Published:Updated:

`புரிந்துகொள்ளுங்கள்... ரஜினிக்கு நான் செய்தித்தொடர்பாளர் இல்லை!'- தமிழருவி மணியன் விளக்கம்

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சித் தொடங்கலாம்; ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தலாம்; பா.ம.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்றுதான் நான் சொல்ல முடியும். உறுதியாக சொல்வதற்கும் இப்படி சொல்வதற்கும் இடையில் பெரிய வேற்றுமைகள் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் குறித்தும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் தினம் ஒரு தகவல் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையே, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் 'காந்திய மக்கள் இயக்க'த்தின் நிறுவனத் தலைவருமான தமிழருவி மணியன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு கொடுத்த பேட்டியில், ரஜினி கட்சி தொடங்க உள்ளதை உறுதிப்படுத்தியிருந்தார்.

மேலும் அதில், ``சரியான தேதி குறித்து உறுதியாக தெரியவில்லை என்றாலும் ஏப்ரலில் அவர் கட்சித் தொடங்குவார். அன்றே ரஜினிகாந்த் தனது முதல் மாநாட்டின் தேதியை அறிவிப்பார். அதேபோல் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அவர் தனது அரசியல் திட்டம் மற்றும் கொள்கைகளை மக்களைச் சந்தித்து விளக்க, மாநில அளவிலான சுற்றுப்பயணத்தைத் தொடங்குவார்.

ரஜினி
ரஜினி

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை ரஜினியே முடிவு செய்வார் என்றாலும், தினகரனின் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எதிர்மறையான தாக்கம் ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறார். டிடிவி தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் ரஜினி தீர்க்கமாக இருக்கிறார். அதேநேரம் பா.ம.க ரஜினிகாந்த் கூட்டணியில் இருக்கும். பா.ம.க, ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.மு.தி.க ஆகியவற்றின் ஆதரவுடன் என்.டி.ஏ-க்காக 2014 மக்களவைத் தேர்தலுக்காக நான் அமைத்ததைப் போல வானவில் போன்ற ஒரு கூட்டணி ரஜினிக்காக இருக்கும்" என்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

"முள்ளை முள்ளால் எடுக்கவே ரஜினியை ஆதரிக்கிறேன்!" - தமிழருவி மணியன் திறந்த மடல்

இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று காலை முதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழருவி மணியனை தொடர்புகொண்டு கேட்டபோது, ``நான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசியல் உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறேன். ஒரு அமைப்பை தலைமையேற்று நடத்திக்கொண்டிருப்பவன். எனவே, அரசியல் உலகில் அடிப்படையில் ஒருவன் எப்படி இயங்க வேண்டும் என்பதை பூரணமாக புரிந்து அதன்படி நடப்பவன் நான். ரஜினிகாந்த் ஒரு கட்சியை தொடங்க இருக்கிறார்.

அந்தக் கட்சியின் பெயர், கொள்கைகள், தொடங்கப்படும் தினம், மாநாடு என எல்லாவற்றையும் ரஜினிதான் வெளிப்படுத்த வேண்டுமே தவிர அவர் சார்பில் மற்றொருவர் வெளிப்படுத்த எந்தவிதமான உரிமையும் கிடையாது. ரஜினியே அதற்கான விளக்கங்களைத் தருவார். அவருக்கான செய்தித்தொடர்பாளர் நான் இல்லை. அவர் தொடங்க இருக்கிற கட்சிக்காரனும் நான் இல்லை.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

என்னைப் பொறுத்தவரை ரஜினியின் உண்மையான நண்பனாக இருக்கிறேன். தமிழக அரசியலில் நல்ல மாற்றம் அவரால் நிகழ வேண்டும் என விரும்புகிறேன். இவை தொடர்பாக என்னிடம் நீங்கள் கேள்விகளை எழுப்புகிறபோது, ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சித் தொடங்கலாம்; ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தலாம்; பா.ம.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்றுதான் நான் சொல்ல முடியும். உறுதியாக சொல்வதற்கும் இப்படி சொல்வதற்கும் இடையில் பெரிய வேற்றுமைகள் உள்ளது. இதை புரிந்துகொள்ள வேண்டும். ரஜினிகாந்த், கட்சித் தொடங்குவதுவரை எந்த ஊடகத்திற்கும் வாய் திறந்து ஒரு வார்த்தைக்கூட சொல்லப்போவதில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ``ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் இன்றைக்கு அரசியல் உலகில் இருக்கும் பலரின் நோக்கமாக இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் இவருடைய வருகையினால் ஆட்சியை இழந்துவிடக்கூடும் என்கிற அச்சத்தில் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும் கனவில் இருப்பவர்கள், இவரால் கனவு கலைந்துவிடுமே என்கிற கலக்கத்தில் இருக்கிறார்கள். ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என்பதை சொல்லும் உரிமையை ரஜினி எனக்கு தந்துள்ளார். தமிழருவி மணியன் விரும்புவதாலோ, ரஜினி விரும்புவதாலோ முதலமைச்சர் ஆகிவிட முடியாது. மக்கள் வாக்களிக்க வேண்டும். ரஜினிகாந்த் நல்லவர், ஊழலற்ற ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றும் கூறினார்.

``ஒரு நடிகரை தலைவராக ஏற்க மாட்டேன்... ஆனால், ரஜினி?!''- தமிழருவி மணியனின் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு