Published:Updated:

``அப்பா வாழ்த்தியதுதான் ரொம்ப மகிழ்ச்சி!'' - நெகிழும் தமிழிசை

இ.லோகேஷ்வரி

"இது சிபாரிசால் கிடைத்தது அல்ல... உழைப்புக்குக் கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு இந்தப் பொறுப்பை அளித்திருக்கிறார்கள்."

Tamilisai Soundararajan with her father
Tamilisai Soundararajan with her father

தெலங்கானா மாநில கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ளார், பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் பி.ஜே.பி தலைமையகமான கமலாலயம், தொண்டர்கள் கூட்டத்தில் நிரம்பிவழிகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தமிழிசைக்கு வாழ்த்துக்கூற வரிசைகட்டி நிற்கின்றனர்.

தமிழிசை செளந்தரராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டதால், அவர் வகித்துவரும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, பி.ஜே.பி மாநிலத் தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

"ஆண்டவனுக்கும், ஆளுகின்றவருக்கும் எனது மனமார்ந்த நன்றி'' என தனது டிரேட்மார்க் தமிழால் நன்றி தெரிவித்தார். "இது சிபாரிசால் கிடைத்தது அல்ல... உழைப்புக்குக் கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் என்மீது மிகுந்த நம்பிக்கைகொண்டு இந்தப் பொறுப்பை அளித்திருக்கிறார்கள். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைக் கருதுகிறேன்'' எனச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். பி.ஜே.பி தலைவராகப் பொறுப்பேற்று, அதிகளவில் உறுப்பினர்களைக் கட்சியில் இணைத்திருக்கிறார். மருத்துவச் சேவைகள் செய்துவருகிறார். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பதே இவரின் ஆசை. இதைப் பல பேட்டிகளிலும் தெரிவித்துள்ளார். இதனால், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். வெற்றிகரமான தோல்வியைச் சந்தித்தார். துவண்டுபோகாமல் மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரம்காட்டி வந்தார். இந்த நிலையில்தான் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார், தமிழிசை.

காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க எனக் கட்சி பேதம் இல்லாமல் பலரும் தமிழிசைக்கு வாழ்த்து கூறினார்கள். பல கட்சித் தலைவர்கள் நேரிலேயே வந்து வாழ்த்தினர். மருத்துவராக வாழ்க்கையைத் தொடங்கி, இருபது ஆண்டுகள் ஒரு கட்சிக்காக உழைத்திருக்கிறார். காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர், பி.ஜே.பி-யில் இணைந்ததுமுதல் அவரின் தந்தை குமரி அனந்தனுக்கும் இவருக்கும் இடையே சில மனக்கசப்பு எழுந்தது. ஒருகட்டத்தில், இருவரும் பேசிக்கொள்வதில்லை என்ற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழிசை தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதும், தமிழிசைக்கு வாழ்த்து கூறியுள்ளார் குமரி அனந்தன். "தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

தன் அப்பாவிடம் ஆசிபெற்று, அலுவலகம் வந்து தொண்டர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழிசையைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். முகமலர்ச்சியுடன் பேசத்தொடங்கினார் தமிழிசை.

"தெலங்கானா போனாலும் நான் தமிழ்ப் பெண்தான். கடைசிவரை என்னுடைய சேவை இந்த மக்களுக்கு இருக்கும். மருத்துவராக இருந்தாலும், மக்கள் பணி செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுத்தேன். என் பாதைக்காக எனது பாசத்தை விட்டுக்கொடுத்ததும், அப்பாவை விட்டுக்கொடுக்க முன்வந்தது என்பதும் வாழ்க்கையில் ரணமான விஷயம். இதுவரை அப்பா என்னுடன் பேசாமல்தான் இருந்தார். இன்று காலை அப்பாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அப்பாவைச் சந்தித்ததுதான் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆசீர்வதித்து, குங்குமம்வைத்து வாழ்த்து கூறினார். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் அது. 44 லட்சம் உறுப்பினர்களை, எனது பணிக்காலத்தில் கட்சியில் சேர்த்தேன். அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு, என்னால் பதில் சொல்ல முடியாதது கஷ்டம்தான். இத்தனை ஆண்டுகள் உழைத்த நான், கடைசியில் இப்போது உறுப்பினர்கூடக் கிடையாது. மக்களுக்குச் சேவை செய்யும் என்னுடைய பணி என்றும் முடியாது!'' என்றார்.

Tamilisai Soundararajan addressing the Press
Tamilisai Soundararajan addressing the Press

தமிழிசையைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தோம். அங்கிருந்த பி.ஜே.பி தொண்டர்களின் சட்டைப் பாக்கெட்டில் சிரித்துக் கொண்டிருந்தார், தமிழிசை. விரைவில் தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்கவிருக்கும் தமிழிசைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..!