பொதுவாழ்விலும் நான் கண்ணகியைப்போல நெருப்பு வாழ்க்கை நடத்தினாலும், அதைக் கொச்சைப்படுத்துவதற்கு இங்கு ஒரு கும்பல் இருக்கிறது.

Published:Updated:
தமிழருவி மணியன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழருவி மணியன்

வீடு முழுக்கப் புத்தகங்கள். அந்தப் புத்தகங்களுக்கு நடுவில், நடமாடக் கொஞ்சம் இடமிருக்கிறது. ``50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேகரித்த புத்தகங்கள் இவை. மிக அரிதிலும் அரிதான புத்தகங்களையும் வைத்திருக்கிறேன். இவைதான் என் சொத்து” என்று கர்வமாகச் சொல்கிறார் தமிழருவி மணியன்.

“காலையில் எழுந்ததும் இரண்டு கைகளையும் சூடுபறக்கத் தேய்த்துவிட்டு, உள்ளங்கைகளைப் பார்த்து, `அம்மா...’, `அப்பா...’ என்று உச்சரிப்பேன். அதன் பிறகு நான் முதலில் பார்ப்பது சாமி படமல்ல... என் சாமி காமராஜர் படம்தான். சில நேரம் அந்தப் படத்தின் முன் நின்று கண்ணீர்விட்டுக் கதறி அழுவேன்” என்று சொன்னபடியே பேட்டிக்குத் தயாரானார் தமிழருவி.


``காந்தி மக்கள் இயக்கம்’, `காமராஜர் மக்கள் இயக்கமாக’ மாற, இப்போது என்ன தேவை வந்தது?’’

``கடந்த வாரம் திருப்பூரில் பொதுக்குழுவுக்கு அழைப்புவிடுத்திருந்தார்கள். அரைகுறை மனதோடுதான் சென்றேன். கண்ணீர்விடாத குறையாக, ‘மீண்டும் நீங்கள் வர வேண்டும்’ என்றார்கள். `அடுத்து, இந்த மண்ணில் உங்கள் இலக்கு என்ன... காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவது. அதை மையப்படுத்திப் போகலாம்’ என்றார்கள். அதனால், இப்போது இந்த மாற்றம்.”

``ஏற்கெனவே, 2016-ம் ஆண்டு அரசியலைவிட்டு விலகினீர்கள். திரும்பவும் வந்தீர்கள். ரஜினி விலகிய நிலையில், நீங்களும் விலகினீர்கள்... இப்போது மீண்டும் வந்திருக்கிறீர்கள்...”

``2016 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்டும் மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன. ‘நல்லவற்றுக்கு இந்த மண்ணில் இடமில்லை. கானகத்தில் கத்திக் கத்தி தொண்டை வறண்டு போகும் ஒரு குயிலாக ஏன் இருக்க வேண்டும்?’ என்று சொன்ன சொல் தவறாமல் அரசியலிலிருந்து விலகினேன். ஆனால், ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் எழுச்சியைப் பார்த்தபோது, மீண்டும் வந்தேன். ரஜினியுடன் இணைந்து செயல்பட்டேன்.”

``தி.மு.க-விலிருந்து விலகும்போது கண்ணதாசன்கூட, `போய் வருகிறேன்’ என்றுதான் சொன்னார். நீங்களோ, ‘நான் போகிறேன், வர மாட்டேன்’ என்றல்லவா அறிக்கை விடுத்திருந்தீர்கள்...”

(குறுக்கிட்டு) “ஜெயப்பிரகாஷ் நாராயணனைவிட நேர்மையாளர் ஒருவரை உங்களால் பார்க்க முடியாது. சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் போகும் பாதை சரியில்லை என்பதை உணர்ந்து `சோஷலிஸ்ட் கட்சி’யைத் தொடங்கினார். 1962-ல் இந்தியா முழுவதும் சோஷலிஸ்ட் கட்சிக்கு 12 எம்.பி-க்கள் மட்டுமே கிடைத்தார்கள். `இவ்வளவு தியாகம் செய்து எதற்குக் கட்சி நடத்த வேண்டும்?’ என்று அரசியலைவிட்டு விலகினார். சில வருடங்கள் கழித்து, பீகாரிலும் குஜராத்திலும் மாணவர்கள் கிளர்ச்சி செய்தபோது தலைமை தாங்க மீண்டும் வந்தார். ‘ஒரு மகத்தான தலைவன் தலைமையேற்க வந்துவிட்டானே’ என்று கொண்டாடினார்கள். சமூக நேயம் உள்ளவன்... சமூகநலனைச் சிந்தித்துச் செயல்படக்கூடியவன்... ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து வெளியேறினாலும், ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் வருவதென்பது இயல்பு.”

“ஒரு முறை சரி... மீண்டும் மீண்டும் விலகுவதும், வருவதுமாக இருந்தால் விமர்சனம் வரத்தானே செய்யும்?”

“பத்துமுறைகூட இதைச் செய்யலாம். நீங்கள் அதற்காகக் கவலைப்பட வேண்டாம். நான்தான் கவலைப்பட வேண்டும், என்னோடு இருக்கும் தொண்டர்கள்தான் கவலைப்பட வேண்டும்.”

“காமராஜரை பற்றிப் பேச பா.ஜ.க-வுக்கு அருகதை கிடையாது!” - தமிழருவி மணியன் பளார்

“உங்கள் `காமராஜர் மக்கள் இயக்க’த்தின் இன்றைய நோக்கம் என்ன?’

“அரசியலற்ற அரசியல் செய்ய வந்திருக்கிறோம். எந்தக் கட்சியையும் விமர்சனம் செய்யமாட்டோம். ஸ்டாலின் பற்றியோ, மோடி பற்றியோ... வேறு யாரையும் பற்றியோ பேசமாட்டோம். எங்கள் நோக்கம் சேவை. அந்தச் சேவையைச் செய்வோம். காமராஜர் ஆட்சி என்ன என்பது குறித்து வீதி வீதியாக மக்களிடம் சென்று பேசுவோம்.”

“ `நாங்கள் காமராஜர் வழியில் பயணிப்போம்’ என்று சொல்லிவருகிறது பா.ஜ.க. அதையே நீங்களும் சொல்கிறீர்கள். ‘காந்தி டு கோட்சே’ வழியில் பயணிக்கிறீர்களா?”

``பா.ஜ.க-வுக்கு காமராஜரைப் பற்றிப் பேச அருகதையே கிடையாது. என்னைக் குற்றம் சொல்பவர்கள் என் வீடு தேடி வந்து நேரில் பேசுங்கள். காந்தியைச் சுட கோட்சே சென்றதுபோல என்னைச் சுட்டுக்கொல்லவாவது நேரில் வாருங்கள்.”

“உங்கள் இயக்கத்தில் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“நான் இயக்கத்திலிருந்து விலகும்போது 2,50,000 பேர் இருந்தார்கள். நான் முற்றாக அரசியலிலிருந்து விலகினாலும், இவர்களில் யாரும் வேறு கட்சிக்குப் போகவில்லை. அப்படியே இருக்கிறார்கள்.”

`` `வைகோவை முதல்வர் ஆக்குவேன்’, `ரஜினியை முதல்வர் ஆக்குவேன்’ என்று சொல்வது, அடிக்கடி அரசியலிலிருந்து விலகுவதெல்லாம் கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கின்றனவே?”

``நான் ஒரு சுத்தமான துறவி. என் சுயத்திலும் பொதுவாழ்விலும் நான் கண்ணகியைப்போல நெருப்பு வாழ்க்கை நடத்தினாலும், அதைக் கொச்சைப்படுத்துவதற்கு இங்கு ஒரு கும்பல் இருக்கிறது. விலைமகள்கள் மட்டுமே வசிக்கும் வீதியில், ஒரு கண்ணகி குடியிருந்தால், மற்ற விலைமகள்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒன்று, அந்தக் கண்ணகியை விலைமகளாக்க முயன்று பார்ப்பார்கள். முடியாத நிலையில், அவளை ‘விலைமகள்’ என்று தூற்றிப் பேசி அவளைக் களங்கப்படுத்துவதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் முயல்வார்கள். இதுதான் தமிழருவி மணியன் அரசியல் வாழ்வில் தொடர்ந்து நடக்கிறது.”