Published:Updated:

`நான் இந்தப் பொறுப்புக்கு வர காமராஜர்தான் காரணம்!'- தமிழிசை

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

``நல்லது செய்பவர்கள் என்றால் இந்தச் சமூகம் அதிகம் விமர்சிக்கும். கறுப்பாக இருந்தால் இன்னும் விமர்சிக்கும்'' தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை வேதனை தெரிவித்தார்.

காமராஜர்
காமராஜர்

``நல்லது செய்பவர்களை விமர்சிக்கும் இந்தச் சமூகம் கறுப்பாக இருப்பவர்களை இன்னும் விமர்சிக்கிறது'' என பா.ஜ.க தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழிசை மற்றும் தலைவர்கள்
தமிழிசை மற்றும் தலைவர்கள்

காமராஜர் பிறந்தநாளையொட்டி விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் காமராஜரின் மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ``வல்லபபாய் படேல் இரும்புமனிதர். காமராஜர் கறுப்புமனிதர். அன்று காமராஜரை தோற்கடித்த நேரத்தில் மக்கள் வருந்தியதுபோல இப்போது சிலரை வெற்றி பெறவைத்தாலும் வருந்துகிறார்கள். சரத்குமாருக்கு பா.ஜ.க பக்கபலமாக இருக்கும்.

காமராஜரை நேரில் சந்தித்திருக்கிறேன். அவரது தொண்டரின் மகள் என்பதால்தான் பா.ஜ.க-வில் இருக்கிறேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பாராட்டியிருப்பார் என காமராஜரைதான் மோடி கூறினார். இந்தியாவிலேயே பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள ஒரே பெண் நான்தான். நான் இந்தப் பொறுப்புக்கு வர காமராஜர்தான் காரணம். தமிழ் என்னைப் பெற்றதால் நான் நன்றாக தமிழ் பேசுகிறேன்.

காமராஜர் சிலை
காமராஜர் சிலை

சூரிய வம்சத்தில் பிறந்த காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி இருப்பதால் இங்கே வந்துள்ளேன். காமராஜர் அரசு ஏழைகளுக்கான அரசு. மீண்டும் அந்த அரசு அமையும் என்பதால் இங்கே வந்துள்ளேன். நல்லது செய்பவர்கள் என்றால் இந்தச் சமூகம் அதிகம் விமர்சிக்கும். கறுப்பாக இருந்தால் இன்னும் விமர்சிக்கும். யாராலும் என் மேல் குறை கூற முடியாது. காமராஜர் இனத்தில் பிறந்த நாம் தோற்பதற்காக பிறந்த இனம் அல்ல; வெல்வதற்காக பிறந்த இனம். நாற்காலியை அல்ல. சக்கர நாற்காலியில் அமர்ந்தால்கூட இங்கே பதவியை விடமாட்டார்கள். ஆனால் காமராஜர் பதவிக்காக வாழவில்லை. இந்தத் தேர்தலில் சற்று கோட்டை விட்டோம். இனி கோட்டையைப் பிடிப்போம். மஞ்சள், சிவப்பு, காவி ஒன்றாக இணைந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதற்கு காமராஜர் ஆசி வழங்குவார்'' என்று கூறினார்.