Published:Updated:

`மத்திய அரசு இந்தித் திணிப்பு செய்தால் தமிழக பாஜக எதிர்க்கும்’-அண்ணாமலை கருத்தும் திமுக ரியாக்‌ஷனும்

அண்ணாமலை

``வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் அண்ணாமலை இந்தியை எதிர்ப்போம் என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார்.”

`மத்திய அரசு இந்தித் திணிப்பு செய்தால் தமிழக பாஜக எதிர்க்கும்’-அண்ணாமலை கருத்தும் திமுக ரியாக்‌ஷனும்

``வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் அண்ணாமலை இந்தியை எதிர்ப்போம் என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார்.”

Published:Updated:
அண்ணாமலை

டெல்லியில் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல் இணைப்பு மொழியாக இருக்கும் ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இந்தச் சூழலில், அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்குழுவின் 11-வது அறிக்கை கடந்த மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில், "கல்வி நிலையங்களில் தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே இனி ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்.

அமித் ஷா
அமித் ஷா

ஆங்கில வழிக் கல்வியை இந்தி வழிக்கல்வியாக மாற்ற வேண்டும். நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கும், ஐஐடி., ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

இந்தி மொழியைக் கட்டாயமாக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, இந்தி பேசாத மாநிலங்களில்  இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார். இதேபோல், கேரளா, தெலங்கானா மாநிலங்களும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  இதேபோல், திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து சென்னைக்குத் திரும்பிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. மூன்று மொழியைக் கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்விக் கொள்கையாக இருக்கிறது. இந்தித் திணிப்பை மத்திய அரசு செய்தால் அதைத் தமிழக பா.ஜ.க எதிர்க்கும்.  காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. காங்கிரஸ் இந்தி மொழியைத் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. ஆனால், அப்போது எதுவும் பேசவில்லை. திமுக-வினர் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தி சொல்லிக்கொடுக்கப்படுகிறது" என்றார். 

மத்திய அரசு நேரடியாக இந்தியைத் திணித்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவரும் வேளையில், `அண்ணாமலையின் இந்தி எதிர்ப்பு கருத்து வெற்றுப் பேச்சு மட்டுமே, அவர்களால் இந்தித் திணிப்பை எதிர்க்க முடியாது’ என்று தி.மு.கவினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இது குறித்து, தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி கூறுகையில், ``அலுவல் மொழிச்சட்டம் இந்தி மட்டுமே என்று கூறியபோதே நாங்கள் அதை எதிர்த்து போராடி 1968-ல் இந்தியிலிருந்து விதிவிலக்கு வாங்கினோம். விதிவிலக்கு வாங்கியபோதிலும் அதிலிருந்து விடுதலை இல்லை. இது போன்ற வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் அண்ணாமலை இந்தியை எதிர்ப்போம் என்று பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார். பல்கலைக்கழக கேள்வித்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கப்பட வேண்டும். இந்தியை வேண்டாமென்று சொல்லவில்லை. உங்களுடைய மாநிலத்தில் இந்தியை வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய மாநிலத்தில் தமிழை நாங்கள் வைத்துக்கொள்கிறோம்.

இராஜீவ் காந்தி
இராஜீவ் காந்தி

இதற்கிடையே ஆங்கிலம் ஓர் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். உத்தரப்பிரதேசமும், பீகாரும் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் தாய்மொழியை மறந்து இந்தியைப் படித்ததே. தாய்மொழியை அழித்ததால் இந்தி படிக்கத் திணறுகிறார்கள். இந்தியைத் திணித்ததால் ராஜஸ்தானி, குஜராத்தி மொழிகள் அழிந்துவிட்டன. இது போன்ற சிக்கல்களை வைத்துக்கொண்டு இந்தியைத் திணிப்போம் என்று சொல்வது வளர்ந்துவருகிற எங்கள் மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக இருக்கிறது. இதை முதலில் அண்ணாமலை புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.