Published:Updated:

`கோயில் பிரசாதம் சாப்பிடுகிறார்; தி.க மாநாட்டுக்குப் போகிறார்!’ - ஸ்டாலினை விமர்சிக்கும் தமிழிசை

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

``கோயில் பிரசாதங்களை சாப்பிடும் ஸ்டாலின், தொண்டர்களை மட்டும் பகுத்தறிவுவாதிகளாக இருக்கவேண்டும் என்கிறார். தி.க மாநாட்டுக்குப் போக ஸ்டாலினுக்கு தார்மிக உரிமையில்லை’’ என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

வேலூரில், பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தி.க மாநாட்டில் தீவிரவாதிகளை போல் பேசுபவர்களின் வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் அத்திவரதரை வந்து பார்த்தனர். தி.க மாநாட்டுக்குப் போக ஸ்டாலினுக்கு தார்மிக உரிமையில்லை. 

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அவரது வீட்டிலிருப்பவர்களும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். ஸ்டாலின் கோயில் பிரசாதம் சாப்பிடுகிறார். தயிர் சாதம், பாபா கோயில் பொங்கலைச் சாப்பிடுவார் என்று அவரின் குடும்பத்தினரே பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால், தி.மு.க தொண்டர்கள் மட்டும் பகுத்தறிவுவாதிகளாக இருக்கவேண்டும் என்கிறார் ஸ்டாலின்.

தி.மு.க தொண்டர்கள் இனியும் அந்தக் கட்சியில் இருக்கவேண்டுமா என்று மறுபரிசீலனை செய்யவேண்டும். இளைஞரணி தலைவருக்கு 42 வயது, ஸ்டாலின் 60 வயது வரை இளைஞரணி தலைவராக இருந்தார். வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று உதயநிதி கோருகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாங்களும் அதில் மாறுபடவில்லை. ஆனால், தி.மு.க-வில் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு மட்டும்தான் முன்னுரிமை இருக்கிறது. தி.க-வும், தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று வீரமணி சொல்கிறார். அவர் கூறியது சரிதான். தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உட்கட்சி பிரச்னையில் என்ன அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. துப்பாக்கிகள் தி.மு.க-விடம்தான் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கின்றன. முதல்வர் சொல்வதைப் போல் தமிழகத்துக்கு பாரமாக இருந்தவர்தான் ப.சிதம்பரம். அவர் ஒருபோதும் தமிழகத்துக்குப் பாலமாக இருந்ததில்லை. 

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாதவர் ப.சிதம்பரம். அவரது குடும்பமே இன்று ஜாமீன் குடும்பமாக மாறியிருக்கிறது. கோவையில் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்.’’ என்றார்.