Published:Updated:

`ஸ்டாலினின் நோக்கம் புரிகிறது!'- தமிழிசை இப்படிச் சொல்ல என்ன காரணம்?

சகாயராஜ் மு

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் வழங்கப்பட்டுள்ள 10 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளோடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழிசை
தமிழிசை

ஸ்டேட் வங்கி நடத்திய எழுத்தர் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கட்-ஆப் மதிப்பெண் 28.5 என்று அறிவித்திருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அதில், "ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பா.ஜ.க அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருக்கிறது. 10 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க!" என்று குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவு குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "சகோதரர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் ஒரு பதிவு போட்டிருக்கிறார். வறுமையால் வாடும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுத்தது ஏதோ சமூக நீதிக்கு எதிரானது போலவும், பாரதிய ஜனதா கட்சிக்கு சமூகநீதியைப் பற்றி அக்கறையே இல்லை என்பதைப் போலவும், மோடியின் ஆட்சிக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை தமிழக மக்களின் மத்தியில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இது மிகத் தவறான ஒன்று.

ஏழ்மையில் வாடும் மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்கின்ற சூழ்நிலையில், வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் இப்படிப்பட்ட பதிவுகளை தேடித்தேடி போட்டு வருகிறார். தமிழகத்திற்கு இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்ற காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய பல திட்டங்கள் வந்துக் கொண்டிருக்கிற காலக்கட்டத்தில் வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்தும் அளவிற்கு மக்கள் ஒப்புக்கொண்ட ஒன்றை இவர் ஏதோ சமூக நீதிக்கு எதிராக அரசாங்கம் நடைபெறுவதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வைகோ- திருமாவளவன்
வைகோ- திருமாவளவன்

மத்திய அரசிடமிருந்து நல்ல திட்டங்கள் வருவதை திசை திருப்புவதற்காக ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறேன். தமிழக வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானவர் ஸ்டாலின் என்கிற குற்றச்சாட்டை நான் வைக்கிறேன். தொடர்ந்து இதைப்போன்று பேசிக்கொண்டிருந்தால், மொழியை வைத்துப் பிரச்னை, இனத்தை வைத்துப் பிரச்னை, மதத்தை வைத்துப் பிரச்னை, இன்று இடஒதுக்கீட்டை வைத்துப் பிரச்னை. இதையே செய்துகொண்டிருந்தால் தமிழகம் எப்படி வளர்ச்சிப் பாதைக்குப் போகும். தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கூட்டணி தமிழக வளர்ச்சிக்கு எதிரான கூட்டணி. தமிழகம் அமைதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் கூட்டணி என்பதை பதிவு செய்கிறேன்" என்று குற்றம்சாட்டினார்.