Published:Updated:

ஆளுநர் உரை: 7 பேர் விடுதலை இடம்பெறவில்லை! - தி.மு.க-வினர் வெளிநடப்பு

தி.மு.க-வினர் வெளிநடப்பு
தி.மு.க-வினர் வெளிநடப்பு

`ஆளுநர் உரையில் ஏழு பேர் விடுதலை குறித்த தகவல் எதுவும் இடம் பெறவில்லை. அது குறித்து ஆளுநர் பேசாததால், வெளிநடப்பு செய்தோம்’ - ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆளுநர் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்னதாக, தி.மு.க-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி ஆளுநர் கோரிக்கைவைத்தார். எனினும், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க-வினர் வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த தி.மு.க-வினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஸ்டாலின், ``ஆளுநர் உரையில் ஏழு பேர் விடுதலை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை. அது குறித்து ஆளுநர் பேசாததால் வெளிநடப்பு செய்தோம். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தி.மு.க முழுமையாகப் புறக்கணிக்கும்” என்றார்.

தனது உரையைத் தொடங்கிய ஆளுநர், ``இது ஒரு பேரிடர்க் காலம். கொரோனா பெருந்தொற்றை தமிழக அரசு சிறப்பாகக் கையாண்டது. கொரோனா பரிசோதனை முறையாக செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அறிவித்ததைப் பாராட்டுகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடு பாராட்டத்தக்கது. விரைவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் காவல்துறை தயார்நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்” என்றார்.

சட்டப்பேரவை தேர்தல்: தி.மு.க-வில் 8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு அமைப்பு! #NowAtVikatan

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, வேதா நிலையம் நினைவு இல்லமாக்கப்பட்டது, ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்தது உள்ளிட்டவற்றை ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். தமிழ் மொழியை வளர்ப்பது, அரசின் குறிக்கோளாக இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார் ஆளுநர். `தமிழகம் தொடர்ந்து மூன்று முறை நல்லாளுமைக்கான விருதைப் பெற்றிருக்கிறது. இது முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தைக் காட்டுகிறது’ எனக் குறிப்பிட்டார் ஆளுநர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தொடர்ந்து பேசிய ஆளுநர், ``மத்திய அரசின் உதவிக்காகக் காத்திருக்காமல், தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறது. நிவர், புரெவி புயலல் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு