Published:Updated:

``ஓர் இரவு முழுவதும் சிரிக்கவைத்த அந்த மீம்ஸ்!" - தமிழிசை சிறப்புப் பேட்டி

விகடன் டீம்

அரசியலிலிருந்து நான் ஒதுங்கவுமில்லை... யாராலும் ஒதுக்கப்படவுமில்லை. ஆளுநர் பதவி என்பது, ஆக்கபூர்வமான பதவி.

தமிழிசை
தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவி அரசியல் சார்பற்றது என்பதால், பி.ஜே.பி மாநிலத் தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவி ஆகியவற்றை ராஜினாமா செய்துவிட்டார் தமிழிசை. ஆளுநர் ஆவதற்காக ஆளே மாறியிருக்கிறார். எடைக்குறைப்பு, ஹேர் ஸ்ரெயிட்னிங் எனப் பல மாற்றங்கள். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்த தமிழிசை செளந்தரராஜனைச் சந்தித்தோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2lDTMdP

"எந்த அரசியல் நிகழ்வுக்கும் தொடர்ந்து கருத்து கூறிவந்தீர்கள். இனி, அரசியல் பேச முடியாதே?"

(சிரிக்கிறார்) "இதுவும் ஒரு நிலை... அவ்வளவுதான்! திருமணத்துக்குப் பிறகு பல கட்டுப்பாடுகள் இருக்கும். அதற்காக, திருமணமே செய்துகொள்ளாமல் இருக்க முடியுமா? இது ஒரு பருவம். அதுபோல், அரசியலில் இது எனக்கு ஒரு பருவம்."

"அரசியலிலிருந்து உங்களை ஒதுக்கத்தான் இந்தப் பதவி என்று பேச்சு எழுகிறதே?"

தெலுங்கு எனக்குப் புரியும். திருவள்ளூர் மாவட்ட பி.ஜே.பி பொறுப்பாளராக இருந்தபோது, என்னைச் சுற்றிலும் தெலுங்கு சகோதரர்கள் இருந்தார்கள்

"அரசியலிலிருந்து நான் ஒதுங்கவுமில்லை... யாராலும் ஒதுக்கப்படவுமில்லை. ஆளுநர் பதவி என்பது, ஆக்கபூர்வமான பதவி. அதைத்தான் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். என்னால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று நம்பித்தான் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக, ஆளுநர் தலைமையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். இப்போது அந்த மக்கள் பிரதிநிதிகளுக்கே பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்போகிறேன். இதில் எங்கே நான் ஒதுக்கப்பட்டேன்?"

" 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' - இந்த வார்த்தைகளை இனி தமிழிசை வாயால் எப்போது கேட்போம்?"

"தெலங்கானா இனி மலரும். தமிழகத்தில் கட்டமைப்புகளைச் சரிசெய்திருக்கிறோம். கட்சியைப் பலப்படுத்தியிருக்கிறோம். இனி, தொண்டர்களும் நிர்வாகிகளும் பார்த்துக்கொள்வார்கள்."

"மீம்ஸ் மூலமாக உருவக்கேலி செய்கிறார்கள் என வருத்தப்பட்டீர்கள். இப்போது அதே மீம்ஸ் வழியாக வாழ்த்தி வருகிறார்களே?"'

tamilisai
tamilisai

"மீம்ஸ் மாறும் என எனக்குத் தெரியும். அதனால்தான் அமைதியாக இருந்தேன். என் தோற்றத்தைத்தான் அவர்களால் கேலிசெய்ய முடியும். என் ஆற்றலைக் கேலிசெய்ய முடியாது. 'தமிழிசை தெலங்கானாவுக்குப் போவதால், 7,000 மீம்ஸ் கிரியேட்டர்கள் வேலை இழக்கப் போகிறார்கள்' என ஒரு மீம்ஸ் பார்த்தேன். இரவு முழுவதும் இந்த மீம்ஸை நினைத்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். மீம்ஸ் உருவாக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் ஓர் அன்பு வேண்டுகோள், உங்கள் மீம்ஸ், சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கட்டும்."

"தெலுங்கு மொழி கற்கத் தொடங்கிவிட்டீர்களா?"

"சுபகாஞ்சலு...(வாழ்த்துகள்) இதுபோல சில வார்த்தைகளைக் கற்றுள்ளேன். தெலுங்கு எனக்குப் புரியும். திருவள்ளூர் மாவட்ட பி.ஜே.பி பொறுப்பாளராக இருந்தபோது, என்னைச் சுற்றிலும் தெலுங்கு சகோதரர்கள் இருந்தார்கள். விரைவில் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். 10 நாள்களில் தெலுங்கு மொழி கற்பது எப்படி என்ற புத்தகம் வாங்கிவிட்டேன்!" - வெடித்துச் சிரிக்கிறார் தமிழிசை!

> பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை பேசிய தருணம், கணவர் செளந்தரராஜன் மனநிலை, தெலங்கானாவில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஜூனியர் விகடன் இதழுக்கு தமிழிசை அளித்த விரிவான நேர்காணலை வாசிக்க > "ஆளுநர் பதவி ஓய்வுக்கானது அல்ல... ஆய்வுக்கானது!"- தமிழிசையுடன் ஒரு நேர்காணல் https://www.vikatan.com/government-and-politics/politics/tamilisai-talks-about-the-importance-of-the-governor-post

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/