சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்!”

தமிழருவி மணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழருவி மணியன்

முன்பெல்லாம் ரஜினியை வைத்து ஆண்டுக்கொருமுறை சர்ச்சை வரும். ஆனால் இப்போது மாதாமாதம் சர்ச்சை வருகிறது.

மீபத்தில் திருவள்ளுவருக்கு இந்துத்துவவாதிகள் மதச்சாயம் பூசியது குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘‘எனக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூசும் முயற்சி நடக்கிறது. இருவரும் அதில் மாட்ட மாட்டோம்” என்று தெரிவித்தி ருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதில் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அந்த நம்பிக்கையைக் கைவிடாமல் காத்திருப்பவர் தமிழருவி மணியன்தான்.

“சத்தியமாகச் சொல்லுங்க. ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா?’’

“இன்று வரையிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ஒருபக்கம்; வரமாட்டார் என்று இன்னொரு பக்கம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக ரஜினிகாந்த் இல்லையென்றால், அவர் வருகை குறித்து இவ்வளவு கவலைப்பட வேண்டிய அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை. ‘அவர் வந்துவிட்டால் நம்முடைய ஆட்சிக் கனவு கலைந்துவிடுமோ...’ என்ற பயத்தினால் ஒருபக்கம் குரல் எழுகிறது. ‘அவர் வந்துவிட்டால், நாம் நாற்காலியிலிருந்து அகற்றப்பட்டுவிடுவோமோ...’ என்ற அச்சத்தினால் இன்னொரு பக்கமிருந்து குரல் எழுகிறது.’’

“அதெல்லாம் சரி, ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார்?’’

“ரஜினி அரசியலுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அடுத்த ஆண்டு உரிய நேரத்தில், அவர் கட்சியைத் தொடங்குவார். எந்த நேரத்தில், எப்போது கட்சியைத் தொடங்குவதென்பது அவரது உரிமை. அதில் நான் தலையிட முடியாது. ஆனால், அவரோடு அடிக்கடி நான் பேசித் தெரிந்துகொண்ட வகையில், அடுத்த ஆண்டு கட்சி தொடங்கி, மிகப்பிரமாண்டமான அளவில் மாநாடு ஒன்றினையும் நடத்தித் தன் வலிமையை வெளிப்படுத்துவார். அதன்பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று மக்களைச் சந்தித்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஈடுபடுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவார்.’’

‘`அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், 2020-ல் கட்சி தொடங்கிவிடுவார் என்பதை எப்படி நம்புவது?’’

“ ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டி ருக்கும்போதே, அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று ஆட்சி அமைக்கும் சூழலும் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும்கூட, பட வேலைகளை முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தனது பதவிப்பிரமாணத்தையே ஒருவாரம்வரை தள்ளிவைத்தார். பட வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டுத்தான் முதல்வராகப் பதவியேற்றார். இதுதான் வரலாறு!

“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்!”

சினிமாவும் ஒரு தொழில்தான். அந்தத் தொழிலில் ரஜினி முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். எப்போது இந்தக் களம் கனிகிறதோ அப்போதே அரசியலுக்குள் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். நாளையே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் தேர்தல் வரவிருக்கிறது என்றால், அந்தக் கணத்திலேயே ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்கிவிடுவார்.’’

‘`நீண்ட நெடுங்காலமாக தி.மு.க-வில் இருந்து செயற்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், ‘வந்தால் ராஜா வாகத்தான் வருவேன்’ என்பதுபோல், ‘முதல்வராகத்தான் அரசியலுக்குள் வருவேன்’ என்ற ரஜினிகாந்த்தை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?’’

“எல்லா விதிகளுக்கும் விலக்கு என்ற ஒன்று உண்டு. ‘தெலுங்கு மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக அரசியலுக்கு வருகிறேன்’ என்று சொல்லி ஆறே மாதங்களில் ஆட்சியைப் பிடித்து முதல்வர் பொறுப்பேற்றவர் என்.டி.ஆர்.

அ.தி.மு.க., தி.மு.க என இந்த இரண்டு கட்சிகள்மீதும் மக்களுக்கு இருந்த நம்பிக்கைகள் போய்விட்டன. மாற்று அரசியலுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கத்தைத் தீர்த்து வைக்கக்கூடிய மனிதராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்றும் பெரும்பான்மையான மக்கள் நம்புகிறார்கள். எனவே, அரசியலுக்குள் வந்து, பெரும்பான்மை மக்கள் பலத்துடன் ரஜினிகாந்த் ஆட்சிக்கட்டிலில் அமர்வார் என்றுதான் நான் நம்புகிறேன்.’’

“ ‘கழகம் இல்லாத் தமிழகம்’ என்ற பா.ஜ.க-வின் முழக்கமாகவே உங்களது சிந்தனையும் இருக்கிறதே.’’

“1967-ல் காமராஜர், விருதுநகர்த் தொகுதியில் தோல்வியுற்று நின்றபோது, அவரது காலடியில் போய்ச் சேர்ந்தவன் நான். எம்.ஜி.ஆர்

அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, ‘தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று சொன்ன காமராஜரின் வார்த்தைகள்தான் எனக்கான வேதம்; அவர்தான் என் கடவுள்! எனவே, ‘50 ஆண்டுகளாகத் தமிழருவி மணியன் சொல்லிக்கொண்டிருக்கும் பாதையில், பா.ஜ.க-வினர் புதிதாகப் புறப்பட்டிருக்கிறீர்களா?’ என்று பா.ஜ.க- விடம்தான் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கவேண்டும்!’’

‘`எந்த நம்பிக்கையின் அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக நீங்கள் நிற்கிறீர்கள்?’’

“கருத்தியல் ரீதியாக சித்தாந்த அடிப்படையில் கொள்கைகளைச் சொல்லித் தமிழ்நாட்டில் ஒருநாளும் மக்களிடையே எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பதை, கடந்த 50 ஆண்டுக்கால அரசியலில் நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

“எடப்பாடி ஆட்சி முடிந்தால் ரஜினி கட்சி ஆரம்பிப்பார்!”

ரஜினிகாந்த் ஒரு நடிகர், அவரிடம் கவர்ச்சி இருக்கிறது என்பதற்காகவும் மட்டுமே நான் அவர் பக்கம் போய் நிற்கவில்லை. ‘தமிழர்களுக்கு நன்றிக்கடன் ஆற்றவேண்டும்’ என்ற உண்மையான அக்கறை அந்த மனிதரிடம் இருக்கிறது. அவரிடம் பலநாள், பலமுறை மணிக்கணக்கில் பேசிய அனுபவத்தில் இதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனால் அவர் பக்கம் நான் நிற்கிறேன்.’’

‘`பத்ம பூஷண், பத்ம விபூஷண், வாழ்நாள் சாதனையாளர் எனத் தொடர்ந்து ரஜினிகாந்த்துக்கான விருதுகள் பா.ஜ.க ஆட்சியில் தரப்படுகிறதே... தங்கள் கட்சிக்கு வரச்சொல்லி இழுக்கிறார்களோ?’’

‘`வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற ஒன்றை வழங்குவதினாலேயே, ஒரு மனிதன் பா.ஜ.க-வை ஆதரித்துவிடுவார் என்று சொன்னால், நீங்கள் ரஜினிகாந்த்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். அப்படியெல்லாம் ரஜினிகாந்த்தை யாரும் மயக்கிவிட முடியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, அவரை எப்படியாவது ஒரு கட்சியைத் தொடங்கவைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைத்த நிலையில், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தாரா? இல்லையே..! ‘என்னுடைய ஒரே நோக்கம், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது. எனவே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புதான் கட்சியைத் தொடங்குவேன்’ என்று தெளிவாகச் சொன்னார்.’’

‘`அ.தி.மு.க, தி.மு.க-வோடு ரஜினி கூட்டணி வைக்கமாட்டார் என்று சொல்கிற நீங்களே, பா.ஜ.க-வோடும் கூட்டணி வைக்கமாட்டார் என்று சொல்வ தில்லையே?’’

“அ.தி.மு.க, தி.மு.க-வோடு ரஜினி கூட்டணி வைக்க மாட்டார் என்பதை ஓராயிரம்முறை ஓங்கிச் சொல்வேன். ஆனால், பா.ஜ.க-வோடு கூட்டணி அமைப்பாரா என்பதை நான் சொல்லமுடியாது. ஏனெனில், காலச்சூழல் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்கமுடியாது. அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தற்போது பலமான கூட்டணியோடு இருந்து வருகின்றன. பா.ஜ.க போன்று ஒரு வலிமையான அமைப்போடு ரஜினிகாந்த் சேர்ந்துவிட்டால், ஒட்டுமொத்தமாக வலிமை கூடிவிடுமே என்ற கவலையில், அவர் பா.ஜ.க பக்கம் போய்விடாத வகையில் ஒரு வியூகம் வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில், எப்படியான வியூகத்தை அமைத்தால், எதிரிகளின் வியூகத்தை வென்று ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்பதை, ரஜினிகாந்த்தே யோசித்து முடிவெடுப்பார்!’’

`` `காவி அடையாளத்தில் மாட்ட மாட்டேன்’ என்று தெரிவித்திருக்கிறாரே ரஜினி?’’

‘`எந்த நிலையிலும் சிறுபான்மை, தலித் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் ரஜினி தெளிவாக இருக்கிறார். ‘என் ரசிகர்களிலேயே பெரும்பான்மையானவர்கள் தலித் மற்றும் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். அவர்களைக் கைவிட்டுவிட்டு அரசியல் செய்யும் அவசியம் நமக்கு இல்லை’ என்று என்னிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.’’