Published:Updated:

``நான் செய்த ஒரே குற்றம்’ ; போகிறேன், வர மாட்டேன்!’ - தமிழருவி மணியன் உருக்கம்

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

`தி.மு.க-விலிருந்து விலகும்போது கண்ணதாசன், `போய் வருகிறேன்’ என்றார்; நான் போகிறேன், வர மாட்டேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் தமிழருவி மணியன்.

ரஜினி, தனது கட்சி தொடர்பாக வரும் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், `அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி கடந்த 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து 27-ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனி விமானம் மூலம் உடனடியாக அவர் சென்னை திரும்பினார். டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு என்று கூறியிருந்தநிலையில், ஒரு வாரம் அவருக்கு முழுமையாக ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்தநிலையில்தான், கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக ரஜினி தெரிவித்தார். ரஜினியின் அறிவிப்பு, தமிழக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார். தற்போது ரஜினிகாந்தைத் தொடர்ந்து தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

`என்னை எந்த மிரட்டலும் பணியவைக்க முடியாது’ , `இந்திய அரசியலமைப்பை மாற்றணும்’ - ரஜினிகாந்த்

இது தொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். 50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்துவிட்டது.

அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்
அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்த், தமிழருவி மணியன்

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும் உண்மைக்கும் ஒழுக்கத்துக்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அதற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.

இன்று என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்று என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவது என் மனைவி, மக்களின் மனங்களை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டன.

அறிக்கை
அறிக்கை

மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைமாறும் கருதாமல் சமூகநலனுக்காக என்னுடன் கைகோத்து காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடிதொழுது நான் விடைபெற்றுக்கொள்கிறேன். இழப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்துவைக்க மாட்டேன்.

தி.மு.க-விலிருந்து விலகும்போது கண்ணதாசன், `போய் வருகிறேன்’ என்றார்; நான் போகிறேன், வர மாட்டேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

`ரஜினி அரசியலுக்கு வராதது தமிழக மக்களுக்குத்தான் இழப்பு!’ - போயஸ் கார்டனில் ரசிகர் நெகிழ்ச்சி
அடுத்த கட்டுரைக்கு