Published:Updated:

பிரதமர் மோடிக்கு தெலுங்கு மொழியில் வாழ்த்துச் சொன்ன ஆளுநர் தமிழிசை!

``பாரதப் பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

மோடிக்குத் தெலுங்கு மொழியில் தமிழிசை வாழ்த்து
மோடிக்குத் தெலுங்கு மொழியில் தமிழிசை வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இன்று 69-வது பிறந்த நாள். பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள், மோடியின் பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். பிரதமருக்கு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தெலங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தையுடன் தமிழிசை
தந்தையுடன் தமிழிசை

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழிசை, தமிழ் மொழியில், வெளியிட்டுள்ள வாழ்த்தில், ``உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் நலமாக வாழத் திட்டம் தீட்டிய தலைவர். ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் தலைவர். அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். பாரதப் பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல், தெலுங்கு மொழியிலும் பிரதமர் மோடிக்கு தமிழிசை வாழ்த்து கூறியுள்ளார். தெலுங்கு வாழ்த்தில், ``இந்தியாவின் தனித்துவம்வாய்ந்த, சக்திவாய்ந்த பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு, தெலங்கானா மக்கள் சார்பில் வாழ்த்துகள்'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்குப் பத்திரிகையில் தமிழிசை குறித்த கட்டுரை
தெலுங்குப் பத்திரிகையில் தமிழிசை குறித்த கட்டுரை

தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றதிலிருந்தே தெலுங்கு மொழியில் வெளியாகும் பத்திரிகைகளில் தன்னைப் பற்றிவரும் செய்திகளை எடுத்து, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவதை தமிழிசை வழக்கமாகக் கொண்டுள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று மாநில ஆளுநராக உயர்ந்துள்ளதால் தெலுங்குப் பத்திரிகைகளும் தமிழிசை குறித்து அதிகளவில் செய்திகள் வெளியிடுகின்றன. `சாக் ஷி' பத்திரிகை, தமிழிசை டாக்டர் உடையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பெரிய கட்டுரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.