Published:Updated:

20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க வெற்றி... தமிழக சட்டமன்ற எதிர் வரிசை எப்படியிருக்கும்? - ஒரு பார்வை!

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்
பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள்

பல கட்சிகள் பத்தாண்டுகள், இருபதாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது சட்டசபைக்குள் காலடி எடுத்துவைக்கின்றன. அந்தவகையில் ஆளும்கட்சியாக தி.மு.க-வும் எதிர்க்கட்சியாக மற்ற அனைத்துக் கட்சிகளும் இருக்கப்போகின்றன.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் நேற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 கட்சிகள் அங்கம்வகிக்கும் கலர்ஃபுல் சட்டமன்றமாக பதினாறாவது சட்டமன்றம் அமைந்திருக்கிறது .

தமிழக சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடர் நேற்று (10.05.2021) காலை 10 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. முதல் நாளில் புதிதாகச் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து 31 அமைச்சர்கள் எடுத்துக்கொண்டனர். குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான மதிவேந்தன் ஆகிய இருவரும் கொரோனா தொற்றின் காரணமாக பதவியேற்றுக்கொள்ளவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராம், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சின் சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவைக்குழுத் தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், அகர வரிசைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.

இன்று (11.05.2021) 16-வது சட்டசபையின் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் அப்பாவு. துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாததால், இருவரும் ஒருமனதாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த சட்டசபை, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் அடங்கிய சபையாக இருந்தது. ஆனால், இந்தமுறை புதிதாக, பா.ஜ.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள். ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம், கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம்வகிக்கப் போகின்றனர்.

2011 தேர்தலைத் தொடர்ந்து அமைந்த 14-வது சட்டமன்றத்திலும் 13 கட்சிகள் பங்கேற்றன. ஆனால், தற்போது, அதிலும் ஒன்று அதிகரித்து 14 கட்சிகள் பங்கேற்கும் சட்டசபையாக இருக்கப்போகிறது. அதுமட்டுமல்ல, இதில் பல கட்சிகள் பத்தாண்டுகள், இருபதாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது சட்டசபைக்குள் காலடி எடுத்துவைக்கின்றன.

பழனிசாமி
பழனிசாமி

அந்தவகையில் பார்த்தால், பா.ஜ.க உறுப்பினர்கள் கடந்த 2001-க்குப் பிறகு இப்போதுதான் தமிழ்நாட்டு சட்டசபைக்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். கடந்த 2001-ல் நடந்த தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 21 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றிபெற்றது அந்தக் கட்சி. தமிழக பா.ஜ.க-வின் முக்கியப் பிரமுகர் ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டதும் அப்போதுதான். அதைத் தொடர்ந்து, நடந்த 2006, 2011, 2016 ஆண்டுகலில் நடந்த தேர்தல்களில் தனித்தும், சிறிய இயக்கங்களோடு கூட்டணி வைத்தும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், தற்போது அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க 20 இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ.க-வின் சார்பில், கோவை தெற்குத் தொகுதியிலிருந்து வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியிலிருந்து நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலிலிருந்து எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சி தொகுதியிலிருந்து சரஸ்வதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக பா.ஜ.க-வின் சட்டமன்றக்குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் சட்டசபைக்குள்ளேயும் தி.மு.க-வுக்கு எதிராகச் செயல்படும் வாய்ப்பு பா.ஜ.க-வுக்கு இந்தமுறை கிடைத்திருக்கிறது . அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை வரும் காலத்தில் பார்க்கலாம்.

அடுத்ததாக, கடந்த 2011 தேர்தலில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பா.ம.க., பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மீண்டும் சட்டமன்றத்துக்குள் நுழைகிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலான 1991-ல் தொடங்கி 2011 வரை தனித்தோ, கூட்டணியிலோ வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் சென்ற அந்தக் கட்சி, கடந்த 2016 தேர்தலில் ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், இந்தமுறை, அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., ஐந்து இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சேலம் மேற்குத் தொகுதியில் இரா.அருள், பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி தொகுதியில் வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். பா.ம.க-வின் சட்டமன்றக்குழுத் தலைவராக ஜி.கே.மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான் என அறிக்கைகள் மூலம் கடந்த ஐந்தாண்டுகளாகக் குரல் கொடுத்துவந்த பா.ம.க-வுக்கு, உண்மையிலேயே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எந்த அளவுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பா.ம.க
பா.ம.க

தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைந்தாலும், தோழமைக் கட்சியே ஆளும்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்னைகளுக்காக முதல் குரல் எழுவது கம்யூனிஸ்ட்களிடமிருந்துதான். ஆனால், நம் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, தமிழக சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட்களே இல்லாத சட்டமன்றமாகக் கடந்த ஆட்சியில்தான் இருந்தது. 1952-ல் நடந்த முதல் தேர்தலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அடுத்தடுத்த தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து மட்டுமல்லாமல், தனித்துப் போட்டியிட்டும் சட்டசபைக்குள் நுழைந்திருக்கின்றனர் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள்.

ஆனால், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 இடங்களிலும் போட்டியிட்டபோதும் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், அந்தக் குறையைப் போக்கும்விதமாக இந்தமுறை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரண்டு பேரும் வெற்றிபெற்றிருக்கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட மாரிமுத்து, தளி தொகுதியில் போட்டியிட்ட ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்ட நாகை மாலியும், கந்தர்வகோட்டையில் போட்டியிட்ட சின்னத்துரையும் வெற்றிபெற்றுள்ளனர். அதனால், எப்போதும்போல தோழர்களின் குரல் இந்தமுறையும் உரக்க ஒலிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

ஆளும்கட்சியான தி.மு.க தோழமைக் கட்சியாக இருந்தாலும் சட்டமன்றத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிதான். அந்தவகையில் 18 சட்டமன்ற உறுப்பினர்களோடு, அ.தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக அதிகமான உறுப்பினர்களைப் பெற்ற எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கப்போகிறது. கடந்த 2006-ம் ஆண்டு 34 உறுப்பினர்களுடன் சட்டசபையை அலங்கரித்த காங்கிரஸ் கட்சி, 2011-ல் ஐந்து இடங்களிலும், 2016-ல் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், இந்தமுறை 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தோழமைக் கட்சியாக இருந்தாலும் அடிப்படைக் கொள்கை சார்ந்து காங்கிரஸுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. அப்படி, காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளை உரசிப் பார்க்கும் வகையில், ஆளும் தி.மு.க-வின் நடவடிக்கைகள் இருந்தால் நிச்சயமாகச் சட்டமன்றத்துக்குள் அனல் பறக்க வாய்ப்பிருக்கிறது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க வெற்றி... தமிழக சட்டமன்ற எதிர் வரிசை எப்படியிருக்கும்? - ஒரு பார்வை!

அதேபோல, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். 2001-ல் தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதன்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். தொடர்ந்து, 2006-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஒன்பது இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது அந்தக் கட்சி. ஆனால், 2011, 2016 தேர்தல்களில் அந்தக் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், இந்தமுறை, தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு, நான்கு இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது அந்தக் கட்சி. அவற்றில் இரண்டு பொதுத்தொகுதிகள்.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், செய்யூர் தொகுதியில் வெற்றிபெற்ற பனையூர் பாபு, திருப்போரூர் தொகுதியில் வெற்றிபெற்ற எஸ்.எஸ்.பாலாஜி, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற சிந்தனைச் செல்வன், நாகப்பட்டினம் தொகுதியில் வெற்றிபெற்ற ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சட்டமன்றத்துக்குள் செல்லவிருக்கின்றனர். தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின்போதே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டபோதும், ``தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டால், எதிர்காலத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச ஒவ்வொரு முறையும் என்ன பேசுகிறோம் என தி.மு.க-விடம் அனுமதி வாங்கித்தான் பேச வேண்டியிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் மிகுந்த சிரமத்துக்கிடையிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டோம்'' என்கிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால், தோழமைக் கட்சியாகவே இருந்தாலும் ஆளும்கட்சிக்கு எதிராகப் பிரச்னைகளின் அடிப்படையில் (Issue based) சிறுத்தைகளின் சாட்டையும் சுழலும் என்றே தெரிகிறது.

விடுதலைச் சிறுத்தைகள்
விடுதலைச் சிறுத்தைகள்

மேற்கண்ட கட்சிகளைத் தவிர, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றில், புரட்சி பாரதம் இரட்டை இலைச் சின்னத்திலும், மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலும் நின்று வெற்றி பெற்றிருக்கின்றன. அவர்களால், எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கு எதிராகத் தங்களின் குரல்களைப் பதிவு செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

அதேபோல, கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிபெற்றிருக்கிறார் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி. அவரின் செயல்பாடு பெரும்பாலும் அ.தி.மு.க-வின் செயல்பாட்டை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக 65 உறுப்பினர்களுடன் அ.தி.மு.க இருக்கப்போகிறது. கடந்த காலங்களில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்திருந்தாலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அந்தக் கட்சி எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படப்போவது இதுதான் முதன்முறை. அதனால், அவர் அதிரடியாகச் செயல்படுவாரா, அடக்கி வாசிப்பாரா என்பது இனிவரும் நாள்களில்தான் தெரியும்.

ஆக, ஆளும்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையும் இந்தமுறை பலமாகவும் திராவிடம், தமிழ்த்தேசியம், அம்பேத்கரியம், இந்தியத் தேசியம், இந்த்துத்துவம் என பலக் கொள்கைகளை உடையவர்களாலும் அமையப்பெற்றிருக்கிறது. அதனால், காரசார விவாதங்களுக்கும், கருத்து மோதல்களுக்கும் பஞ்சமில்லாத மன்றமாகத்தான் இந்தச் சட்டமன்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு