நடிகர் ரஜினிகாந்த், ஒரு வார்த்தை பேசினால்கூட ஆதரவும் எதிர்ப்புமாக ஓராயிரம் விமர்சனங்களும் எதிர்வினைகளும் எழுகின்றன. தமிழக அரசியல் களத்தில், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் ‘காந்திய மக்கள் இயக்க’த்தின் நிறுவனத் தலைவருமான தமிழருவி மணியனும் இந்த விமர்சன அலைகளுக்குள் சில சமயங்களில் சிக்கிக்கொள்வதும் உண்டு. அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்விதமாக, தன் கொள்கைப்பிடிப்பை விவரித்து திறந்த மடல் ஒன்றை ஜூனியர் விகடனுக்கு எழுதியுள்ளார் தமிழருவி மணியன்!

`தமிழக அரசியலில் என்மீது அவதூறை அள்ளித் தெளிப்பவர்களின் பட்டியலில் ஜூனியர் விகடனும் சேர்ந்ததற்காக மனம் வருந்துகிறேன். இரண்டு குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக எழுப்பப்படுகின்றன. உரிய விளக்கத்தை வழங்குவது என் சமூகக் கடமை. தவறான ஒரு கூட்டணியை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நான் உருவாக்கி, மதவாத கும்பலுடன் சேர்ந்து நின்றது முதல் குற்றம். இப்போது தமிழர் அல்லாத ரஜினிகாந்துடன் இணைந்து நிற்பது இரண்டாவது குற்றம். என்னளவில் இரண்டுமே குற்றமில்லை. சேற்றில் இருந்தாலும் தாமரையின் இதழ்களில் சேறு படிவதில்லை. நான் காந்தியைப் படித்தவன்; காமராஜரைப் பற்றி நிற்பவன். என்னால் வகுப்புவாதியாக இருக்கவே முடியாது.

1967-ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட்டுகள் ராஜாஜியின் பக்கம் நின்றதால், பொதுவுடைமைச் சித்தாந்தத்தைப் புறக்கணித்து விட்டார்களா? ‘குல்லுக பட்டர்’ என்று ஏடுகளிலும் மேடைகளிலும் ராஜாஜியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் அண்ணா. அவர் அதே ராஜாஜியுடன் தேர்தல் உறவுகொண்டு ஆட்சியைக் கைப்பற்றியதும் அதை ராஜாஜியின் காலடியிலா சமர்ப்பித்தார்? பெரியாரிடம் அல்லவா சென்று நின்றார்.

ஈழத்தில் தமிழினத்தை அழிப்பதற்காக துணை நின்ற காங்கிரஸுக்குப் பாடம் புகட்ட, நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளுடன் மட்டுமா கூட்டணி அமைக்க முடியும்? அதில் ஏதாவது பொருத்தப்பாடு உண்டா? காங்கிரஸுக்குப் பாடம் புகட்ட பா.ஜ.க-வைத் தான் பயன்படுத்த முடியும். பா.ஜ.க-வால் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிடைத்துவிட்டதா என்றால், இல்லைதான்.

2011-ல் சீமான், ‘இரட்டை இலையால் ஈழம் மலரும்’ என்று முழங்கினார். ஜெயலலிதாவுக்கு ஈழம் தழைக்க வேண்டும் என்ற தவிப்பு இல்லை என்பது சீமானுக்குத் தெரியாதா? தி.மு.க-வைத் தோற்கடிப்பதற்கும், ஈழம் ரத்தநிலமானபோது சோனியா பக்கம் நின்ற கருணாநிதியைத் தண்டிப்பதற்கும், ஜெயலலிதாவை சீமான் ஆதரித்ததுதான் சரியான அரசியல். தி.மு.க, அ.தி.மு.க இரண்டில் எது நல்ல கட்சி? எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி? இன்று இரண்டு கழகங்களையும் எதிர்த்து சீமான் நடத்துவதுதான் தமிழர்களுக்கான நல்ல அரசியல். ஆனால், இந்த அரசியல் இன்னும் இருபது ஆண்டுகள் சீமானால் தனித்து முன்னெடுக்கப்பட்டாலும் வெற்றி பெறாது.

ஐம்பது ஆண்டுகளாக பாலை நிலத்தில் பயிரிட்டுப் பார்த்த நான், அனுபவத்தில் அறிந்த உண்மை இது. சித்தாந்தத்தைச் சொல்லி இந்த மக்களிடம் இனி அரசியல் நடத்திப் பயனில்லை. இந்த முயற்சியில் என் இளமை முழுவதையும் இழந்ததுதான் மிச்சம். கவர்ச்சி அரசியலே தமிழனைக் கவர்ந்திழுக்கும். கவர்ச்சிகரமான தலைமைக்குப் பின்னால்தான் வாக்காளர்கள் வந்து நிற்பார்கள். திரையுலகைப் பயன்படுத்தியே தி.மு.க வளர்ந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கலையுலகக் கவர்ச்சியே அ.தி.மு.க-வுக்கு உயிர்க்காற்று. ஸ்டாலினுக்கோ, எடப்பாடிக்கோ எந்தக் கவர்ச்சியும் இல்லை. ஏற்கெனவே கவர்ச்சி யால் கட்டப்பட்ட மாளிகைகளில் இருவருமே சுகவாசம் செய்கிறார்கள். இந்தக் கட்சிகளுக்கான ஆயுள் எப்போது முடியும் என்பதை, காலம் கணக்கில் வைத்திருக்கிறது. எந்த மாளிகையும் கால நடையில் ஒருநாள் பாழ்மண்டபமாகும்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். ரஜினிகாந்த், கவர்ச்சி அரசியலின் வாரிசுதான். ஆனால், அவர் மக்களின் பொதுச்சொத்தைச் சுரண்டிக் கொழுக்கவோ, தன்னுடைய பகையை வீழ்த்தி அடிக்கவோ அரசியலுக்கு வர விரும்ப வில்லை. தேர்தல் களத்தில் அன்பை மட்டுமே அவர் ஆயுதமாக ஏந்தி நிற்பார். தலையில் மகுடம் சுமப்பதற்காக அவர் வரவில்லை. மக்களின் நலனுக்காகவே வருகிறார்.

இரண்டு திராவிடக் கட்சிகளால் அடித்தட்டு மக்களுக்கு சில நன்மைகள் ஏற்பட்டதை மறுக்க முடியாதுதான். ஆனால், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளால் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுச் சீரழிவை இளமைக்காலம் முதல் பார்த்து வருகிறேன். பொதுச்சொத்தை சமூகக்கூச்சமே இல்லாமல் சூறையாடும் மனிதர்களிடம் எவ்வளவு காலம் அரசியலை அடகுவைப்பது? இந்தியா முழுவதும் ஊழல் நாற்றம் எடுப்பதால் தமிழகத்தின் ஊழலையும் சகித்துக்கொள்வது சரியாகுமா? இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிப்பதுதான் எனது ஒரே கொள்கை. அதற்காக முதலில் வைகோவை முன்னெடுத்தேன். எந்த நிலையிலும் நான் விஜயகாந்த் குறித்து வாய் திறந்ததில்லை. வைகோ தடம் மாறிப் போனதால் இன்று ரஜினியை நம்புகிறேன்.

வானத்தைப் பார்த்துச் சேற்றை வீசுபவர்களால் வானம் எந்நாளும் அசுத்தப்படாது. என்னைப் பழிப்பவர்களால், நான் ஒழுக்கம் தவறியவன் என்றோ, நேர்மைக்கு மாறானவன் என்றோ, அரசியலில் சம்பாதிப்பவன் என்றோ ஒருவராலும் சொல்ல முடியாது. என்னைப் பழித்தே தீர வேண்டும் என்ற மனநோய்க்கு ஆளானவர்கள், ‘நான் பல கட்சி பார்த்தவன்’ என்பார்கள். நான் சுயநலத்துக்காக எந்தக் கட்சியிலும் சேர்ந்தவன் அல்ல. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் குறுகிச் சிறுத்துவிட்ட ஜனதாதளத்தில் நெடுங்காலம் இருந்தவன் நான். தமிழக ஜனதா கட்சி, லோக்சக்தி, காந்திய மக்கள் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றவன் நான்.

அரசியலை பிழைப்பாக நினைப்பவன் ஈயம், பித்தளை எனப் பல்லிளிக்கும் கட்சிகளிலா பவனி வருவான்? நான் என்றாவது வாழ்வை வளமாக்க தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க என்று அலைபாய்ந்திருக்கிறேனா? எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்று பதவிகளை அனுபவித்திருக்கிறேனா? தோழர் ஜீவனாந்தம் போன்ற ஒரு தலைவரை நாடு கண்டதுண்டா? தொடக்கத்தில் காந்தியத் தொண்டராக இருந்து, சிராவயலில் காந்தி ஆசிரமம் அமைத்தவர்; பிறகு பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தவர். பிறகு காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சிகளில் சேர்ந்து, இறுதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கரைந்துபோனவர். அவர் பிழைப்புவாதியா?

பணம், பதவிக்காக ஒருவன் கட்சி மாறுகிறானா, கொள்கைக்காக இடம் மாறுகிறானா என்பதே அரசியல் நேர்மைக்கான அளவுகோல். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறி அந்தந்தத் தலைமை யிடம் கையேந்தி காசு பெற்று எம்.எல்.ஏ,

எம்.பி என்று வலம் வரும் ‘கொள்கைக் குன்றுகள்’ என்மீது பழி தூற்றுகின்றன. என் சொந்த நலனுக் காக கொள்கையை எவரிடத்தும் விற்றதுமில்லை; கையேந்தி எதையும் பெற்றதுமில்லை.

ஐம்பது ஆண்டு பொதுவாழ்வில் நான் செய்த ஒரே தவறு, கருணாநிதி கேட்டுக்கொண்டதற்காக திட்டக்குழு உறுப்பினர் ஆனதுதான். அதை நான் ஏற்றதும் மக்கள் நலனுக்காக; சொந்த நலனுக்காக அல்ல. கீழ்பாக்கம் அரசுக் குடியிருப்பில் நான் இருப்பது வாடகை வீடு. கருணாநிதி குடும்பத்து க்குச் சொந்தமாக இருக்கும் பல வீடுகளில் ஒன்றை என் பெயரில் யாரும் எழுதித் தந்துவிட வில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குமேல் நான் பயணித்த அரசியல் பாதையில் பெற்ற ஒரே பரிசு, பகையும் பழிச்சொல்லும் அன்றி வேறில்லை.

நான் ஒரு வழிப்போக்கன்; இறப்பு வரை காமராஜர் புகழ் பாடும் தெருப்பாடகன். நான் வீணைகளை மாற்றியிருக்கிறேன், ராகத்தை மாற்றியதேயில்லை. பல பாதைகளில் பயணித் திருக்கிறேன். இலக்கை ஒருபோதும் மறந்ததில்லை.

இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிப்பதுதான் என்னுடைய ஒற்றைத்தவம். நான் கொள்கைக்காரன். எழுபது ஆண்டுகளுக்குமேல் உடல் உருக எரியும் இந்த மெழுகுவத்தி எந்த நேரத்திலும் அணைந்து போகலாம் அல்லது அணைக்கப்படலாம். அதுவரை என்னைக் காயப்படுத்தும் நோக்கத்துடன் கல் எறிபவர்கள் கை வலிக்கும் வரை அதைச் செய்யட்டும்!’